Advertisement

குன்னூர் தந்தி மாரியம்மன் முத்துப்பல்லக்கு உற்சவம் அமர்க்களம்!

குன்னூர் :குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், 70வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் நடந்து வரும் சித்திரை தேர்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முத்துப்பல்லக்கு நிகழச்சி நேற்று நடந்தது. தந்தி மாரியம்மன் கேரள சேவா சங்கம் சார்பில், 70வது ஆண்டு நடக்கும் இந்த திருவிழாவில், காலை, 10:00 மணிக்கு வி.பி.,தெருவில் உள்ள துருவம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில், கும்பகலசம், பஞ்சவாத்தியம், பூக்காவடி, அம்பலவயல் காவடி, சிங்காரமேளம், தேவி ரக்ஷா மற்றும் முத்துரத காளைகள் ஆகியவை இடம் பெற்றன. செண்டை மேளம் முழங்க இந்த ஊர்வலம், தந்திமாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு, 108 குடம் பசும்பால், 108 இளநீர் மற்றும் அனைத்து அபிஷேக பொருட்கள் கொண்டு தந்திமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இந்த விழாவுக்காக, வி.பி.,தெருவில் வைக்கப்பட்ட, பிரம்மாண்ட பாண்டா கரடி உருவபொம்மை, சிறுவர்களை வெகுவாக வசீகரித்தது. தொடர்ந்து, மகா சக்தி அம்மனின் ரத ஊர்வலம் நடந்தன. விழாவையொட்டி, குன்னூர் மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement