Advertisement

உண்மை விளக்கம் பகுதி - 6

பதி

இறைவன் வேறாய் நிற்றல்

27. குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு
பொன்றாத நும் உருவம் போதியீர் நின்று அருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில்
நண்ணிஅறி வித்திடுவோம் நாம்

பதவுரை

குன்றா அருளாலே குறைவுபடாத அருள்கொண்டு
என் வடிவு ஆன்ம இயல்பை
கூறினீர் அடியேனுக்கு உணர்த்தினீர்.
பொன்றாத இனி, அழிவில்லாத
நும் உருவம் உமது (இறைவனது) இயல்பை
போதியீர் உணர்த்தியருள்க.
(இங்ஙனம் மாணாக்கர் வேண்ட, ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.)
அருக்கன் சூரியன்
நின்று (தன் ஒளியால் கண்ணிற் கலந்து) கண்ணுக்கு வேறாக நின்று
கண்ணுக்கு அக்கண் பொருள்களை அறியும் படி
காட்டுமாப் போல் விளக்கிக் காட்டுவது போல
நாம் யாம்
உனது அறிவில் உன்னறிவில்
நண்ணி பொருந்தி (வேறாய் நின்று)
அறிவித்திடுவோம் நீ பிற பொருள்களை அறியும்படி செய்து வருவோம்.

பொழிப்புரை

பேரருளாலே என் உண்மையியல்பை எளியேன் அறியும்படி உணர்த்தினீர்கள். இனி, அழிவில்லாத தூய அறிவு வடிவாய் விளங்கும் நும் இயல்பை அடியேன் தெளியும்படி உணர்த்தியருள்க என்று மாணாக்கர் வேண்டுகிறார். ஆசிரியர் பின்வருமாறு உணர்த்துகிறார். சூரியவொளி கண்ணொளியோடு கலந்து வேறாய் நின்று அக்கண்ணொளியை விளக்கிப் பொருள்களைக் காணும்படி செய்கிறது. அதுபோல யாம் உன் அறிவில் பொருந்தி, வேறாய் நின்று, நீ பொருள்களை அறிந்து வரும்படி செய்து வருகின்றோம் என்பதை உணர்வாயாக.

விளக்கம்

கண்ணொளியின் தன்மை

கண்ணொளி தானே தனித்து நின்று பொருள்களைக் காணமாட்டாது. தனியே காணவல்லதாயின் இருட்டில் இருக்கும் பொழுதும் அது பொருளைக் காணுதல் வேண்டும். அது கூடாமையால் கண்ணொளி தானே காணமாட்டாது என்பது விளங்கும். வேறோர் ஒளியின் துணையைப் பெற்றே கண்ணொளி காணும் நிலைமையைப் பெறும்.

சூரியவொளி வேறாய் இருந்து காட்டுதல்

பகலில் கண்ணுக்குத் துணை செய்வது சூரியவொளி அது கண்ணொளியோடு பொருந்தி நின்று பொருளைக் காணும்படி செய்கிறது. இதனால், பொருளைக் காணும் காட்சியில் கண்ணொளியும் சூரியவொளியும் என்ற இரண்டு ஒளிகளும் தம்முள் கலந்துள்ளன என்பது புலனாகும். அவ்வாறு கலந்தாலும் அவை ஒன்றாய்ப் போய் விடுவதில்லை. கண்ணொளி கண்ணொளியாகவே நிற்கும். சூரியவொளி சூரியவொளியாகவே நிற்கும். எனவே கண்ணொளியோடு கலந்திருந்தாலும் சூரியவொளி வேறாக இருந்து காட்டக் கண்ணொளி பொருளைக் காணுவதாகும்.

கண் போல இருப்பது உயிர்

இதுவரை கூறியது உவமை. இதனைப் பொருளோடு பொருத்திப் பார்ப்போம் உயிர் எதனையும் தானே அறியமாட்டாது. இறைவன் தன்னோடு இயைந்து நின்று அறிவிக்கவே அது அறிவதாகும் இவ்வகையில் சூரியனைப் போன்றவன் இறைவன். கண்ணைப் போன்று உள்ளது உயிர்.

