Advertisement

துரித வாழ்வில் கார்த்திகை விளக்கும் தப்பவில்லை!

மடத்துக்குளம் : மெழுகால் உருவாக்கப்பட்ட பல வண்ண விளக்குகளுக்கு, பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. விளக்கை எடுத்து துடைத்து சுத்தம் செய்து, எண்ணைய் ஊற்றி, திரி அமைத்து, ஒவ்வொன்றாக பற்ற வைத்து, தட்டில் வைத்து தடுமாறாமல் எடுத்து சென்று வீட்டின் பல இடங்களில் வைத்து, அலங்கரிக்க வேண்டும்.சில மணி நேரத்துக்கு பின், மீண்டும் விளக்குகளை சேகரித்து, அடுத்த நாள் மீண்டும் அதே விளக்கை துடைத்து...உஸ்...அப்பாடா! இதெல்லாம் அந்த காலம். இப்போது காலம் மாறி விட்டது.இப்போது ரெடிமேடு விளக்கு வந்து விட்டது. அதுவும் கண்ணை கவரும் கலர்களில். எண்ணெயும் வேண்டாம்; திரியும் வேண்டாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து, தீ பற்ற வைக்கலாம். அப்புறம் அது பற்றி கவலையே வேண்டாம். தானாக எரிந்து அணைந்து விடும். கடந்த சில ஆண்டுகள் வரை, களிமண்ணில் செய்து, தீயில் சுட்ட விளக்குகளே விழா காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இதற்கு மாற்றாக புதுமையான விளக்குகள், கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. மெழுகில் திரி அமைத்து, சிறிய கேக் வடிவில் விளக்கை தயாரித்துள்ளனர்.

அரை மணி நேரம் வரை சும்மா, நின்று எரியும் அளவுக்கு, இந்த விளக்கில் மெழுகு உள்ளது. எதற்கும் நேரமில்லாத, பணிக்கு செல்லும் பெண்கள், மெழுகு விளக்கை வரவேற்றாலும், மூத்த பெண்மணிகளின் கருத்து வேறாக உள்ளது. அவர்கள் கூறுகையில், ’விளக்கு வைப்பதன் நோக்கம், இருளை அகற்றுவது மட்டுமல்ல. அதில் பயன்படுத்தும் நல்லெண்ணெய், நெய், இழுப்பு எண்ணெய், வேம்பு எண்ணெயில் இருந்து வரும் புகை சுவாசிப்பதால், பல நோய்கள் குணமடையும். இதற்காகதான் நம் முன்னோர்கள் எண்ணெயால் எரியும் விளக்கை உருவாக்கினார்கள். மெழுகு விளக்கில் இந்த மருத்துவ குணம் இல்லை’ என்றனர்.

Advertisement
 
Advertisement