Advertisement

யார் இந்த நீளா தேவி?

ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சகிதராய் திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் (மெத்தையில்) எழுந்தருளி இந்த உலகை ரட்சித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியை எல்லோருக்கும் தெரியும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று ஆன பின் நாம் அந்தத் திருமகளின் தயவைத்தானே நாடியாக வேண்டும்? ஆகவே இந்துக்கள் அனைவரும் இந்த லக்ஷ்மியை நன்கு அறிவர்.

அடுத்ததாக பூதேவியையும் எல்லோரும் அறிவோம். அவளே பூமித் தாய். நம்மை எல்லாம் தாங்கிக் கொண்டிருப்பவள். ஒரு சமயம் இவள் கடலுக்கடியில் அரக்கனுக்குப் பயந்து ஒளிந்திருந்தபோது எம்பெருமான் வராக அவதாரம் எடுத்து இவளைக் காப்பாற்றியிருக்கிறார்.

அப்படி என்றால் அந்த நீளாதேவி யார்?

அவளும் எம்பெருமானின் பத்தினிகளில் ஒருவர் என்று மேலெழுந்தவாரியாகக் கூறி விடலாம். ஆனால் உண்மையில் அவள் யார்? அவள் புகழென்ன? அவள் எப்படி நமக்கு அருள் புரிகிறாள்? என்பது பலருக்குத் தெரியாது. ஒரு சமயம் எம்பெருமான் திருப்பாற்கடலில் யோக நித்திரையில் இருந்தபோது ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவிகளுக்குள் விவாதம் எழுந்தது. மூவரில் உயர்ந்தவர் யார்? என்று விவாதம் கடுமையாக நடந்தது. ஸ்ரீதேவியைச் சார்ந்தவர்கள் லக்ஷ்மியே சிறந்தவள்; அவளே இந்த உலகத்திலுள்ள செல்வங்களுக்கெல்லாம் தலைவி, அவளே நம் எல்லோருக்கும் அம்மா. பெருமாளுக்கு மிக்க விருப்பமானவள் அவளே. அவளுடன் இணைந்திருப்பதாலேயே பெருமாளுக்குப் பெருமை. அதனாலேயே பெருமாளை ஸ்ரீபதி. ஸ்ரீநிவாஸன், ஸ்ரீநிகேதன் என்றெல்லாம் அழைக்கிறோம். எவன் ஒருவன் மீது இவள் கடாக்ஷம் படுகிறதோ அவன் அன்றே பெரும் செல்வந்தன் ஆகிறான். வேதங்களும் இவளையே போற்றிப் புகழ்கின்றன. என்றெல்லாம் ஸ்ரீதேவியைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசினார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பூதேவியைச் சேர்ந்தவர்கள் எங்கள் தாயே இவர்கள் மூவரில் சிறந்தவர். இந்த உலகத்திற்கு ஆதாரமானவளே இவள்தான். அவளே மிகப் பொறுமையுடன் இந்த உலகம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருந்தாள். விஷ்ணுவிற்கு அவளிடமே அன்பு அதிகம். இந்த உலகமே நமக்கு உறைவிடம், உணவு, துணிமணிகளை அளிக்கிறது. அவள் அருள் இல்லையென்றால் மக்கள் எப்படி உயிர் வாழ முடியும்? பெருமாள் எங்கள் தலைவியையே பிரளயத்திலிருந்த காப்பாற்றினார். மேலும் அவர் வாமன அவதாரம் எடுத்தபோது மாவலி மன்னரிடம் மூன்றடி நிலத்தைத்தான் கேட்டாரே தவிர. மூன்று கழஞ்சு பொன் நகைகளைக் கேட்கவில்லை. தாரணி சர்வம் சத்ரா என்றெல்லாம் அழைக்கப்படும் எங்கள் தலைவியே மூவருள் சிறந்தவள் என்று கூறினர்.

