Advertisement

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-1)

ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் ஐந்தாவது வேதம் இது!

வியாசர் என்னும் மாமுனிவரால் ஒரு லட்சம் ஸ்லோகங்களால் எழுதப்பட்டது. இப்படி சொல்வது கூடப் பிழை தான்! வியாச முனிவர் சொல்லச் சொல்ல நாம் அன்போடு வணங்கும் கணபதி தான் பாரதத்தை எழுதினார். அதுவும் எப்படி? தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே பேனாவாக, அதாவது எழுத்தாணியாக ஆக்கிக் கொண்டு எழுதினார். அப்படி எழுதப்பட்ட பாரதம், மகாபாரதமாக கருதப்படவும் ஒரு காரணம் உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வியாசர் எழுதிய பாரதத்தின் சிறப்பை அறிந்து கொள்ள முயல் கின்றனர். உள்ளிருக்கும் லட்சம் ஸ்லோகங்களøயும் சொல்லி அவர்களுக்குப் புரியச் செய்வது ஒருபுறம். அதற்கு அவசியம் இல்லாதபடி நொடியில் புரிய வைத்துவிட, ஒரு வழியைக் காண்கிறார் கணபதி. ஒரு பெரிய தராசைக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஒரு பக்கம் பாரதத்தையும், மறுபக்கத்தில் நான்கு வேதங்களையும் வைக்கிறார். பாரதம் உள்ள தட்டும், நான்கு வேதம் உள்ள தட்டும் சமமாக நிற்கிறது. தேவர்கள் வியக்கின்றனர். வேதங்கள் இறைவனிடமிருந்தே தோன்றியது. அதுவே, மானுட வாழ்விற்கு ஆதாரமாக வழிகாட்டியாக எல்லாமுமாக உள்ளது.

அதை அசுரர்கள் அழிக்க நினைத்த போதெல்லாம், மகாவிஷ்ணுவே அதை மீட்டு வந்து பிரம்மனிடம் அளித்து பின் ரிஷிகளை அடைந்து அனைவருக்கும் பொதுவானது. அப்படிப்பட்ட வேதங்களுக்கு இணையான பாரதம் இருப்பதை அறிந்த தேவர்கள், ‘இது பாரதம் அல்ல. மகாபாரதம்’ என்றனர். மகாபாரதம் மட்டுமல்ல. ராமாயணமும் இதிகாசம். இந்த இரண்டையும் அதாவது இரண்டின் சாரத்தையும் திருக்குறள் போல சுருங்கச் சொல்வதும் உண்டு. “மண்ணாசையில் விளைந்தது மகாபாரதம்! பெண்ணாசையில் விளைந்தது ராமாயணம்!”முன்னதில் அந்த திருமால் கிருஷ்ணனாக அவதரித்து தந்திரங்கள் புரிந்தான். பின்னதில் ராமனாய் அவதாரம் எடுத்து தர்மங்கள் புரிந்தான். ஒன்று கிருஷ்ண தந்திரம். இன்னொன்று ராமதர்மம். ஒன்று அறிவு சார்ந்தது. இன்னொன்று உணர்வு சார்ந்தது. உடல் சார்ந்தது. உயிர் சார்ந்தது என்றும் கூட கூறலாம். அந்த வகையில், மண்ணாசையில் விளைந்த மகாபாரதத்திற்குள் எவ்வளவோ பாத்திரங்கள். சந்தனு மகாராஜாவிடம் தொடங்கும் கதை, கவுரவர்கள் பாண்டவர்கள் என்று பிரிவு பட்டு இருதரப்புக்குமான பெரும் யுத்தமாக 18 நாட்கள் நடந்தேறி, இறுதியில் பாண்டவர்களின் வெற்றி பெற்று அவர்கள் சொர்க்கநரகம் செல்வது வரை தொடர்கிறது.

