Advertisement

ராமானுஜர் பகுதி-8

அவர் வேறு யாருமல்ல. திருக்கச்சி நம்பி தான். அவரைக் கண்டதும், ராமானுஜரின் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரதராஜா! குருவின்றி தவித்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல குருவைக் காட்டி விட்டாய். இவரையே என் குருவாய் ஏற்பேன், என மனதிற்குள் சொல்லியபடியே, அவரை பணிவோடு வரவேற்றார். அவரை அமரச்சொன்னார். இவர் மரியாதை நிமித்தமாக நின்று கொண்டார். ஐயா! தாங்கள் என் வீடு தேடி வந்தது நான் செய்த பெரும்பாக்கியம். நான் அறிவில் மிகவும் குறைந்தவன். குழந்தையின் செயல்பாடுகளை ஒத்தே எனது செயல்களும் அமைந்திருக்கிறது, என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்தார் ராமானுஜர். ராமானுஜரே! நீயா இப்படி சொல்வது? நீ பிராமணன். கல்வியில் உன்னை விட வல்லவர் யார் இருக்க முடியும்? குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஆனதும், மன்னன் மகளிடம் ஒட்டியிருந்த தீய சக்தியை ஓட்டி, இம்மண்டலமெங்கும் உன் புகழ் விரிந்து கிடப்பதையும் தெரியாதவர் யார் இருக்கிறார்கள்? என்ன காரணத்தால் உன்னை நீயே குறைத்துப் பேச வேண்டும்? என்றார் திருக்கச்சி நம்பி. சுவாமி! தாங்கள் அப்படி சொல்லாதீர்கள். யாதவப்பிரகாச பண்டிதர் என்னை வகுப்பிலிருந்து நிறுத்தி விட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். குருவின்றி தனி மரமாய் நிற்கும் எனக்கு ஒரு குரு வேண்டும். அது தாங்களாக இருக்க வேண்டும் என்பது என் அவா, என்றார் ராமானுஜர். ராமானுஜா! என்ன பேச்சு இது. நான் ஜாதியில் வேளாளன். படிப்பு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அரிச்சுவடியே அறியாத ஒருவன் எப்படி மற்றொருவனுக்கு குருவாக முடியும்? வயதில் பெரியவன் என்ற தகுதியைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது? உன்னிடமிருக்கும் அறிவுக்கு நீயே பலருக்கு குருவாக இருக்கலாம். சாஸ்திர அறிவு எனக்கு இல்லவே இல்லை. பேரருள் புரியும் வரதராஜப்பெருமாளுக்கு தொண்டு செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன் நான். எம்பெருமான் கோடை காலத்தில் வெப்பத்தால் சிரமப்படுவார். அதற்காக வெட்டிவேர் பறித்து ஆலவட்டம் செய்து அவருக்கு விசிறுவேன். அன்று மலர்ந்த பூக்களை யாராவது வைத்திருந்தால், அதை பிச்சை எடுத்தோ, பணம் கொடுத்து பெற்றோ அவருக்கு அணிவிப்பேன். கனிவகைகளை வாங்கி அவருக்கு படைப்பேன். இதைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி நான். என்னைப் போய் உனக்கு குருவாக இருக்கச் சொல்கிறாயே. வேண்டுமானால் கல்வியில் உயர்ந்த உன்னிடம் நான் வேண்டுமானால் சிஷ்யனாக இருந்து கொள்கிறேன், என்றார் நம்பி உருக்கத்துடன். ராமானுஜர் அவ்வுரை கேட்டு நெகிழ்ந்தார். சுவாமி! இத்தகைய தகுதி போதாதா தங்களுக்கு. இறைவனிடம் யார் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறாரோ, அவரே குருவாக இருக்க தகுதி படைத்தவர். அவ்வகையில் நீங்கள் என்னை சீடனாக ஏற்கத்தான் வேண்டும், என சற்று அடம்பிடிப்பது போலவே பேசினார் ராமானுஜர். யோசித்த திருக்கச்சிநம்பியின் கால்களில் தடாலென விழுந்தார் ராமானுஜர். அவரது கண்களில் இருந்து ஆறாய் நீர் பெருகி ஓடியது. திருக்கச்சிநம்பி அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். ராமானுஜா! இறைவன் சித்தம் அதுவானால் அதைத் தடுக்க வல்லவர் யார்? இன்றுமுதல் நீ நம் ஊர் எல்லையிலுள்ள சாலக்கிணறுக்கு போ. அங்கிருந்து சுவாமியின் திருவாராதனத்துக்கு அபிஷேக நீர் கொண்டு வா. மற்றதை பின்னால் பார்ப்போம், என்றார். ராமானுஜரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். இங்கே நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீரங்கம் சென்றடைந்த வைணவ மகாதலைவர் ஆளவந்தாருக்கு நோய் ஏற்பட்டது. அவரைச் சுற்றி சீடர்கள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். நோய் முற்றிப்போய் இருந்தாலும், நாராயணனின் நாமம் மட்டும் அவரது வாயிலிருந்து அகலவில்லை. ஆளவந்தாரின் சீடர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும். பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோரெல்லாம் அவரது சீடர்கள் தான். அவர்கள் ஆளவந்தார் தன் உடலை விட்டு நீங்கப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆளவந்தாரைப் போலவே நூறுக்கு மேற்பட்ட வயதுடைய திருவரங்கப்பெருமாளரையரை அங்கே அழைத்து வந்தனர். அவரைக் கொண்டு ஆளவந்தாரிடம் சில கேள்விகள் கேட்டனர். அரையர் தன் கேள்விகளை ஆரம்பித்தார். சுவாமி! நாராயணப் பெருமானை நாம் கண்ணால் காண முடியாது. அப்படியிருக்க, அவனுக்கு எப்படி ஒருவன் தொண்டு செய்வது? என்றார். ஆளவந்தார் புன்னகை பூத்தார். அரையரே! இது மிகவும் எளிது. பெருமாளின் அடியவர்களுக்கு செய்யும் தொண்டு, பெருமாளுக்கு செய்யும் தொண்டாகும். இதில் ஜாதி, பேதமெல்லாம் பார்க்கக்கூடாது. திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும் பெருமாளின் தீவிர தொண்டர். அந்த அடியவருக்கு நீங்கள் சேவை செய்யலாம். காஞ்சியில் திருக்கச்சி நம்பி வேளாளர் குலத்தவராயினும், பெருமாளே அவர் மூலம் தான் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். அவர்களைப் போன்ற தொண்டருக்கு தொண்டராய் இருப்பதே இறைவனுக்கு செய்யும் பணியாகும். என்னைப் பொறுத்தவரை திருப்பாணாழ்வாரே என்னை இந்த உலக வாழ்விலிருந்து மீட்டுச் செல்பவராக இருப்பார், என்றார். அப்படியானால், தாங்கள் இவ்வுலக வாழ்வை விரைவில் நீத்து விட முடிவு செய்து விட்டீர்களா? என உருக்கத்துடன் கேட்டார் அரையர். ஐயா! தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்த அற்பக் காரணத்துக்காக வருந்தக்கூடாது, என்றார் ஆளவந்தார். ஆளவந்தார் உடலை நீக்கப்போகிறார் என்பதை அறிந்து பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் துடித்துப் போனார்கள். அவர் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, ஆளவந்தாரின் உயிர் பிரிந்த அடுத்த கணமே தாங்களும் இறந்துவிடுவது என முடிவு செய்தார்கள். தற்கொலை செய்தாவது இறந்து விட வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.

Advertisement
 
Advertisement