Advertisement

திருத்தணி முருகன் கோவில் சித்திரை கிருத்திகை விழா!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த, சித்திரை மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள், அலகு குத்தி, காவடிகள் எடுத்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, சித்திரை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பின், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு உற்சவ பெருமான் அருள்பாலித்தார். இந்த விழாவில், சென்னை, கொருக்குப்பேட்டை கண்ணதாசன் நகரைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்த, வாயில் அலகு குத்தியும், மயில், புஷ்பம் மற்றும் பால்காவடிகள் எடுத்து வழிபட்டனர். இதுதவிர தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்து, மூன்று மணி நேரம் பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருப்போரூரில்...: திருப்போரூர் கந்தசாமி கோவிலில், நேற்று முன்தினம், பரணி நட்சத்திர நாளை ஒட்டி, சிறப்பு வழிபாட்டிற்கு பின், இரவு, வெள்ளி மயில் வாகனத்தில், சுவாமி வீதியுலா சென்றார். நேற்று, கார்த்திகை நட்சத்திரத்தை ஒட்டி, பகல் 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement
 
Advertisement