Advertisement

விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர்கள்: பாதுகாக்க ஏற்பாடு!

விருத்தாசலம்: சுட்டெரிக்கும் கோடை வெயி லில் இருந்து விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர்களை பாதுகாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இக்கோவில், ஐந்து பிரகாரங்கள், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தேர், ஐந்து கோபுரம், பஞ்ச மூர்த்திகள் என ஐந்தின் சிறப்புகளாக விளங்குகிறது. சோழ மன்னர்களால் செய்த தேர், ஹைடு துரை என்பவர் வழங்கிய சங்கிலி மூலம் தேரோட்டம் நடந்து வந்தது. 1980ல் ஏற்பட்ட தீ விபத்தில் பழமலை நாதர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து, ஆண்டுதோறும் மாசிமக பெருவிழாவில் முருகர், விநாயகர் தேர்கள் மட்டுமே ஓடின. கடந்த 2002 குடமுழக்கு நடந்ததையடுத்து, 2003 முதல் பழமலைநாதர், அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு புதிய தேர்கள் அமைக்கப்பட்டு, ஆண்டு தோறும் தேரோட்டம் நடக்கிறது. நடப்பாண்டு மாசி மகப்பெருவிழா தேரோட்டத்திற்குப் பின், நிலை நிறுத்தப்பட்ட தேர்கள் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வெடிப்பு விடத் துவங்கியுள்ளது. இதையடுத்து, தேர்களை பாதுகாக்க வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தேக்கு பவுடர், பெவிகால் கலந்த கலவை பூசி, வார்னிஷ் அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இது குறித்து செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், தேரோட்டம் முடிந்த பின்னர், ஐந்து தேர்களையும் பாதுகாப்பாக மூடி வைப்பது வழக்கம். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமுள்ளதால், ஐந்து தேர்களிலும் வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் பட்டி பார்த்து, வார்னிஷ் அடிக்கும் பணி நடக்கிறது. பின்னர், பாதுகாப்புடன் முடி வைக்கப்படும்’ என்றார்.

Advertisement
 
Advertisement