Advertisement

காளியின் ஊழிக்கூத்து!

பிரளயம் வந்து பார்த்தவரில்லை, பிரபஞ்ச நாயகியாம் காளியின் ஊழிக்கூத்தை கண்டவர்களும் இன்றில்லை. அவள் ஆலங்காட்டிலே ஆடிய தாண்டவம் அரனா பொருட்டேயாகும். அவள் ஆடிய கூத்தை கண்டவர் சிலரும் அறியாத நமக்கு சொல்லவேயில்லை. அவள் ஆடலைக் காண இவ்வுலக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த வீரமாகாளி ஆடவே செய்தாள். ஆடிய ஆட்டமோ ஊழிக்கூத்து. அதாவது காளி தாண்டவம் என்பார்களே அது. அக்காட்சியை பாட்டுக்கொரு புலவனாகிய பாரதி. தன் மனையாள் தங்கம்மாவை அழைத்து காட்டுகிறார். நாமும் அந்த ஊழிக்கூத்து எப்படியிருக்கிறது? என்று பார்ப்போமா?

1. வெடிபடுமண்டத் திடிபல தாளம்போட-வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்-பாட்டின்
அடிபட பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் -களித்

தாடுங்காளீ, சாமுண்டீ; கங்காளீ!
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

2. ஐந்துறுபூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத்தோடே

முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

3. பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும்சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோ ஹோ வென்றலைய-வெறித்

துறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்.
அன்னை, அன்னை.
ஆடுங்கூத்தை நாடச் செய்தா யென்னை.

4. சக்திப்பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசடசட்டென் றுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போ யெட்டித் தானே

எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

5. காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொனியேதனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்

கொஞ்சி தொடுவாய், ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை, அன்னை.
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காளிக்கு ஸமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
27 வருடங்கள் காத்தனன்

வந்தனம்மடி பேரரு ளன்னாய்
வைரவீ! திறற் சாமுண்டி ! காளி!

சிந்தனை தெளிந்தேனினி யுன்றன்
திருவருட்கென அர்ப்பணஞ் செய்தேன்

வந்திருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ.

(மஹாகவி பாரதியார்)

Advertisement
 
Advertisement