சிரஞ்சீவி தன்மையோடு திகழும் இந்த பாரதத்தில் தர்மர், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன், குந்தி, துரியோதனன் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்கள் இருந்தாலும், பல துணைப்பாத்திரங்களும் இவர்களுக்கு இணையாக இருப்பது பாரதம் படித்த பலருக்கே கூட பெரிதாகத் தெரிந்திருக்காது. அவர்கள் யாரென்று பார்க்கும் போது சந்தனு, அம்பை, விதுரர், ஆணிமாண்டவ்யர், மாத்ரி, துச்சலை, திருஷ்டத்துய்மன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பாரதப் பரம்பரை என்பது சராசரியான மானுட இனத்தின் ஆயிரக்கணக்கான பரம்பரைகளில் ஒன்றல்ல. இந்த பூமியில் அது தோன்றிய நாளிலிருந்து அதில் உயிர்கள் உருவான காலம் தொட்டு கோடானு கோடி பேர் பிறந்தும்- பின் அவர்கள் இறந்தும் என்று ஒரு சுழற்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது. அத்தனைபேரையும் வரலாறு தன்னுள் பதிவு செய்து கொள்வதில்லை. அந்த கோடான கோடி பேர்களில் வெகுசிலரே இந்த உலகம் வியக்கும் செயல்களைச் செய்பவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏதோ ஒரு விதத்தில் அளிக்க முடியாத உதாரணங்களாகவும் ஆகிறார்கள். இவர்களில் கங்காதேவி பற்றி முதலில் அறியலாம்.துஷ்யந்தன், சகுந்தலைக்குப் பிறந்தவன் பரதன். இந்த பரதனிலிருந்து பெரும் பரம்பரை தோன்ற ஆரம்பிக்கிறது. அதில் சந்திர வம்சம், சூரியவம்சம் என்ற பிரிவுகள் உண்டாயிற்று. சந்திர வம்சாவளியில் தான் மகாபாரத பாத்திரங்கள் வருகின்றன. இவர்களில் ஒருவன் மகாபிஷக். இவன் தன் வாழ்நாளில் ஆயிரம் அஸ்வமேத யாகங்களையும், நுõறு ராஜசூய யாகங்களையும் செய்து தேவர்களின் தலைவனான இந்திரனின் அன்புக்கும், கருணைக்கும் ஆளானான். இதனால் இவனுக்கு சொர்க்கம் கிட்டியது. சொர்ககம் என்றவுடனேயே துன்பமே இல்லாத ஒரு இன்ப உலகம் என்று தான் நாம் அர்த்தப்படுத்துகிறோம்.

அது உண்மை தான். அங்கே பூவுலக மனிதர்களிடம் காணப்படும் காமம், குரோதம், பயம், சந்தேகம் போன்ற உணர்வுகளுக்கு இடமில்லை. இதற்கெல்லாம் அங்கு அவசியமும் இல்லை. அத்துடன் இங்கு சில நியமங்களும் உள்ளன. அதன்படி, சொர்க்கவாசிகள் ஒருநாள் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவனைக் கண்டு அவரது அருளில் திளைத்தபடி இருக்கின்றனர். அவ்வேளையில், புண்ணியநதிகளின் தாயான கங்கையும் பிரம்மாவை வணங்க வருகிறாள். அவளது அழகு மகாபிஷக்கை சலனப்படுத்திட, பிரம்ம தியானத்தை விட்டு விட்டு கங்கையை ஆசையுடன் பார்க்கிறான். இதைக் கண்ட பிரம்மா, மகாபிஷக்கிடம் பூலோக வாசனை மிச்சமிருப்பதைக் கண்டு, “நீ திரும்ப மானிடப் பிறப்பெடுக்க கடவாய்,” என்று சபித்து விடுகிறார். மகாபிஷக்கின் மனதில், ஆசை ஏற்படக் காரணமான கங்கையாலேயே, சாபவிமோசனமும் ஏற்படும் என்று வழிகாட்டுகிறார். கங்கை தன்னால் மகாபிஷக் சாபத்திற்கு ஆளானதை எண்ணி வருந்துகிறாள். அந்த வருத்தத்தோடு திரும்பிச் செல்கையில், சொர்க்கத்தில் வசித்துவரும் அஷ்டவசுக்கள் என்னும் எட்டு வசுக்களைப் பார்க்கிறாள். அவர்கள் துளியும் பொலிவு இல்லாமல் வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் போல் இருக்கிறார்கள். இவர்கள் யார் என்பது ஒரு தனிக்கதை. வசுக்களைப் பார்க்கும் கங்கை அதிர்ச்சி அடைகிறாள். வசிஷ்ட மகரிஷியின் சாபத்தால் தாங்கள் பொலிவு இழந்து விட்டதாகவும், பூவுலகில் மானிடப் பிறப்பெடுக்கும் சாபம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர்கள் கங்கையிடம் கூறுகின்றனர். சாபத்திற்குரிய காரணம் பற்றி கங்கை அவர்களிடம் கேட்கிறாள்.

