Advertisement

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-2)

சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் அறிந்திராத பாத்திரம். பிரதீபன் ஆன்மிக நெறி அறிந்தவன். கங்கை நதிக்கரையில் மனதை அடக்கி தவம் செய்யத் தொடங்கினான். ஒருநாள் அவனைக் கண்ட கங்கைக்கு அவன் மீது காதல் தோன்றியது. அவனது வலது தொடையில் அமர்ந்து தன் காதலைக் கூற முற்பட்டாள். ஆனால், பிரதீபன் அவளது காதலை மறுத்துவிட்டான். மனித வாழ்வின் தர்மநெறிபற்றி அவளிடம் கூறத் தொடங்கினான். கங்கா! என்னை நீ விரும்பியதில் பிழையில்லை. ஏனென்றால், ஒருவரை விரும்புவதன் பின்புலத்தில் சில நுட்பங்களும், விதிக்கூறுகளும் இருக்கும். ஆனால், உன்னைப் பொறுத்த வரையில், அந்த விதிக்கூறு தவறாகி விட்டது. நீ எனது இடது தொடையில் அமர்ந்து என்னை மோகித்திருந்தால், நான் உன்னை ஏற்றிருப்பேன். ஆனால், வலது தொடையில் அமர்ந்து விட்டாய். வலத்தொடை சந்ததிகளும், மருமகளும் அமர வேண்டியது. அவ்வகையில், நீயும் என் மருமகளாகிறாய். அதனால், உன்னை மணக்க ஒரு புத்திரனைத் தருவேன், என்றான். பிரதீபனுடைய பேச்சிலிருந்த தர்ம சிந்தனைக்கு கங்கையும் கட்டுப்பட்டாள்.

அரசே! காலக்கணக்கிற்கு அப்பாற்பட்ட நான், காலக்கணக்கிற்கு கட்டுப்பட்ட மானிடர்களோடு சம்பந்தம் கொள்வதன் மூலம் பாவங்களைப் போக்கும் என் குணப்பாடும், உயிர்களைக் காக்கும் என் கருணையும், தாகம் தீர்க்கும் என் தயையும், எனக்குப் பிறக்கின்ற பிள்ளையிடத்திலும் குவிந்திருக்கும். இதன் மூலம் வருங்காலத்தில் பரதவம்சத்தின் போக்கிலும் அது எதிரொலிக்கும். அப்படி ஒரு பிள்ளையைப் பெற்றிட உங்களின் தவம் பயன்படட்டும், என்று கூறிச் சென்றாள். அவ்வாறு கங்கைக்காக, உருவான புத்திரனே சந்தனு. சந்தனு முற்பிறப்பில் மகாபிஷக் என்ற தேவனாக இருந்தான். ஒருசமயம் கங்கை பிரம்மலோகம் சென்றபோது, அவளை இச்சையுடன் பார்த்தான். அதனால், மானிடப் பிறப்பெடுக்க வேண்டிய சாபம் ஏற்பட்டது. அவனே, தற்போது சந்தனுவாகப் பிறந்திருக்கிறான். வாலிப பிராயத்தில், அவன் கங்கைக்கரைக்கு வந்தான். அவனுக்காகவே, காத்திருந்த கங்கையைக் கண்டான். ஆனால், அவள் தான் கங்கை என்று அவனுக்குத் தெரியவில்லை. அது தான் விதியின் மாயை. பிரம்மதரிசனத்தின் போது, மகாபிஷக்காக இருந்து அன்று கொண்ட காதல், இப்போதும் அவள் மீது ஏற்பட்டது.

கங்கைக்கோ, இரண்டு கடமைகள் இருந்தது. ஒரு புறம் இந்த சந்தனுவைச் சேர வேண்டும் என்பது. இன்னொன்று அஷ்ட வசுக்களுக்கு கொடுத்த வாக்கு. அஷ்ட வசுக்கள் என்பவர்கள் வசிஷ்டரிடம் இருந்த காமதேனு என்னும் பசுவை கவர்ந்து விட்டனர். இதன் காரணமாக, அவர்கள் பூமியில் பிறக்க வசிஷ்டர் சாபமிடுகிறார். அவர்கள் பிரம்மலோகம் வந்த கங்காதேவியைச் சரணடைந்து, அவளுக்கே பிள்ளைகளாகப் பிறந்து உடனடியாக தங்களை கொன்று விடும்படி கேட்டுக் கொண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், மானிடப்பிறப்பு உடனடியாக நீங்கும் என அவர்கள் கணக்கிட்டனர். அவர்களின் கோரிக்கையை கங்காதேவியும் ஏற்றுக் கொண்டாள். இதன் காரணமாக, சந்தனுவின் காதலை ஏற்றாள். ஆனால், சில நிபந்தனைகளை சந்தனுவுக்கு விதித்தாள். அரசே! நான் உங்கள் மனைவி ஆவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், என்னுடைய மூலத்தை நீங்களோ, உங்களைச் சார்ந்தவர்களோ துளியும் அறிந்து கொள்ள முயலக்கூடாது. நான் விரும்பிச் செய்யும் எதையும் தடுக்கக் கூடாது. என்மனம் வருந்தும் விதமாக நடக்கக் கூடாது. இதில் எது நடந்தாலும், நான் அடுத்த நொடியே உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன், என்றாள். சந்தனு காதல் மோகத்தில் நிபந்தனைகளை ஏற்றான். இருவருக்கும் திருமணம் ஆனது.

கங்கை விதித்த நிபந்தனைகளின் படியே அவன் நடந்து கொண்டான். அந்த வேளையில், சாபமுற்றிருந்த அஷ்ட வசுக்கள் தங்களின் சாபவிமோசனத்திற்காக காத்திருந்து, ஒவ்வொருவராக கங்கையின் வயிற்றில் கருவாயினர். முதல் குழந்தை பிறந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையை புரண்டு வரும் கங்கையில் அவள் துõக்கிவீச, ஜலபிரவாகம் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டது. இதேபோல, அடுத்தடுத்து ஏழு குழந்தைகள் பிறந்தன. அத்தனைபேரும், கங்கை நதியில் மூழ்கிப் போயினர். நிபந்தனைப்படி, சந்தனு ஏதும் கேட்க முடியாமல் இருந்தான். எட்டாவது வசு தான், வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்குள்ள காமதேனுவைத் திருடி வந்தான். அவன் இம்முறை கங்கையின் வயிற்றில் கரு கொண்டான். கரு வளர வளர, சந்தனுவிடமும் மனதில் நிறையவே மாற்றங்கள். ஒன்றுக்கு ஏழு பிள்ளைகளை நான் நிபந்தனை என்னும் பெயரால் இழந்துவிட்டேன். இந்த பிள்ளையை அதுபோல இழக்க மாட்டேன். இவன் எனக்கு வேண்டும் என்கிற எண்ணம் மிக தீர்க்கமாகத் தோன்றுகிறது. எனவே, இந்த பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் எட்டாவது பிள்ளை பிறந்து, கங்கை குழந்தையை ஆற்றில் வீச சென்றபோது, பின் தொடர்ந்த சந்தனு அவளைத் தடுத்து நிறுத்தினான். கங்கா! இது நாள் வரையில் உன் நிபந்தனை களுக்குக் கட்டுப்பட்டு வந்தேன். என்னைக் கல்லாக்கிக் கொண்டேன். ஆனால், இம்முறை அவ்வாறு இருக்க இயலவில்லை.