அதுவரை பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த நீளாதேவியைச் சேர்ந்தவர்கள். பேசி முடித்து விட்டீர்களா? எங்கள் தலைவியின் பெருமையை நாங்கள் ஒன்றும் தலைவியாகக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்கள் இரண்டு தலைவிகளே நன்கறிவர். வேதங்களும் அவள் ரச ரூபமானவள் என்று அவளைப் புகழ்கின்றன. வேதங்கள் பெருமாளை ரஸோவைசஹா அதாவது நீருக்கு ஆதாரமாக இருப்பவன் என்று புகழ்கின்றன. அவள் தண்ணீராகக் காணப்படுகிறாள். அவளே தண்ணீருக்கு அதிஷ்டான தேவதை. எம்பெருமான் இவளிடமே உலகைப் படைக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். அதாவது நீரிலிருந்துதான் உலகம் (பூமி) தோன்றியது. அதன்பிறகு தானே செல்வத்திற்கு அங்கே வேலை? ஆக எங்கள் தலைவியின்றி பூதேவியும் ஸ்ரீதேவியும் செயல்பட முடியாதே!

தண்ணீரை நாரம் என்பர். பெருமாள் எங்கள் நீளாதேவியின் மடியில்தான் சயனித்திருக்கிறார். அதாவது நீரின் மீது சயனித்திருப்பதால்தான் அவருக்கு நாராயணன் என்ற பெயரே வந்தது. நீளாசூக்தம் எங்கள் தலைவியின் பெருமையையும் புகழையும் அழகாகக் கூறுகிறது. எனக் கூறி வாதிட்டனர். அந்த நீளாதேவி தான் சமுத்ரத்தாய் நமக்கு நீரைப் பொழிபவள். அவள் இல்லையேல் நமக்கு மழை இல்லை. மழையிருந்தால்தான் பயிர்கள் விளையும் பூமி செழிக்கும் உயிர்கள் வாழ முடியும். ஆகவே இந்த நீளாதேவியைப் பற்றிய நீளாஸுக்தத்தை நாம் தினமும் சொல்லி வந்தாலே போதும். நமக்குத் தேவையான மழை பெய்யும் என்பது நிச்சயம். ஸ்ரீதேவி இந்த மண்ணில் அவதாரம் செய்திருக்கிறாள். பூதேவியும் அவதாரம் செய்திருக்கிறாள். ஆனால் நீளாதேவி அவதாரம் செய்திருக்கிறாளா?

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் இராமாவதாரத்தையும். க்ருஷ்ணாவதாரத்தையும் நாம் புகழ்வோம். அதிலும் க்ருஷ்ணாவதாரத்துக்கே ஏற்றம் அதிகம். கண்ணன் குழந்தையாக இருந்தபோது செய்த லீலைகளோ, பூதனை போன்ற அரக்கர்களை வதம் செய்ததோ, கோவர்த்தனகிரியைத் தாங்கி ஆயர்களைக் காத்ததோ, சிசுபாலன், கம்சன் போன்றவர்களை அழித்ததோ, கீதோபதேசம் செய்ததோ கூட அவனுக்குப் பெருமையைச் சேர்க்கும் விஷயங்களில். க்ருஷ்ணாவதாரத்தின் பெருமையே இந்த மூன்று தேவிகளும் இந்த மண்ணுலகில் அவதரித்து எம்பெருமானை மணந்து கொண்டதுதான் காரணம் எனலாம். விதர்ப்ப தேசத்தை ஆண்டு வந்த பீஷ்மகன் என்ற மன்னனுக்கு ருக்மி, ருக்மகேசன், ருக்மபாஹு, ருக்மன், ருக்மமாலி என்ற ஐந்து பிள்ளைகளும் ருக்மணி என்ற பெண்ணும் உண்டு. அவனைக் காண வரும் பெரியவர்கள் கிருஷ்ணனின் வீர தீர பராக்ரமங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது அருகில் இருக்கும் ருக்மணி அவற்றைக் கேட்டு தன்னை அறியாமலேயே கண்ணன் மீது காதல் வயப்பட்டாள்.