ஒருவசு இதற்கு பதிலளித்தான். “தாயே! வசிஷ்டர் வசமுள்ள காமதேனு பசுவின் மேல் என் மனைவி விருப்பம் கொண்டாள். அவரோ மகாமுனி. அவருக்கு எதற்கு எல்லாம் தரும் காமதேனு. சொர்க்கவாசியான நமக்கல்லவா காமதேனுவின் சகல ஐஸ்வர்யங்களும் சொந்தமாக வேண்டும் என்னும் ஆசையில் அவருக்குத் தெரியாமல் காமதேனுவைக் கொண்டு வந்து விட்டோம். இதை அறிந்தே அவர் எங்களைச் சபித்து விட்டார்,” என்கிறான். கங்கைக்குச் சிரிப்பு தான் வருகிறது. ஒருபுறம் பெண்ணாசையால் சபிக்கப்பட்ட மகாபிஷக். மறுபுறம் களவால் சபிக்கப்பட்ட வசுக்கள். சொர்க்கத்திலலும் கூட இவ்வகைப் பண்புகள் உள்நுழைந்து தன் வீரியத்தைக் காட்டத்தான் முனைகிறது. கங்கை பூவுலகில் பாய்ந்து செல்பவள். மனிதர்கள் மனதாலும், வாக்காலும், உடம்பாலும் செய்கிற பாவங்களை எல்லாம் தன் புனிதத்தால் போக்கி அவர்களை புண்ணியர்களாக ஆக்குகிறவள். அப்படிப்பட்டவள் வசுக்களின் வருத்தத்தை மட்டும் பார்த்துக கொண்டு சும்மா இருப்பாளா? “வசுக்களே! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?,” என்று கேட்கிறாள். “அம்மா! நாங்கள் மானுட கர்ப்பத்தில் உடலெடுத்து பிறக்க விரும்பவில்லை. அதே சமயம், சாபத்தையும் அனுபவித்தாக வேண்டும். இதற்கு ஒரே வழி தான் உள்ளது. எங்கள் பொருட்டு நீ மானிடப் பிறவி எடுக்கவேண்டும். உன்வயிற்றில் நாங்கள் பிறக்கவேண்டும்.

நாங்கள் பூமியில் வாழ விரும்பாததால், எங்களைப் பெற்றெடுத்த சில க்ஷணத்திலேயே எங்களை நீ கொன்று விடு. உன்னுள் மூழ்கி உயிர் விட்டால் பாவம் நீங்கிவிடும் என்பதால் எங்களை நீயே விழுங்கி விடு. அதன்பின் நாங்கள் வசுக்களாகி திரும்பவும் சொர்க்கத்தை அடைந்துவிடுவோம். இனி வரும் நாளில் மனிதனின் மனோபாவனை போல் தவறுகள் செய்ய மாட்டோம்,” என்கின்றனர். அப்போது தான் கங்காதேவிக்கு, அன்று பிரம்மதேவனிடம் அருள்பெற வந்த காரணம் புரிகிறது. வசுக்கள் பாவவிமோசனம் கொடுத்தாலும் கூட, அவர்களைப் பெற்றவுடன் கொல்லப் போவதால், உலகத்தார் தன்னைத் தவறாகப் பேசப்போவது பற்றி எண்ணிப் பார்க்கிறாள். அதுபோல, தான் அவர்கள் பொருட்டு மணக்கப் போகும் அரசனுக்கு ஒரு பிள்ளையைத் தர வேண்டி இருப்பது பற்றியும் எண்ணுகிறாள். இதைப் புரிந்து கொண்ட வசுக்கள், “எங்களைக் கொல்லும் செயலுக்குப் பரிகாரமாக நாங்கள் எட்டுப்பேரும் எங்கள் சக்தியில் நாலில் ஒரு பங்கை உனக்கு தருகிறோம். உன்னால் எங்கள் சக்திபிரபாவத்தோடு, ஒரு பிள்ளை பிறக்கட்டும். அதை நீ அந்த அரசனுக்கு அளித்து விடு. உனக்கும் உன் கடமையைச் செய்த நிறைவு வரும். எங்களுக்கும் சாபவிமோசனம் கிடைத்தது போல் இருக்கும்,” என்றனர். அந்த கங்காதேவி தான் மகாபாரத பாத்திரங்களில் உத்தமரான பீஷ்மருக்குத் தாயாகிறாள்.

Advertisement
 
Advertisement