Advertisement

லவகுசா பகுதி-16

அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமம்மா? உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது எங்கள் கடமையல்லவா? தாய் ஆசைப்படும் பொருள் எதுவாகவும் இருக்கட்டுமே! அதை தமையன்மார் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது புத்திர தர்மம். கேளுங்கள் அம்மா, என்றனர். ராமாயணம் போன்ற இதிகாசங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ராமன் இருந்தாரா இல்லையா? அவர் பாலம் கட்டினாரா கட்டவில்லையா? என்பது போன்ற விமர்சனங்களை செய்வதை விட, ராமகதையில் வரும் நல்ல கருத்துக்களை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணி மிக மிக முக்கியம். தாய்க்குரிய கடமைகளை பிள்ளைகள் செய்ய வேண்டும், தந்தையின் சொல்லை மதித்து நடக்க வேண்டும், ஒருத்திக்கு ஒருவனாக வாழ வேண்டும் என்பது போன்ற உயர்ந்த தத்துவங்களை ராமசீதா, லவகுசா பாத்திரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு தள்ளத்துடிக்கும் இளைஞர்கள் லவகுசர் என்ற சிறுவர்களின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நன்மையைக் கற்றுத்தருவதே இதிகாசங்களின் வேலையாகும். லவகுசர் தன் முகக்குறிப்பைக் கொண்டே, தன் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட சீதாதேவி மிகவும் மகிழ்ந்து, என் செல்வங்களே! அம்மா, லலிதா தேவி விரதம் அனுஷ்டிக்கப் போகிறேன். ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபட வேண்டும். அதற்கான சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஆயிரம் தாமரைப்பூக்கள் தினமும் தேவைப்படுகிறது. அதனை பறிப்பது குறித்து தான் யோசிக்கிறேன், என்றாள். அப்போது குசன் தாயிடம், அம்மா! இது சாதாரண செயல். நொடிப்பொழுதில் மலர்களை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். லவன் உங்களுக்கு பாதுகாப்பாக இங்கே இருக்கட்டும். நான் போய் பறித்து வருகிறேன், சொல்லி விட்டு காட்டுக்குள் உள்ள தடாகங்களை நோக்கிச் சென்றான். தாயின் அருகில் இருந்த லவனை சீதாதேவி, நீ போய் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடு என அனுப்பி விட்டாள். லவன் குதிரை கட்டப்பட்டிருந்த இடத்திற்கு நண்பர்களுடன் வந்து சேர்ந்தான். எல்லோருமே வால்மீகியின் குருகுலத்து குழந்தைகள். எல்லாருமாக ஒருமித்த கருத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அயோத்தியில் இருந்து புறப்பட்டு வந்த லட்சுமணன், குதிரை இருக்குமிடம் வந்து சேர்ந்தான். குதிரை கட்டப்பட்டிருப்பதையும் குழந்தைகள் சிலர் அதனைச் சுற்றி ஓடிவந்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ட லட்சுமணன், இங்கே வீரர்கள் யாரையும் காணவில்லையே! இந்த பிஞ்சுகளிடமா சத்ருக்கனன் தோற்றிருப்பான்! நம்ப முடியவில்லையே! எதற்கும் விசாரித்துப் பார்ப்போம் என நினைத்த லட்சுமணன், செல்வங்களே! இந்தக் குதிரையை இங்கே கட்டி வைத்தது யார்? என்றான். ஏன்...நான் தான் கட்டி வைத்தேன். நீங்கள் யார்? என்று கேட்டு முன்வந்தான் லவன். அந்தக் குழந்தையைக் கண்டதும் ஏனோ ஒரு மரியாதை பொங்கியது லட்சுமணனின் உள்ளத்தில்! தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா! குழந்தாய்! இதென்ன விளையாட்டு! இது ஸ்ரீராமனின் அஸ்வமேத யாகக்குதிரை! இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? உனக்கு விளையாட வேறு குதிரைகள் கிடைக்கவில்லையா? இதோ! நான் ஏறி வந்திருக்கும் இந்தக் குதிரை உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தது. இதைக் கூட வைத்துக் கொள். அதை அவிழ்த்துக் கொண்டு போகிறேன், என்று குதிரையை லட்சுமணன் நெருங்கவும், பாய்ந்து வந்த அம்பு ஒன்று, லட்சுமணனின் காலடியில் குத்திட்டு நின்றது. மகனே! ஏன் என்னை அம்பால் அடிக்க முயன்றாய்? விபரீதத்தை சந்திக்காதே. குதிரையை அவிழ்த்து விடு. இல்லாவிட்டால்... என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தான். வீரனே! முதலில் நீர் யார் என்பதைச் சொல்லும்? என்றதும், நான் ஸ்ரீராமமூர்த்தியின் இளவல்...என் பெயர் லட்சுமணன், என்றதும் கலகலவென சிரித்தான் லவன். அடடா...மாவீரன் லட்சுமணனா! இதென்ன இலங்கை என்று நினைத்தாயா! அல்லது இந்திரஜித்தைப் போல உன்னிடம் சிக்கி மாளும் வீரர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நினைத்து வந்தாயா? குதிரையை அவிழ்க்க அனுமதிக்க மாட்டேன். அந்த ராமன், தன் மனைவியை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடத்தும் யாகம், சாஸ்திரத்துக்கு புறம்பானது. அதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டான் இந்த லவன். என் சகோதரன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். நீயாக ஓடி விடுகிறாயா? இல்லை..அவனும், நானும் இணைந்து விடும் பாணங்களுக்கு பலியாகப் போகிறாயா? என வீராவேசமாகப் பேசினான். லட்சுமணன் இயற்கையாகவே கோபக்காரன். அவன் நாராயணனைத் தாங்கும் அனந்தன் என்ற பாம்பின் அம்சமல்லவா! பாம்பைத் தொட்டால் என்னாகும்? இவன் லட்சுமணனை சீண்டிப் பார்க்கவே, கோபம் கொப்பளித்து விட்டது. மேலும், தன் அண்ணன் ராமனைப் பழித்துப் பேசியதால், அந்தச் சிறுவனை தட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, அருகில் வந்தான். மீண்டும் பறந்து வந்த அம்பு அவனை நகர விடாமல் தடுத்தது. லட்சுமணனும் பதிலுக்கு அம்பு விட ஆக்ரோஷமான சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் லட்சுமணன் தோற்றுப் போகும் நிலைக்கு வந்து விட்டான். அவனது படை வீரர்கள் லவனின் அம்புகளில் கட்டுண்டு கிடந்தனர். வேறு வழியின்றி அவன் நாகாஸ்திரம் ஒன்றை லவன் மீது எய்ய, அது அவனைக் கட்டிப் போட்டது. லவன் மயக்கமடைந்தான். உடன் வந்த சிறுவர்கள், இது கண்டு அலறி ஓடிய போது, தாமரை மலர்களை பறித்து அன்னையிடம் ஒப்படைத்து விட்டு, குசன் வந்து கொண்டிருந்தான்.

Advertisement
 
Advertisement