Advertisement

ப்ராசீன பர்ஹிஸ் சரிதங்கள்

1. ப்ருதோ: து நப்தா ப்ருது தர்ம கர்மட:
ப்ராசீன பர்ஹி: யுவதௌ சதத்ருதௌ
ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ: ஸுதாந்
அஜுஜனத் த்வத் கருணாங் குராநிவ

பொருள்: குருவாயூரப்பனே! ப்ருதுவின் தர்மத்தை நழுவாமல் கடைப்பிடித்தவனும், தனது கர்மங்களை சரிவரச் செய்தவனும், ப்ருதுவின் பேரனுடைய மகனுமான (ப்ருதுவின் கொள்ளுப்பேரன்) விளங்கியவன் ப்ராசீன பர்ஹிஸ் என்ற அரசன் ஆவான். அவன் சதத்ருதி என்பவள் மூலமாக, உனது கருணையே முளைவிட்டது போல், மிகுந்த ஞானம் படைத்த ப்ரசேதஸர்கள் என்னும் பெயர் கொண்ட பத்து குழந்தைகளைப் பெற்றான் அல்லவா?

2. பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சாஸநாத்
பவத்த பஸ்யா நிரதா தசாபி தே
பயோநிதிம் பச்சிமம் ஏத்ய தத்தடே
மனோஹரம் ஸந்தத்ருசு: ஸரோவரம்

பொருள்: குருவாயூரப்பனே! (இந்த உலகில் பல ப்ரஜைகளை உண்டாக்க வேண்டும் என்று) ஸ்ருஷ்டியில் (பல யாகங்கள் மூலமாக ஸ்ருஷ்டி) ஈடுபட்டிருந்த தங்கள் தந்தையான ப்ராசீன பர்ஹிஸின் சொல்லைக் கேட்டு, உன்னைக் குறித்துத் தவம் இயற்ற ப்ரசேதஸர்கள் பத்து பேரும் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மேற்கில் உள்ள கடலை அடைந்து, அங்கு அதன் கரையில், கண்டவர் மனம் கவரும் வகையில் அழகுடன் காணப்பட்ட சிறந்த குளம் ஒன்றைப் பார்த்தனர்.

3. ததா பவத் தீர்த்தம் ஸமாகத:
பவ பவத் ஸேவக தர்சனாத்ருத:
ப்ரகாசம் ஆஸாத்ய பர: ப்ரசேதஸாம்
உபதிசத் பக்த தம: தவ ஸ்தவம்

பொருள்: குருவாயூரப்பனே! அந்த நேரத்தில் உன்னுடைய தீர்த்தமான அந்த குளத்திற்கு சிவன் வந்தார். உன்னுடைய பக்தர்களில் மிகவும் உயர்ந்தவரான சிவபெருமான் ப்ரசேதஸர்கள் முன்னால் நின்று அவர்களுக்கு ருத்ரகீதம் உபதேசித்தார். (இங்கு குறிப்பிடப்பட்ட குளமானது குருவாயூரில் உள்ள நாராயண சரஸ் என்பதில் ஐயம் இல்லை. அதிலும் குறிப்பாக இதம் என்ற பதம் இங்கு என்ற பொருளில் உள்ளது. நாராயண பட்டத்ரி அமர்ந்து எழுதிய இடம் குருவாயூர் என்பதால், அந்தக் குளம் குருவாயூரின் குளமே ஆகும்.)

4. ஸ்தவம் ஜபந்த: தம் அமீ ஜலந்தரே
பவந்தம் ஆஸே விஷத அயுதம் ஸமா:
பவத் ஸுகாஸ்வாத ரஸாத் அமீஷு இயான்
பபூவ கால: த்ருவவத் ந சீக்ரதா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்களும் அந்த ருத்ர கீதத்தை குளத்தின் நடுவே நின்று கொண்டு பதினாயிரம் வருடமக ஜபித்தபடி உன்னை வணங்கினர். உனது ஆனந்தத்தில் இவர்கள் மூழ்கியபடி ஜபம் செய்ததால், துருவனைப் போன்று சீக்கிரமாக உனது தரிசனம் கிட்டவில்லை. (ருத்ர கீதம் என்பது நாராயணனைக் குறித்ததாகும். இது பலவிதமாக நாராயணனை வர்ணனை செய்து அவன் தரிசனம் கிட்ட வேண்டும் என்பதாகும்.)

5. தபோபி: ஏஷாம் அதிமாத்ர வர்திபி:
ஸ யஜ்ஞ ஹிம்ஸா நிரதோபி பாவித:
பிதாபி தேஷாம் க்ருஹயாத் நாரத
ப்ரதர்சிதாத்மா பவத் ஆத்மதாம் யயௌ

பொருள்: குருவாயூரப்பனே! ப்சேதஸர்களின் தவ மகிமை மிகவும் அதிகமாக விருத்தி பெற்றது. இதனால் யாகங்களைக் கெடுத்தவனாக விளங்கிய அவர்களின் மூதாதையர்களில் ஒருவனான வேனன் புனிதத்தன்மை அடைந்தான் (அவர்களின் தவத்தால்). அவர்கள் தந்தையான ப்ராஸீன, பர்ஹிஸ், தனது வீட்டிற்கு வந்த நாரதமுனிவர் மூலம் ஆத்ம உபதேசம் பெற்று, உன்னுடன் ஐக்கியமானார்.

