Advertisement

காத்திடும் கருப்பர்

அகன்ற பெரு நெற்றியும் அளவான கைகளில்
அரிவாளும் அடிபிரம்பும்
அத்துடனே உயர்புருவம் அன்பான கூர்விழிகள்
அழகான தலைப் பாகையும்
திடமான தோள்களும் திருத்திய பெருமீசையும்
திகைப்பறும் வண்ணம் கொண்டே
திருநகரை வலம்வந்து தினந்தோறும் காத்திடும் எம்
திருப்புத்தூர் கருப்பண்ணனே!
தென்பகுதி மக்கள் உன்திருநாமம் போற்றியே
தினந்தோறும் வாழுகின்றார்.

அவர் உள்ளம் நோகாமல் அல்லல்கள் தொலைத்தேநீ
அழகான வாழ்வு தருவாய்
திக்கெட்டு திசைநான்கு திருமக்கள் பெருஉள்ளம்
தினமும் உன்னைக்காண வருதே
இக்கெட்டு இடையூறு இனிவாழ்வில் இல்லாமல்
என்றென்றும் காத்து அருள்வாய்!
நல்லவர்கள் நலம்பெறவும் தீயவர்கள் திருந்திடவும்
நல்ல வழி காட்டுவாயே
வல்லதிரு கோட்டைக்குள் வாழ்வாங்கு வாழ்பவனே
கருப்பண்ண சுவாமி துணையே!

Advertisement
 
Advertisement