Advertisement

பாவை தந்த பாவை!

ஆண்டாள் பிறந்தது ஆடியில் என்றால், மாலை சூடித்தந்து திருமாலை மணந்த அந்தப் பாவை பாடிய திருப்பாவை பிறந்தது, மார்கழியில். மாதவனுக்குப் பிரியமான மார்கழி மாதத்துக்கு இன்னும் என்னவெல்லாம் சிறப்பு உண்டு?

மார்கழி நோன்பு: கன்னிப் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்தாற்போல கணவன் அமையவும், விரும்பியவரையே மணவாளனாக அடையவும் நோன்பு இருப்பது வழக்கம். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தங்கள் தோழியருடன் சென்று நீராடிவிட்டு நல்ல கணவர் வேண்டும் என்று வழிபடுவதே இந்த நோன்பின் முக்கிய அம்சமாகும். மார்கழி மாதம் 30 நாளும் இந்த நோன்பை கடைப்பிடிப்பது விசேஷம் என்பதால் இதை மார்கழி நோன்பு, பாவை நோன்பு என்பர். மாலவனுக்கு மணமாலை சூட்டிட வேண்டி ஆண்டாளும் இந்த மார்கழி நோன்பு இருந்தாள். மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் தங்களை இந்த முப்பது நாளும் அழகுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். பருப்பு, கூட்டு, குழம்பு, பொரியல் என்று வகையாகச் சாப்பிட மாட்டார்கள். உப்புப் போட்ட கஞ்சியை மட்டுமே அருந்துவர் எப்போதும் இறைவனை தொழுதுகொண்டே இருப்பர்.

ஆண்டாளுக்குசீர்: மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனைக் கைப்பிடித்ததும் நூறு அண்டா அக்கார வடிசலும், நூறு அண்டா வெண்ணெயும் தருவதாக அழகர் மலை அழகரிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆண்டாளால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற இயலவில்லை. காரணம், ரங்கன் கரம்பிடித்த அக்கணமே அவனோடு ஐக்கியமாகிவிட்டாள் ஆண்டாள். இதை அறிந்த ராமானுஜர், ஆண்டாளின் வேண்டுதலை தாம் நிறைவேற்றினார். அதனால் ஆண்டாளுக்கு ராமானுஜர் அண்ணன் ஆனார். அதோடு ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாளின் பிறந்த வீடு ஆனது. போகியன்று ராமானுஜர் ஆண்டாளுக்கு பிறந்த வீட்டு சீர் கொடுத்தார். இதை உறுதிப்படுத்த இக்காலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் போகிதினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சீர் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

பாவை கை பச்சைக்கிளி: ஆண்டாள் பாவை நோன்பு இருந்த போது கிளியின் மூலமாகவே ரங்கநாதருக்கு தூது விட்டாள். அந்தக் கிளிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே ஆண்டாள் கோயிலில் தினமும் ஒரு புதுக்கிளி செய்து ஆண்டாள் கரத்தில் வைக்கப்படுகிறது. மறுநாள் அந்தக் கிளியை பக்தர் யாருக்காவது ஆண்டாளின் பரிசாகக் கொடுத்து விடுவார்கள்.

அம்பா ஆடல்: பழங்காலத்தில் மார்கழி மாதம் பதினைந்தாம் தேதி தொடங்கி பெண்கள் தை நீராடுவார்கள். அதற்கு அம்பா ஆடல் என்று பெயர். அம்பா என்றால் தேவி. தை நீராடல் மழைவளம் தரக்கூடியது.

கருட தரிசனம்: ஆண்டாள் திருமணத்தின்போது ரங்கநாதரை கருடாழ்வார் விரைவாக சுமந்து சென்றார். இதனால் கருடனை பெருமாளும் ஆண்டாளும் தங்கள் அருகிலேயே வீற்றிருக்கச் செய்துள்ளனர். கருடாழ்வார் என்பது பெரியாழ்வார்தான் என்ற கருத்தும் உள்ளது. கருட தரிசனம் செய்யும்போது இரு கைகளையும் கூப்பி வணங்கக்கூடாது. வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களையும் மாறி மாறித் தொட்டுக்கொள்ள வேண்டும். இப்படி மூன்று முறை தொடுவதே கருடனை தரிசிக்கும் முறையாகும்.

நகரா மண்டபங்கள்: மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தினமும் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாளுக்கு அர்த்த ஜாமபூஜை நைவேத்யம் ஆனபிறகுதான் உணவு உண்பதும் வழக்கம். நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்ததும் கோயிலில் பறை ஒலிக்கும். வழிநெடுக மண்டபங்களில் நகரா முரசுகள் வைக்கப்பட்டிருக்கும். பறை ஒலி கேட்டதும் முதல் மண்டபத்தில் அடிக்கும் முரசின் ஒலி அடுத்த மண்டபத்துக்குக்கேட்க, அதைத் தொடர்ந்து மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையிலுள்ள முரசு ஒலிக்கும். அந்த ஒலி கேட்ட பின்புதான் திருமலை நாயக்கர் உணவருந்துவார். இந்த மண்டபங்கள் நகரா(முரசு) மண்டபங்கள் எனப்பட்டன.