இறைவன் வேறாய் நின்று உணர்த்தி வருதல்

இறைவன் உயிரில் இரண்டறக் கலந்திருக்கின்றான். இறைவனும் உயிரும் சேர்ந்துள்ள அக்கலப்பு நிலை பிரித்தறிய வாராது. அவ்வாறு பிரிப்பின்றிக் கலந்திருந்தாலும், ஒன்று மற்றொன்றாகி விடுவதில்லை. உயிர் உயிர்தான். இறைவன் இறைவன் தான். எனவே உயிரோடு கலந்து பொருந்தியிருந்தாலும் இறைவன் வேறாக இருந்து அறிவிக்க, உயிர் எப்பொருளையும் அறிவதாகும். இறைவன் உயிர்க்கு வேறாகியும், கலந்து நின்றும் உணர்த்தி வருகிறான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது. ஞானாசிரியர் இறைவனே யாதலின், அவர் வாக்காகிய நாம் என்பது இறைவனைக் குறித்ததாயிற்று. அடுத்து வரும் இரண்டு செய்யுட்களிலும் இவ்வாறே கொள்ள வேண்டும்.

இறைவன் ஒன்றாய் நிற்றல்

28. அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்துஅறியும் ஐம்பொறிகள்
இன்றி அறியா இவைஎன்ன நின்றதுபோல்
ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன்அறிவில்
மேவாமல் மேவி நாமே,

பதவுரை

அன்றியும் கேள் மேலும் கூறுவோம். கேட்பாயாக.
ஆன்மாவால் ஆன்மாவின் உதவியினாலேயே
ஐம்பொறிகள் அறிவுப் பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும்
ஆய்ந்து அறியும் தத்தம் புலன்களை அறிவனவாம்.
இன்றி ஆன்மாவின் துணையில்லாமல்
அறியா அவை தாமே அறியமாட்டா.
இவையென்ன நின்றது போல் ஆன்மா இப்பொறிகளை இடங்கொண்டு பிரிப்பின்றிக் கலந்திருந்து அவை புலன்களை அறியுமாறு செய்தும், தான் காணப்படாமல் அவ்வப் பொறியாகவே நின்றதுபோல
நாம் யாமும் (இறைவனும்)
உன் அறிவில் உனது அறிவினுள்
மேவாமல் மேவி பொருந்தாமல் பொருந்தி (நீயாகவே நின்று)
ஓவாமல் இடையறாமல்
உன்னை உணர்த்துவோம் உன்னறிவை விளக்கி வருவோம்.

பொழிப்புரை

இன்னும் கூறுவோம், கேள், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உயிரின் துணையினாலேயே தம் தம் புலன்களை அறிகின்றன. அவை புலன்களை அறிவதற்கு உயிர் அவற்றில் பொருந்தி அவையேயாய் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அவ்வாறு உயிர் அப்பொறிகளோடு ஒற்றுமைப்பட்டு நிற்கவில்லை என்றால் அப்பொறிகள் ஏதொன்றையும் அறியமாட்டா. இங்ஙனம் ஐம்பொறிகள் அறிவதற்கு உயிர் அப்பொறிகளை இடங்கொண்டு அப்பொறிகளேயாய் நிற்றல் போல, யாம் உனது அறிவினுள் பொருந்தாமல் பொருந்தி, நீயேயாய் நின்று உன்னை உணரும்படி செய்துவருவோம்.

விளக்கம்

ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாதல்

ஐம்பொறிகள் தாமாக அறியா. இது எப்படித் தெரிகிறது? உயிர் நீங்கிய உடம்பில் கண், காது முதலிய பொறிகள் கெடாமல் நல்ல நிலையில் இருந்தாலும் அவை அறிதலாகிய தொழிலைச் செய்வதில்லை. அவை தாமே அறியா என்பதும், உயிர் தம்மோடு பொருந்தி நின்றபோதே அவை அறியும் என்பதும் இதனால் விளங்கும். அந்த ஐம்பொறிகளின் நிலையில்தான் உயிரும் உள்ளது. உயிரும் தானாக அறிவதில்லை. உயிருக்கு உயிராக இறைவன் பொருந்தி நின்று அறிவிக்கும்போதே உயிர் யாதொன்றையும் அறியும் வன்மையைப் பெறுகிறது. எவ்வாறு ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றனவோ, அவ்வாறே உயிரும் இறைவனால் அறிகின்றது. இவ்வகையில் ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாகின்றன.