கண்ணனும், ருக்மணியின் அழகு. பண்பு, அறிவு ஆகியவற்றைப் பற்றிக் கேள்வியுற்று அவளை மணந்து கொள்ள விரும்பினான். ருக்மணியின் பெற்றோருக்கு இந்த சம்பந்தத்தில் பூரண சம்மதம். ஆனால் அந்தத் திருமணத்திற்கு ஒரு முட்டுக் கட்டையாக அவள் அண்ணன் ருக்மியே இருந்தான். அவன் தனக்கு இதில் சம்மதமில்லையென்றும் தன் நண்பனான சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனுக்கே தன் தங்கையை மணம் முடித்து வைக்க வேண்டுமென்றும் தீவிரமாக இருந்தான். ருக்மியின் எண்ணத்தை அவன் தந்தையாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ருக்மி தன் தங்கையின் திருமண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யத் தொடங்கினான். விஷயத்தை அறிந்த ருக்மணி பதறினாள். தன் திருமணச்செய்தியை ஓர் அந்தணன் மூலம் கண்ணனுக்குச் சொல்லி அனுப்பினாள். அதாவது கண்ணன் உடனே வந்து என்னை மணக்க வில்லையென்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சொல்லி அனுப்பினாள். அந்தணன் மூலம் விஷயத்தைக் கேள்வியுற்ற கண்ணன். தேரில் ஏறி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த குண்டினபுத்தை அடைந்தான். குலவழக்கப்படி திருமணத்திற்கு முன்பு அம்பிகையைத் தொழ சேடிகளுடன் வந்த ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கொண்டு சென்றான். செய்தி கேட்ட ருக்மி தன் படைகளுடன் கண்ணனின் தேரைத் துரத்தி வர, கண்ணன் எய்த பாணங்களை எதிர்க்க முடியாமல் தோற்றுத் திரும்பினான். துவார கையை அடைந்த கண்ணன் ருக்மணியை மணந்தான். இந்த ருக்மணிதான் ஸ்ரீதேவியின் அம்சம் என்பது எல்லோரும் அறிந்ததே.

ஸத்ராஜித் என்பவன் துவாரகையில் வசித்து வந்தான். அவன் சூரிய பகவானின் உபாசகன். அவன் பக்திக்கு மகிழ்ந்த சூர்ய பகவான் அவனுக்கு ஸயமந்தகமணி என்ற ஓர் அழகிய அபூர்வ ரத்தினத்தை அன்பளிப்பாகத் தந்தான். அந்த மணி இருக்கும் இடம் சுபிட்சமாக இருக்கும். அதனால் அந்த மணியை உக்ரஸேன மன்னனுக்குத் தரும்படி கண்ணன் கேட்க, ஸத்ராஜித் கொடுக்க மறுத்துவிட்டான். ஸத்ராஜித்தன் தம்பியான ப்ரசேனன் ஒருநாள் அந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று மணியை எடுத்துச் சென்றது. அந்தச் சிங்கத்தைக் கொன்று ஜாம்பவான் அந்த மணியைத் தன் பாலகனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தான். ப்ரசேனனைக் கொன்று அந்த மணியைக் கண்ணன் தான் அபகரித்திருப்பான் என்று ஸத்ராஜித் நம்பினான். கொலை பழி தன் மீது விழுந்ததால் அதனைப் போக்க கண்ணன் காட்டில் தேடிக் கொண்டு வர, ஒரு குகை வாசலில் ஒரு குழந்தை அதை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்தச் சிறுவனை நெருங்க, அதைக் கண்ட ஜாம்பவன் கண்ணனுடன் போர் புரிந்தான். இருபத்தியெட்டு நாட்கள் நடந்த போரில் ஜாம்பவான் தோற்று முடிவில் தன் மகள் ஜாம்பவதியுடன் சேர்த்து அந்த மணியைக் கண்ணனுக்கே அளித்தான். அந்த ஸ்யமந்தகமணியை, கண்ணன் திரும்ப ஸத்ராஜித்திடமே கொண்டு வந்து கொடுத்து தன் மீது விழுந்த பழியைப் போக்கி கொண்டான். தான் செய்த பிழையை உணர்ந்த ஸத்ராஜித். தன் மகளான சத்ய பாமாவைக் கண்ணனுக்கே மணம் முடித்து வைத்தான். அந்த சத்யபாமாவே, பூதேவியின் அவதாரம்.

