Advertisement

இந்திரனின் ரத சாரதி - மாதலி

இந்திரனின் ரத சாரதி மாதலி. வெறும் தேரோட்டியாய் மட்டும் இல்லாமல், சமயங்களில் தகுந்த ஆலோசனைகள் கூறும் மதியூகியாகவும் செயல்பட்டான். மாதலியின் மகள் குணகேசி அழகிலும், அறிவிலும், நற்பண்பிலும் சிறந்தவள். தேவ - அசுரர் சதா சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் அவர்களில் மாப்பிள்ளை தேடுவதைத் தவிர்த்தான் மாதலி.

மாதலி தன் கவலையை நாரதரிடம் கூற, அவர் போகவதி எனப்படும் நாக லோகத்துக்கு அவனை அழைத்துச் சென்றார். அங்கே சுமுகன் என்பவனை மாதலிக்குப் பிடித்திருந்தது. சுமுகனின் தந்தை வழிபாட்டனாரான ஆர்யகனிடம் சம்பந்தம் பேசச் சென்றனர். அவர் சுமுகனின் தந்தை சிகுரனை கருடன் தின்றுவிட்டான். சுமுகனை வளரட்டும் என விட்டு வைத்திருக்கிறான். நித்தியம் மரணத்தை எதிர்பார்க்கும் ஒருவனுக்கு எப்படித் திருமணம் செய்விப்பது? சர்ப்ப கூட்டங்களை அழித்த கருடனிடம் ஆதிசேஷன் இப்படி கூட்டம் கூட்டமாக அரவங்களை நாசமாக்காதே! உனக்கு தினமும் உணவு வேண்டுமளவு பாம்புகளை அனுப்புகிறோம் என வேண்டிக் கேட்டுக் கொண்டபடி அனுப்பிக் கொண்டிருக்கிறோம். சுமுகன் முறை என்று வருமோ? எனக் கவலையுடன் சொன்னார் ஆர்யகன்.

மாதலி, சுமுகனுக்கு தீர்க்காயுளை இந்திரன் மூலம் நான் பெற்று வருகிறேன். அதன்பின் என் புத்திரியை ஏற்கத் தடை யொன்றுமில்லையே என்று வினவ, மகிழ்ச்சியுடன் வழியனுப்பினார் ஆர்யகன். மாதலி இந்திரனிடம் தன் கோரிக்கையை வைத்தான். அவர், மகாவிஷ்ணுவிடம் விண்ணப்பி என்றார். திருமால் மாதலியுடன் அமராவதி வந்து, தேவேந்திரா! சுமுகனுக்கு அமிர்தம் கொடு. இல்லையே நீண்ட ஆயுளோடு வாழ ஆசீர்வாதம் செய் என்றார். இந்திரன் தீர்க்காயுளோடு பெருவாழ்வு வாழ்வாய் என வாழ்த்தினான். அவர்கள் தலைமையில் குணகேசி- சுமுகன் விவாகம் கோலாகலமாக நடந்தேறியது. இதைக் கேள்வியுற்ற கருடன் சினம் கொண்டு இந்திரனிடம் வந்து, சுமுகனின் ஆயுளை எப்படி நீட்டிக்கலாம் எனச் சீறினான். சுபர்ணா, இது மாதவரின் கட்டளை. அவரை மீற முடியாது? என்றான் இந்திரன். கருடன் வைகுண்டம் சென்று, ஸ்வாமி! சகல உலகையும் காப்பாற்றுபவர் தாங்கள். உங்களையே நான் சுமக்கிறேன். எனக்கே துரோகம் செய்து விட்டீர்களே, என்று படபடத்தான்.

அனந்த சயனர் கலகலவென நகைத்தார். நீ என்னைத் தாங்குகின்றாயா? என்னை சுமக்கும் வல்லமையை உனக்களித்து நான்தான் உன்னை பெருமைப்படுத்தியிருக்கிறேன். சந்தேகமாயிருந்தால் என் வலக்கரத்தை உன்மேல் வைக்கிறேன். என வலக்கையால் கருடனை அழுத்த, அதைத்தாங்க இயலாமல் சிறகுகள் உதிர, விழிகள் பிதுங்க, துவண்டு பூமியில் விழுந்தான். கருடன் பயந்து பெருமாளின் காலடியில் சரணாகதியடைந்தான். தவறை உணர்ந்து கருடன், தயாபரா! என்னை மன்னிக்க வேண்டும் எனக் கதற, பட்சிராஜனின் மேலிருந்த கையை எடுத்தார் மாதவன். கருடனுக்கு சக்தி வந்தது. புதிய சிறகுகள் முளைத்தன. நாரணரைப் பணிந்தான். சுமுகனைத் தூக்கி கருடன் மேல் போட்டவர், அவனையும் என்னோடு சேர்த்துத் தாங்குவாயாக! என்றார் பரந்தாமன். மாதலி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

Advertisement
 
Advertisement