இந்த பிள்ளையையும் நீ கொல்வதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, நீ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்பதை என்னால் கேட்காமலும் இருக்க முடியாது. நீ யார்? எதனால் இப்படி நடந்து கொள்கிறாய். ஒரு தாய் செய்கிற காரியமா இது? என்று வெடித்துக் கதறினான். கங்கையும் பதில் கூறத் தொடங்கினாள். அரசே! இப்படி கோபத்தோடு என்னைக் கேள்வி கேட்கும் நாளுக்காகவே காத்திருந்தேன். ரிஷிகளின் சாபமும், விதியின் பலனும் எப்போதும் வலியவை. என் மூலமாய் அவை உங்களை நிபந்தனை என்னும் பெயரால் கட்டிப்போட்டு விட்டன. முதலில் நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உத்தமரான ஜனக மகரிஷியின் புதல்வி நான். என் பெயர் கங்கை. உங்களை நான் மணந்தது, நமக்கு எட்டுப்பிள்ளைகள் பிறந்தது என்கிற எல்லாமே, விதியின்படி நடந்தது. அதை அறிய நீங்கள் அஷ்ட வசுக்களைப் பற்றியும், அவர்களுக்கு நான் அளித்த வாக்கினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.... என்று ஆரம்பித்தவள் சகலத்தையும் கூறி முடித்தாள். அனைத்தையும் கேட்ட சந்தனுவிடம் திகைப்பு....பிரமிப்பு.... அந்த பிரமிப்பில் இருந்து விடுபடாதவனாக இருந்த சந்தனுவிடம், முற்பறப்பில் அவன் மகா பிஷக் என்பவனாக இருந்து அப்போதே மோகித்த வரலாறையும் சொன்னாள். தொடர்ந்து, அரசே! எட்டாவதாகப் பிறந்த இவன், அஷ்ட வசுக்களின் பலம் மிகுந்த அம்சத்தை உடையவன். அவர்களின் வரத்தால் நிரம்பியவன்.

அஷ்ட வசுக்களும் தேவர்கள். எனவே, இவன் ஒரு தேவவரதன். அடுத்து இவன் என் அம்சங்களையும் கொண்டிருப்பவன். எனவே, இவன் கங்காதரன். பிறப்பிலேயே சிறப்புடைய இவனுக்கு, அரிய பல வித்தைகளைக் கற்பிக்க விரும்புகிறேன். நிபந்தனைப்படி, நீங்கள் என்னைக் கேள்வி கேட்டதால், உங்களை விட்டும் பிரியும் இவ்வேளையில் இவனையும் என்னோடு அழைத்துச் செல்லப் போகிறேன். இது என்ன நியாயம் என்று கூட நீங்கள் கேட்கலாம். இவ்வேளையில், உங்களுக்கு நான் ஒரு வாக்கினை அளிக்கிறேன். இவனை உங்களின் சந்திர வம்சத்திற்கென்றே பெரும் வீரனாக உருவாக்குவேன். இவன் வாலிப பிராயத்தை எட்டியதும் பெரும் வீரனாக உங்கள் வசம் ஒப்படைப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள், என்றாள் கங்காதேவி. சந்தனுவால் எதுவும் பேச முடியவில்லை. காலம் வலை போல பின்னிக்கொண்டு, காரண காரியங்களோடு பல செயல்களைச் செய்து கொண்டே போகிறது. மகனைப் பிரிந்து வாழ்வது, ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், அஷ்டவசுக்களின் அம்சங்களோடு அவன் உருவானதை நினைக்க மகிழ்வாகவும் இருந்தது. காலம் உருளத் தொடங்கியது. கங்காதேவியும் தான் அளித்த வாக்குப்படி, சகல வித்தைகளையும் மகனுக்குப் பயிற்றுவித்தாள். அதில் தேவலோக வித்தைகளும் அடக்கம். இந்த வித்தைகள் தான், அந்த மகனை மகாபாரதத்திலேயே தனித்துக் காட்டப் போகிறது. மேலும், துளியும் பெண் நினைப்பே இல்லாமல் அவனைக் கங்கை வளர்த்தாள். பெண்ணாசையாலேயே பிழைகள்- அதனாலேயே சாபங்கள்- பின் பலவித பிறப்புகள்..... தன் மகனுக்கு அப்படி ஒரு ஆபத்து நேரக்கூடாது என்னும் வைராக்கியத்தைப் புகட்டினாள். சந்தனு மகாராஜாவிடம் வந்து சேரப்போகும் அந்த இளைஞனே பீஷ்மன்.

Advertisement
 
Advertisement