Advertisement

உத்தவ சத்குணர்!

தாரூர் என்ற ஊரில் உத்தவசத்குணர் வாழ்ந்து வந்தார். இவர் சிறந்த ராம பக்தர். இவர் ஒரு நாள் பெரிதாக பந்தல் எல்லாம் போட்டு மிக விமர்சையாக ராமபூஜை செய்து வந்தார். இவரது பக்தியை பரிகசித்த சில முரடர்கள் கற்களை சரமாரியாக உத்தவசத்குணர் பூஜை நடத்திய இடத்தின் மீதும், பந்தலின் மீதும் கற்களை வீசி திரண்டிருந்த பக்தர் கூட்டத்திற்கும் பூஜைக்கும் இடைஞ்சல்கள் செய்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய உத்தவசத்குணர். ராமபிரானிடம் முறையிட்டு கண்ணீர் வடித்தார். பக்தரின் வேண்டுதலைக் கேட்ட ஸ்ரீராமர் அநுமரை அவ்விடத்திற்கு அனுப்பினார்.

பெரிய வானரமாக வந்த அனுமன் அந்த துஷ்டர்களை விரட்டி அடித்து உத்தவ சத்குணர் பூஜை இனிது நடைபெற உதவினார். முரடர்கள் நவாபிடம் சென்று உத்தவசத்குணர் குரங்கினைக் கொண்டு தங்களை தண்டித்ததாக முறையிட்டனர். உடனே நவாப் தம் தூதர்களை அனுப்பி பார்த்து வரச் சொன்னபோது அவர் உத்தவசத்குணர் பூஜையை புகழ்ந்து, இந்த துஷ்டர்கள் செய்த அக்கிரமங்களை நவாப்பிடம் முறையிட்டனர். நவாப் அந்த முரடர்களை சிறையிலடைத்து, சகல வைபோகங்களோடு உத்தவசத்குணர் பூஜை தடங்கலின்றி நடக்க உதவியதோடு. அவருக்கு வேண்டிய நிதிகளை தந்து, தங்கள் முறைப்படி ஸ்ரீராம பூஜையை வழிபட்டார்.

இதனால் பெரிதும் மகிழ்ந்த உத்தவ சத்குணர் அரசே தவறு செய்த அந்த முரடர்களுக்கும் புத்தி சொல்லி விடுவிக்க வேண்டுமென்றார். மேலும் மக்களின் வேண்டுதலுக்கிணங்க வானரமாய் வந்த மாருதி, மக்களோடு அமர்ந்து ஸ்ரீராமபூஜையைக் கண்டுகளித்தார். இந்த நிகழ்ச்சியினால் ராமா ராமா என்றாலே நம் பாவத்தை தீர்க்கும் ஸ்ரீராமர் நமக்கொரு துன்பம் என்றால் மாருதியை அனுப்பி நம் துன்பத்தை நீக்குவது திண்ணம் என்பது தெளிவாகிறது. ஸ்ரீராம், ஜெயராம் ஜெய ஜெய ராம் என்று 21 முறை சொன்னாலே அனுமன் நம் இன்னல்களைத் தீர்க்க ஓடோடி வருவான் என்பது உண்மை; திண்ணமும் ஆகும். எங்கெங்கு ரகுநாத கீர்த்தணைகள் நடக்கிறதோ அங்கங்கு ஸ்ரீராமரின் தூதுவன் அனுமன் இருப்பார் என்பதை இந்நிகழ்ச்சி நிருபிக்கிறது. எனவே நாம் ராம நாம சங்கீர்த்தனம் செய்தாலே அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பதனை உத்தவசத்குணர் நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிகிறது.

Advertisement
 
Advertisement