Advertisement

பட்டீஸ்வரம் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவான முத்துப்பந்தல் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து, தேர் இழுத்தனர். சோழவளநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தல வரிசையில் 23வது திருத்தலமாக உள்ளது பட்டீஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புடையதும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமாகும். திருஞானசம்பந்தர் தம்முடைய அடியார் திருக்கூட்டத்தினரோடு, காவிரி தென்கரை தலங்களான திருவலஞ்சுழி, திருசக்திமுற்றம் ஆகிய கோயிலை தரிச்சித்து வரும்போது நண்பகல் நேரம், வெயில் காலம், தரை நல்ல சூடு. ஆனால் திருக்கூட்டத்தினரின் பாதம் நோகாமல் இருக்க ஈசன் திருவுள்ளம் கொண்டு, தம் பூதகணங்களை ஏவி திருக்கூட்டத்தினருக்கு முத்துபந்தல் ஏந்த, அவர்கள் வரும் அழகை கண்டு ரசித்த தலமாகும். பட்டீஸ்வரம் கோவிலில் எட்டு திருக்கரங்களோடு புன்னகை தவளும் சாந்த சொரூபீனியாய் துர்க்கையம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இவ்விழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்தாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் வீதிவுலா வந்தனர். 10ம் தேதி திருக்கல்யாணமும், 11 ம் தேதி வெண்ணெய்த்தாழி திருவீதிவுலாவும், நேற்று காலை ஞானம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய தேரோட்டமும்நடந்தது. தேரோட்டத்தினை உதவி ஆணையர் தென்னரசு, செயல் அலுவலர் இளையராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளையும் சுற்றிவந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. இன்று (13ம் தேதி) பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், மதியம் திருமலைராஜன் ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

Advertisement
 
Advertisement