நீளாதேவியின் அவதாரமாகப் பிறந்தவள் யார்?

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! என்கிறாள் ஆண்டாள் தம் திருப்பாவையில் நந்தகோபனின் மகனாக வளர்ந்தவன் கண்ணன். நந்தகோபன் மருமகள் என்றால் கண்ணனின் மனைவி என்றுதானே பொருள்! அது மட்டுமா? கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் என்று நப்பின்னையின் பெருமையைக் கூறித் துயில் எழுப்புகிறாள் ஆண்டாள் தம் திருப்பாவையில். கண்ணனின் பெருமைகளைக் கூறப் புகுந்த ஆண்டாள் ருக்மணியைப் பற்றியோ, சத்யபாமையைப் பற்றியோ கூறவில்லை. நப்பின்னையைத் தான் குறிப்பிடுகிறாள். ஆயர்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியே ஆண்டாள் கூறுகிறாள். நந்தகோபன் மருமகள் என்று குறுப்பிடுகிறாள். கண்ணனின் தாய் யசோதைக்கு கும்பன் என்ற சகோதரன் இருந்தான். அவன் மகளே இந்த நப்பின்னை. அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய நப்பின்னை பருவ வயதை அடைந்தாள். தன் அத்தை மகனான கண்ணனையே மணக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். முறைப் பையனான கண்ணனை முறைப்படி மணக்க ஆசைப்பட்டத்தில் தவறில்லையென்றாலும் ஒரு தடை இருந்தது. அந்த கும்பனே சிறந்த வீரன். அதுமட்டுமல்ல. அவன் ஏழு எருதுகளைச் (காளைகளை) செழிப்பாக வளர்த்து வந்தான். உண்டு மட்டுமே வளர்ந்து வந்ததால் அந்தக் காளைகள் முரட்டுக் காளைகளாக வளர்ந்தன. அந்த நாள்களில் மன்னர்கள் தன் மகளை, சிறந்த வீரனுக்கே மணம் முடிக்க ஆசைப்படுவார்கள். மகளுக்குச் சுயம்வரம் என அறிவித்து அந்நாளில் அதற்காகச் சில போட்டிகள் வைப்பார்கள்.

அவ்வகையில் தன் ஏழு காளைகளை ஒரே நேரத்தில் அடக்கும் காளைக்கே தன் மகள் என அறிவித்தான் கும்பன். தன் சகோதரியின் மகன் என்ற காரணத்திற்காகவோ தன் மகள் விரும்புகிறாள் என்பதற்காகவோ கண்ணனுக்கு அவன் தன் மகளை மணம் முடித்து வைக்க விரும்பவில்லை. தன் அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. கேள்வியுற்ற இளைஞர்கள் நப்பின்னையை மணக்கும் ஆசையில் காளைகளுடன் போரிட்டத்தில் உயிரை மாய்த்துக் கொண்டனர் சிலர். படுகாயமடைந்தனர் பலர். கண்ணன் காதிற்கும் செய்தி எட்டியது. நப்பின்னையின் மனத்தையும் அறிந்த அவன் போட்டிக்கு வந்தான். எல்லாரும் அவனைத் தடுத்தனர். யசோதை அழுதே விட்டாள். அவள் கண்ணனை இன்னும் குழந்தையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் செய்த லீலைகளை எல்லாம் மறந்தவளாய் அவனைத் தடுத்தாள். நப்பின்னையோ தன் பொருட்டு கண்ணன் காளைகளால் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அதே நேரம் அவன் ஒருவேளை காளைகளை அடக்கி விட்டால்? ஆசை யாரை விட்டது? கண்ணன் தன்னை ஏழு உருவங்களாக மாற்றிக் கொண்டான். ஒரே சமயத்தில் அந்த ஏழு காளைகள் மீதும் பாய்ந்து அவற்றுடன் உருண்டு புரண்டு அவற்றை அடக்கி அணைத்துக் கொண்டே நப்பின்னையை நோக்கினான். இதுபோல் உன்னையும் அணைப்பேன் என்பது போல் ஒரு காதல் பார்வையுடன்.

