Advertisement

புத்தாண்டு வைகுண்ட ஏகாதசியை கொண்டாட திருமலை தயாராகிறது!

*புத்தாண்டு அன்று தர்ம தரிசனம் மட்டுமே
*கூடுதலாக இரண்டு லட்சம் லட்டுகள் ஸ்டாக்
*பக்தர்கள் தங்க 11 தற்காலிக கூடாரங்கள்
*24 மணிநேரமும் மலைப்பாதை திறந்திருக்கும்.
*வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு காபி,டீ,பால் இலவசம்


திருமலையில் வீற்றிருக்கும் சீனிவாசப்பெருமாளை பக்தர்கள் வருடம் முழுவதும் தரிசித்தாலும் வருடத்தில் இரண்டு முறை அவசியம் பார்த்தேயாக வேண்டும் என்று எண்ணுவர்.

ஒன்று ஆங்கில புத்தாண்டு தினத்தன்று.அன்றைய தினம் பெருமாளை பார்த்துவிட்டு போனால் போதும் ஆண்டு முழுவதும் அருளும் பொருளும் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கிவழியும் என்பது நம்பிக்கை.இதன் காரணமாக அனைத்து பிரபலங்களும் அதிகாரிகளும் ஆரம்பித்து சாதாரண பக்தர்கள் வரை வருடப்பிறப்பன்று திருமலையில் குவிந்துவிடுவர்.

அதே போல ஆண்டுக்கு ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் வைகுண்டவாசல் வழியாக வந்துவிட்டால் சொர்க்கம் நிச்சயம் என்று நம்பப்படுவதால் இந்த சொர்கவாசல் வழியாக வருவதற்கு விரும்புவர்.

பெருமாள் கோவில்கள் அனைத்திலுமே வைகுண்ட வாசல் இருந்தாலும் திருமலை சீனிவாசப்பெருமாள் கோவிலின் வைகுண்ட வாசல் மிகவும் விசேஷம் என்பதால் வருடப்பிறப்பிற்கு வருவது போலவே வைகுண்ட ஏகாதசி அன்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள்.இந்த வருடம் வருடப்பிறப்பும் வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வருகிறது என்பதால் வழக்கமாக வருடப்பிறப்பிற்கு வரக்கூடிய பக்தர்களைப் போல இரண்டு மடங்கு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் நிர்வாக அதிகாரி டி.சாம்பசிவ ராவ் தலைமையில் புதுவருடப்பிறப்பு நாளை பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி பெருமாளை தரிசிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருமலையில் கடுமையான குளிர் நிலவுவதால் 11 இடங்களில் தற்காலிக கூடாரம் அமைக்கப்படுகிறது இதன் மூலம் 40 ஆயிரம் பக்தர்கள் கோவிலுள் உள்ளேயும் 7 ஆயிரம் பக்தர்கள் கோவிலின் வெளியேயும் குளிர் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பார்கள்.

31 ந்தேதி முதலே இரண்டாயிரம் கூடுதல் போலீசார் திருமலையின் பாதுகாப்பை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள்.வரிசை குறைந்த பட்சம் 3 கிலோமீட்டர் துாரத்திற்கு இருக்கும் என்பதால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு இலவசமாக டீ,காபி,பால் மற்றும் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.வருடப்பிறப்பன்று அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் அன்று அதிகாலை 2 மணியில் இருந்து 5 மணிவரை விஐபி தரிசனம்.அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் உள்ள பிரபலங்கள் அனைவரும் இந்த நேரத்தில் தரிசத்து முடித்துவிடவேண்டும்.அதன்பிறகு காலை 5 மணிமுதல் அன்று இரவு 12 மணிவரை தர்ம தரிசனம் மட்டுமே.அன்றைய தினம் நடந்துவருபவர்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன் வழங்கப்பட மாட்டாது அவர்களும் வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்யவேண்டும்.

இதே போல மறுநாள் துவதசி பண்டிகையும் சிறப்பாக கோவிலில் கொண்டாடப்படும்.அன்றைய தினம் தர்ம தரிசனம் மற்றும் 300 ரூபாய் டிக்கெட் கட்டண தரிசனம் உண்டு.டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.

வருடத்தில் இந்த இரண்டு நாள் மட்டும் வைகுண்டவாசல் திறந்து இருக்கும் என்பதாலும், 16 வருடத்திற்கு பிறகு இப்படி புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வருவதால் பக்தர்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Advertisement