Advertisement

சதுர்த்தி விழா கொண்டாட விநாயகர் சிலைகள் தயார்!

கன்னிவாடி: சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கென விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் கன்னிவாடியில் மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர்சதுர்த்தி விழா ஆக., 29 ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகள் மும்முரமாக மேற்கொண்டுள்ளன. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பகுதிகளில் நிறுவுவதற்கான சிலைகள், இந்து முன்னணி சார்பில் கன்னிவாடியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: திண்டுக்கல் மாநகர், ஒன்றியம், சாணார்பட்டி, நத்தம், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள், கிழக்கு மாவட்டத்தில் உள்ளன. இப்பகுதிகளில், 550 சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிலைகள் தயாரிப்பு, கன்னிவாடியில் நடக்கிறது. கடலூர், புதுச்சேரி, ஆந்திராவில் இருந்து, காகிதக்கூழால் தயாரான உருவ உறுப்புகள் கொண்டு வரப்பட்டன.கிழங்குமாவு பசை மூலம் செயற்கைப்பொருட்கள் கலக்காத நிலையில், சிலைகள் தயாரிப்பு நடக்கிறது. மூன்றரை, ஐந்தரை, ஏழரை, எட்டு, ஒன்பது, 11, 13 அடி உயரங்களில், மான், மயில், சிங்கம், ரிஷப வாகனங்களுடன் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலை தயாரிப்பை மட்டுமே தொழிலாகக்கொண்டுள்ள பொறியாளர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆக., 18 க்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றியங்களுக்கு அனுப்பப்படும். ஆக., 29 ல் பிரதிஷ்டை செய்யப்படும், என்றார்.

Advertisement
 
Advertisement