பிறகு கண்ணன்-நப்பின்னை திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நப்பின்னை தான் நீளாதேவியின் அவதாரமாகப் பிறந்தவள். இந்த நிகழ்ச்சியைத் தான் நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில், எருதேழ் அடர்ந்த கள்ள மாயனே என்று கண்ணனைப் புகழ்கிறார். திருமழிசை ஆழ்வாரோ தம் திருச்சந்த விருத்தத்தில் ஆயனாகியாயர்மங்கை வேய தோள் விரும்பினாய் என்கிறார். இந்த நீளாதேவி, நிகளாபுரி மன்னனின் மகளாய் வளர்ந்து உறையூர்ப் பெருமானான அழகிய மணவாளனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டு, உறையூர் நாச்சியார் என்ற பெயரில் திகழ்வதாகக் கூட சிலர் கூறுவதுண்டு. இத்தகைய பெருமைகளையும், புகழையும் கொண்ட தேவியைக் கீழ்க்காணும் நீளாசூக்தத்தைச் சொல்லி வணங்குவோம்.

நீளாம் தேவீகும் ஸரணமஹம் ப்ரபத்யே
ஸுதரஸிதரயே நம: க்ருணாஹி
க்ருதவதீ ஸவிதாரதிபத்யை: பயஸ்வதீ
ரந்திராஸாநோ அஸ்து!
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ந்யகோரா
ஸ்யேஸாநா ஸஹஸோ யா மநோதா!
ப்ருஹஸ்பதிர் மாதரிஸ்வோத வாயுஸ்
ஸ்ந்துவாநா வாதா அபிநோக் க்ருணந்து!
விஷ்டம்போ திவோ தருண: ப்ருதிவ்யா
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணுபத்நீ!
மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி!
தந்நோ நீளா ப்ரசோதயாத்!
ஹரி: ஓம்.

தண்ணீர் எப்படி நம் உடல் அழுக்கைப் போக்கி நம்மைச் சுத்தமாக ஆக்குகிறதோ அது போன்று நம் மன அழுக்கை நீக்கும் இந்த நீளா சூக்தத்தை நாம் தினமும் சொல்லி, அந்த எம்பெருமானின் மனத்தைக் குளிர்வித்து அவன் கருணைக்குப் பாத்திரர்களாவோம்!

நீளாதேவி பஞ்சகம்

ஆழியாக இருப்பவளே நின்மடிமீது
ஆழிக் கரத்தானும் துயில்கொள்ள;
ஊழிதோறும் அவன் கூடவே ஒரு,
தோழியாக இருப்பவளும் நீயன்றோ!
அடைக்கலம் என்று அடைந்தவரை,
கடைக்கண் பார்வையால் உணர்த்தி,
தடையின்றி ஏற்க எம்பெருமானுக்கு,
விடை கொடுப்பவளும் நீயேயன்றோ!
ஆழ்கடல் துறந்து நப்பின்னையாகி நீ,
ஏழ் எருதுகள் அடக்கியவனுக்கு தலை
தாழ்த்தி அவனை மணாளனாக ஏற்று,
வாழ்ந்து காட்டியவளும் நீயேயன்றோ!
உறையூர் தலத்தினில் அர்ச்சையாக,
உறைகின்ற உனை நாடிவரும் பக்தர்;
நிறைவான வாழ்வைப் பெற்று பின்பு,
கரைசேர அருள்பவளும் நீயேயன்றோ!
மீளாத்துயரில் கிடக்கும் மானிடரை;
நீளாதேவியே நீயும் காத்தருளாமல்;
வாளாயிருந்தால் என்தன் மனமும்,
தாளாது துடிதுடித்து வருந்துமன்றோ!

Advertisement
 
Advertisement