மேவாமல் மேவுதல்

ஒரு பொருள் தன் தன்மையைச் சிறிதும் இழக்காமல் மற்றொரு பொருளோடு பொருந்தி ஒன்றுபட்டு அப்பொருளேயாய் நிற்றலே மேவாமல் மேவுதலாகும். இறைவன் உயிரோடு பொருந்தித் தான் சிறிதும் தோன்றாமல் உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும் படியாக அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றான். அவ்வாறு நின்றாலும் அவன் தன்னியல்பில் சிறிதும் மாறுவதில்லை. எதிலும் தோயாமல் நிற்பவன் அவன். இந்நிலையே மேவாமல் மேவுதல் என்பது. உயிரின் நிலையோ இதனின் வேறுபட்டது. உயிரறிவு எப்பொருளைப் பொருந்தினாலும் அப்பொருளின் தன்மையைப் பெற்று அதன் வண்ணமாய்த்திரிந்து நிற்கும். இதுபற்றிய விளக்கத்தை முன்னே கூறியிருக்கிறோம் (செய்யுள் 24) இறைவன் உயிரில் பொருந்தி, உயிரேயாய் நின்று உணர்த்தி வருகிறான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

இறைவன் உடனாய் நிற்றல்

29. அக்கரங்கட்கு எல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் எக்கண்ணும்
நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவுஎன்று
நல்ஆகமம் ஓதும் நாடு

பதவுரை

அக்கரங்கட்கு எல்லாம் எல்லா எழுத்துக்களிலும்
அகர உயிர் அ என்னும் உயிரெழுத்து
நின்றாற் போல் இயைந்து அவற்றை இயக்கி நின்றாற் போல
மிக்க உயிர்க்கு எண்ணற்ற உயிர்களிடத்தில்
உயிராய் இயைந்து அவற்றை இயக்கும் உயிராய்
மேவினோம் யாம் பொருந்தியுள்ளோம்.
எக்கண்ணும் எவ்விடத்தும்
நில்லா விடத்து யாம் உடன் நின்று அறிவிக்காத போது
உயிர்க்கு அவ்வுயிர்களுக்கு
நில்லாது அறிவு என்று அறிவு விளங்காது என்று
நல் ஆகமம் குற்றமற்ற சிவாகமங்கள்
ஓதும் கூறும்.
நாடு இதனை நீ சிந்திப்பாயாக.

பொழிப்புரை

அகரம் ஆகிய உயிர் ஏனைய எழுத்துக்கள் எல்லாவற்றிலும் கலந்து உடனாய் நின்று அவற்றை இயக்கும். அதுபோல யாமும் எல்லா உயிர்களிடத்தும் உயிர்க்குயிராய் உடனிருந்து அவற்றை இயக்குவோம். அவ்வாறு யாம் எல்லா இடத்தும் நிறைந்து நின்று அறிவித்தாலன்றி உயிர்களுக்கு அறிவு நிகழாது என்று ஆகமங்கள் கூறும். அதனை ஆராய்ந்து அறிக.

விளக்கம்

அகர உயிரின் முதன்மை

ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத்திறந்த அளவிலேயே உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு சில முயற்சிகளும் செய்யப் பிறப்பவையாகும். வாயைத் திறத்தல் ஆகிய அம்முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம்முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர வொலியோடு கூடியே பிற முயற்சிகளில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும், அகரவொலியின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும் எனவே எழுத்துக்களுக்கெல்லாம் அடி நிலையாய் இருப்பது அகர வுயிரேயாகும். அதுபோல இறைவனே எப்பொருளின் இயக்கத்திற்கும் முதலாய் நிற்கின்றான்.

அகர உயிரும் நிகரில் இறையும்

எழுத்துக்கள் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் என இருவகைப்படும். அவ்விரு வகை எழுத்துக்களிலும் அகரவுயிர் கலந்திருக்கிறது. உலகம் சித்தும் சடமும் என இருவகைப்படும். சித்து என்பது அறிவுடைய உயிர்களின் தொகுதியைக் குறிக்கும். சடம் என்பது அறிவற்ற பொருள்களின் தொகுதியைக் குறிக்கும். இவ்விரண்டும் சேர்ந்ததே உலகம். சித்தும் சடமும் ஆகிய இவ்விரண்டிலும் இறைவன் கலந்து உடனிருக்கின்றான். எழுத்துக்களின் இயக்கத்திற்கு அகர வுயிர் இன்றியமையாதது. அதுபோலச் சித்தும் சடமுமாகிய உலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமையாதவன். இறைவன் சித்தாகிய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றின் அறிவை விளங்கச் செய்கின்றான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

Advertisement
 
Advertisement