ஆந்திராவில் ஆண்டாள்: ஆண்டாள் தமிழுக்கு மட்டுமே உரியவர் என்று நினைத்தால் அது தவறு. ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ஆண்டாளை தேவியரில் ஒருவராக காணலாம். ஆண்டாளின் பக்தியும் வாழ்க்கையும் மன்னர் கிருஷ்ணதேவராயரைக் கவர அதன் பலனாக ஆண்டாள் பற்றி ஆமுக்த மால்யதா என்ற பெயரில் 900 பாடல்களில் ஒரு காவியம் படைத்தார். தெலுங்கில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாக இந்த நூல் திகழ்கிறது. அத்துடன் ஆண்டாள் பெயர் தெலுங்கு தேசம் முழுவதும் பரவி கோயிலிலும் இடம் பெற்று விட்டார்.

துளசித் தோட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த துளசி வனத்தில் கன்னிப்பெண்கள் அமர்ந்து மனம் உருக பிரார்த்தனை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும் என்பது ஐதிகம்.

வாசலில் பூசணிப்பூ: மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து பசுஞ்சாணத்தைக் கரைத்துத் தெளித்து, வாசலை சுத்தம் செய்துவிட்டு பெரிய கோலம் போடுவதும், அதன் நடுவே சாணியை உருட்டி வைத்து அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்திப்பூவை செருகி வைப்பதும் உண்டு. இப்படிப் பூ வைக்கும் பழக்கத்துக்கு இரு காரணங்கள் சொல்லப்படுகிறது.

பாரதப்போர் நடந்தபோது பாண்டவர்களையும், அவர்களது படை வீரர்களும் தங்கி இருக்கும் இடத்தினை அடையாளம் கண்டு கொள்வதற்காக வியாசர் வாசல் கோலத்தில் பூ வைக்கச் செய்தார். இதன் மூலம் கவுரவர்களின் தாக்குதல்களில் இருந்து பாண்டவர்கள், கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்டனர். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்வதாகச் சொல்கிறார்கள்.

மற்றொரு காரணம் வித்தியாசமானது. சங்க காலத்தில் யார் வீட்டில் திருமணத்துக்குத் தயாராக இளம் பெண்கள் இருக்கிறார்களோ அவர்களது வீட்டு வாசலில்தான் இப்படிக் கோலத்தின் நடுவில் பூசணிப்பூவை வைப்பார்கள். மகனுக்கு வரன் தேடிடும் பெற்றோர்க்கு இது எளிதான வழிகாட்டியாக இருந்தன.அதிகாலையில் கோலம்போடும் போது பெண்ணைப் பார்ப்பார்கள். பிடித்திருப்பின் தை மாதம் பிறந்ததும் திருமணம் பேசி முடிப்பார்கள்ஞூ. இதனால்தான் வாசலில் பூ வைக்கும் பழக்கம் தோன்றியதாக ஆதாரக் குறிப்புகள் உள்ளன.

மார்கழி அம்பிகையர்: மார்கழி மாதத்தில் பின்வரும் அம்பிகையரை தரிசனம் செய்தால் அனைத்து செல்வமும் கிடைக்கும். பிறவிப்பிணிகள் தீரும் என்பது ஐதிகம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாள், திருவண்ணாமலை - அபிதகுஜாம்பிகை, திருவாரூர் - கமலாம்பிகை, குற்றாலம் - குழல்வாய்மொழி அம்மை, நெல்லை - காந்திமதியம்மை, நாகை - நீலாயதாட்சி, திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி, வைத்தீஸ்வரன் கோயில் - தையல்நாயகி, திருவையாறு - அறள்வளர்த்தநாயகி, திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி திருச்சி - மட்டுவார் குழலி.

அஷ்டமி பிரதட்சிணம்: சிவபெருமானிடம் ஒரு தடவை பார்வதி தேவி மனிதர்கள் பிறப்பு இறப்பு இல்லாமல் முக்தி அடைய என்ன வழி? என்று கேட்டார். அதற்கு சிவபிரான் மார்கழி மாதம் சுக்லபட்ச அஷ்டமி தினத்தன்று திருக்கோயிலை வலம் வந்து வழிபட்டால் பூவுலகில் சகல நலன்களும் பெற்று முடிவில் துன்பம் விலகி முக்தி அடைவார்கள் என்றார். அன்று அருகில் உள்ள சிவன்கோயிலுக்குச் சென்று வலம் வந்து பலன் பெறலாம்.

பீடை மாதமா?: மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவதற்குரிய உன்னதமான மாதமாகும். முழுமையான விரதத்தை மார்கழியில் கடைப்பிடிக்க வேண்டும். எனவேதான் மற்ற வேலைகள் மூலம் இறை உணர்வு சிதறி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. அடுத்துவரும் மாதங்களில் நடக்க வேண்டிய நல்ல நிகழ்வுகளுக்கு தெய்வ அருள்கிட்ட அஸ்திவாரம் இட்டுக்கொள்ள வேண்டிய மாதம் என்பதால் இது பீட மாதமே, தவிர பீடை மாதம் இல்லை என்பதே உண்மை.

Advertisement
 
Advertisement