6. க்ருபா பலேநைவ புர: ப்ரசேதஸாம்
ப்ரகாசமாகா: பதகேந்த்ர வாஹன:
விராஜி சக்ராதி வராயுதம் சுபி:
புஜாபி: அஷ்டாபி: உதஞ்சிதத்யுதி

பொருள்: க்ருஷணா! குருவாயூரப்பா! அப்போது கருணையுடன் கருடனை வாகனமாக உடையவனும், சக்கரம் முதலான பல ஆயுதங்களின் ஒளியால் நன்கு விளங்கும் எட்டுத் திருக்கரங்களுடன் எங்கும் ஒளி வீசுபவனும் ஆகிய நீ அவர்களுக்குக் காட்சி அளித்தாய் அல்லவா?

7. ப்ரஸேதசாம் தாவத் அயாசதாம் அபி
த்வம் ஏவ காருண்ய பராத் வரான் அதா:
பவத் விசிந்தாபி சிவாய தேஹிநாம்
பவது அஸௌ ருத்ரநுதிச்ச காமதா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ முன்னால் நின்றபோதும் கூட) ப்ரசேதஸர்கள் உன்னிடம் எதுவும் வரங்களாகக் கேட்கவில்லை. ஆனாலும் உனது கருணையால் அவர்களுக்கு நீ வரங்களை அளித்தாய். அந்த வரங்கள் என்ன? ப்ரசேதஸர்களான உங்களை நினைப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களும் கிடைக்கும் என்றும் ருத்ரகீதத்தைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன கிட்டும் என்றும் நீ வரம் அளித்தாய்.

8. அவாப்ய காந்தாம் தனயாம் மஹீருஹாம்
தயா ரமத்வம் தசலக்ஷ வத்ஸாம்
ஸுத: அஸ்து தக்ஷ: நநு தத்க்ஷணச்ச
மாம் ப்ரயாஸ்யத இதி ந்யகதோ முதைவ தாந்

பொருள்: குருவாயூரப்பனே! வனதேவதைகளாக உள்ள மரங்களின் மகளான வர்க்ஷீ என்பவளை மனைவியாக நீங்கள் அடைவீர்கள். அவளுடன் பத்து லட்சம் வருடம் இன்பமாக இருப்பீர்கள். அவள் மூலமாக தக்ஷன் என்பவன் பிறப்பான். அந்த நேரத்தில் நீங்கள் என்னை வந்து அடைவீர்கள் என்றும் அவர்களை நோக்கிக் கூறினாய்.

9. ததச்ச தே பூதலரோதின: தரூன்
க்ருதா தஹந்த: த்ருஹிணேந: வாரிதா:
த்ருமை: ச தத்தாம் தனயாம் அவாப்ய தாம்
த்வதுக்த காலம் ஸுகிந: அபிரேமிரே

பொருள்: குருவாயூரப்பனே! (தவம் முடிந்து குளத்தை விட்டு மேலே வந்த ப்ரசேதஸர்கள் ) எங்கும் மரங்களாக உள்ளதைப் பார்த்தனர். (நடக்கக் கூட இடம் இன்றி இருந்தது). இதனால் கோபம் கொண்ட அவர்கள் மரங்களை தீயினால் அழிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் ப்ரும்மாவால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைக் கண்டு மகிழ்வுற்ற மரங்கள் தங்கள் பெண்ணை ப்ரசேதஸர்களுக்கு மணம் செய்து கொடுத்தன. நீ குறிப்பிட்ட காலம் வரையில் அவர்களும் சுகமாக வாழ்ந்தனர்.

10. அவாப்ய தக்ஷம் ச ஸுதம் க்ருதாத்வரா:
ப்ரசேதஸ: நாரத லப்த்யா தியா
அவாபு: ஆனந்தபதம் ததாவித:
த்வம் ஈச வாதாலயநாத பாஹிமாம்

பொருள்: குருவாயூரின் நாதனே! க்ருஷ்ணா! உனது வரத்தின்படி தக்ஷனைத் தங்கள் மகனாகப் பெற்றனர். பலவிதமான யாகங்களை இயற்றினர். நாரதர் மூலமாக கிடைக்கப்பெற்ற ஞான உபதேஸம் மூலமாக பெரும் ஆனந்தம் பெற்றனர். அந்த ஆனந்தம் நிலைத்து உள்ள இடமான பரமபதத்தை அடைந்தனர். இத்தனை பெருமை உடைய நீ என்னைக் காக்க வேண்டும்.

Advertisement
 
Advertisement