Advertisement

பூமிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

திருவாரூர்: குடவாசல் அருகே, பூமிக்குள் ரகசிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 ஐம்பொன் சுவாமி சிலைகள் மற்றும் திருவாட்சி, பீடம், சூலம் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தில் காசிராமன் என்பவரது வீட்டில், அரசு மானியத்தில், தனி நபர் கழிப்பறை கட்டியுள்ளார். இதற்கு, கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக, நேற்று காலை, பள்ளம் தோண்டும் பணி நடந்தது.6 அடி ஆழம் தோண்டியபோது, செங்கற்களால் கட்டப்பட்ட ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அந்த அறையை உடைத்து தொழிலாளர்கள் பார்த்தனர். அறைக்குள் சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது.தகவலறிந்து குடவாசல் தாசில்தார் சொக்கநாதன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.அவர்கள் முன்னிலையில், ரகசிய அறையில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் பொருட்கள் எடுக்கப்பட்டன. இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை; சிவன் - பார்வதி சிலை; அமர்ந்த நிலையில், இரண்டு சிவன் சிலைகள்; நின்ற நிலையில் இரண்டு அம்மன் சிலைகள், அமர்ந்த நிலையில், மூன்று அம்மன் சிலைகள், பீடத்துடன் ஒரு சிலை, ஒரு சிறிய சிலை என, ஏழு அம்மன் சிலைகள்;1 அடி உயரமுள்ள விநாயகர் சிலை; திருஞானசம்பந்தர் சிலை உட்பட மொத்தம், 13 சிலைகள், ஐந்து திருவாட்சி, மூன்று பீடம், ஒரு சூலம், பூஜைக்கு தேவையான, ஒரு குத்துவிளக்கு, மூன்று தட்டு, ஒரு முக்காலி, ஒரு மணி, சாம்பிராணி சட்டி போன்றவையும் ரகசிய அறைக்குள் இருந்து எடுக்கப்பட்டன.இவற்றில், நடராஜர் சிலை, 75 கிலோ எடையும்; மற்ற சிலைகள் தலா, 50 கிலோ வரை எடை கொண்டவையாக இருந்தன. இவை அனைத்தும், ஐம்பொன்னாலான சிலைகள். மொத்தம், 1,000 கிலோ எடை கொண்ட இவற்றின், மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும், குடவாசல் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுஉள்ளன.

Advertisement
 
Advertisement