Advertisement

திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா தொடக்கம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. மாலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வசந்த மண்டபம் சென்றடைந்தனர். மண்டபத்தின் மைய பகுதி மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தனர். இந்த உற்சவம் மே 30 வரை நடக்கிறது.விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 1 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பாலால், பகல் 2 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 2 காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்ககுதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகம் மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவார். சோலைமலை முருகன் கோயில் அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் வைகாசி விஷாக திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இக்கோயிலில் தமிழ் வருட பிறப்பு, கந்தசஷ்டி விழா, கார்த்திகை, தைப்பூசம் போன்றவை ஒரு நாள் விழாவாக மட்டுமே நடைபெறும். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிந்த பின் புதிதாக தங்க கொடிமரம், சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து இந்த ஆண்டு முதல் வைகாசி விஷாக விழாவை 10 நாட்கள் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. வைகாசி விஷாக விழா நேற்று காலை யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் பகலில் சஷ்டி மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஜூன் 1ல் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement