Advertisement

திருமலை தீர்த்தங்கள்!

கபில தீர்த்தம்: திருப்பதி மலையடிவாரத்தில் (அலிபிரி) உள்ள தீர்த்தம் கபிலதீர்த்தம். இதற்கு ஆழ்வார் தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. மாதவன் என்னும் அந்தணன் பெண்பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, இங்கு வந்தான். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான். நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தான். கபிலமுனிவர் இங்கு வந்து சிவனருள் பெற்றதால், இப்பெயர் பெற்றது. தீர்த்தக்கரையில் காமாட்சி சமேத கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. இப்போது இத்தீர்த்தம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. மழைக்காலங்களில் சிறிது தண்ணீர் வரும்.

பாபவிநாச தீர்த்தம்: பத்ரன் என்ற அந்தணன் தன் மனைவியருடன் வறுமையில் வாழ்ந்து வந்தான். அந்தணன் மனைவியருள் ஒருத்தி தன் தந்தையின் ஆலோசனைப்படி, பத்ரனை பாபவிநாச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு வரச்சொன்னாள். அவ்விதமே நீராடி தன் வறுமை நீங்கப்பெற்றான். இத்தீர்த்தக் கரையில்பவானிஅம்மன்கோயில் அமைந்துள்ளது. இத்தீர்த்தங்கள் நீர்த்தாரைகளாக ஐந்து இடங்களில் விழும்படி ஏற்பாடு செய்துள்ளனர். இழந்த சொத்தை மீண்டும் பெற இத்தீர்த்தத்தில் நீராடி பவானி கங்கை அம்மனை வழிபாடு செய்யவேண்டும் என்பது ஐதீகம்.

ஆகாச கங்கை தீர்த்தம்: கேசவபட்டர் என்பவர், ஒருநாள் தன் தந்தையின் சிரார்த்த நாளில் வீட்டிற்கு வந்த அந்தணருக்கு உணவளித்து தட்சணையும் தந்து வழியனுப்பினார். இதன்பிறகு, அவர் அவலட்சண வடிவை அடைந்தார். இதற்கு காரணம் தெரியாமல் தவித்தபோது, அகத்தியரிஷி அங்கு வந்தார். அவரிடம் நடந்த விபரத்தை சொல்லி வருந்தினார். குழந்தை இல்லாத அந்தணரைக் கொண்டு பிதுர்தர்ப்பணம் செய்ததால் குரூர வடிவம் பெறுவார்கள் என்று சொன்ன அகத்தியர். இதற்குப் பரிகாரமாக, திருமலையிலுள்ள ஆகாச கங்கையில் நீராடினால் மீண்டும் பழையவடிவம் பெறலாம் என்றார். கேசவபட்டரும் அவ்வாறே செய்து பலன் பெற்றார். பாபவிநாச தீர்த்தம், ஆகாசகங்கை தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில்(பாவாஜி சொக்கட் டான் விளையாடிய இடம்) மூன்று இடங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இப்பகுதிகளுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. போவதற்கும், வருவதற்குமாக சேர்த்து ஒரு நபருக்கு டிக்கெட் ரூ.15. லேபாட்சி பஸ் ஸ்டாப்பில் இருந்து இப்பகுதிகளுக்கு பஸ்சில் செல்லலாம். திருப்பதி பத்மாவதி தாயாரின் தந்தை ஆகாசராஜனின் பெயர் இந்த தீர்த்தத்துக்கு வைக்கப்பட் டதாகவும் சொல்வர்.

Advertisement
 
Advertisement