Advertisement

தைப்பூசம் என்றால் என்ன?

தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால், பழநியில் மட்டும் முருகன் கோயிலில் இவ்விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா!பழநிமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், அம்பாள் சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி உள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலுள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாள் கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில், தைப்பூசத்திருநாள் முருகனுக்குரியதாக மாறி விட்டது. தற்போதும் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்கிறார்.ஆனாலும், பக்தர்கள் மலை மேல் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர்.

Advertisement
 
Advertisement