Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஏமாற்றி வரும் வாடகைதாரர்கள்!

திருவண்ணாமலை அருணாசலேசுவரரை ஏமாற்றி வரும், 88 வாடகைதாரர்கள் குறித்த பட்டியலை, அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. வாடகை நிலுவையைச் செலுத்த, ஏழு நாட்கள் கெடு விதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ளஅருணாசலேசுவரர் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. இதில், திருவண்ணாமலை மட்டும்என்றில்லாமல், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், பக்தர்கள் தானமாகக் கொடுத்த நிலங்கள் உள்ளன.இவ்வகையில், சென்னை, அடையாறு, ஊரூர் கிராமத்தில் பழைய சர்வே எண்: 41க்கு உட்பட்ட நிலம், அருணாசலேசுவரர் கோவிலுக்கு சொந்தமானது.

மோசடி: இந்த நிலத்தில், 88 பேர் வாடகைதாரர்களாக பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கோவில்நிர்வாகத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறாமல், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) மாநகராட்சி ஆகியவற்றிடம் எவ்வித அனுமதி யும் பெறாமல் அடுக்கு மாடிக் கட்டடங்களை கட்டி வருகின்றனர்.இந்த கட்டடங்களை, வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக, இவர்கள் உள்வாடகைக்கு விட்டு சட்ட விரோத மாக பல லட்சம் ரூபாய் வருமானம் பார்த்து வருகின்றனர். சிலர், இந்த நிலத்தை வேறு நபர்களுக்கு ஆவண பதிவு செய்யாமலேயே உட்பிரிவு செய்து விற்பனையும் செய்துள்ளனர்.

அறிவிப்பு:ஆனால், இவர்கள், இந்த நிலத்துக்கு கோவில் நிர்வாகம் நிர்ணயித்த நியாயமான வாடகை தொகையை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.சென்னையில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த நிலத்தை, வணிக நோக்கத்தில் பயன்படுத்த நினைத்து இருந்தால், கோவில் நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தும், வாடகைதாரர்கள் கோவில் நிர்வாகத்தின் இந்த நோக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக, வாடகைதாரர்களுக்கு அருணாசலேசுவரர் கோவில் நிர்வாகம் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏமாற்றி வருபவர்கள்:’அக்னி சொரூபமான அண்ணாமலையாரை ஏமாற்றி வருபவர்கள்’ என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், 88 வாடகைதாரர்களின் பெயர், முகவரி, நிலத்தின் அளவு, மாத வாடகை, நிலுவை வைக்கப்பட்டுள்ள மொத்த தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.மொத்தம் உள்ள, 88 வாடகைதாரர்களில், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் நிலுவை வைத்திருப்பவர்கள், 41 பேர்; இதில், ஏழு பேர், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளனர்.குறிப்பாக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில், 2.69 கோடி ரூபாய் வாடகை நிலுவை இருப்பதாக, அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை: இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஏழு நாட்களுக்குள் நிலுவை தொகை செலுத்தப்படாவிட்டால், மறு அறிவிப்பின்றி வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.அத்துடன், 1959ம் ஆண்டு அறநிலைய சட்டத்தின், 78வது பிரிவின் கீழ், இங்குள்ள கட்டடங்கள் ஆக்கிரமிப்பாக அறிவிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
 
Advertisement