Advertisement

வாராரு... வாராரு... அழகர் வாராரு...: மதுரை வைகையில் இறங்கினார்!

அழகர்கோவில்: கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி புறப்பட்ட கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் வைகை ஆற்றில் காலை 6.20 மணிக்கு இறங்கினார். அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா ஏப்., 18ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான வைகையில் கள்ளழகர் இறங்குதலுக்காக, 20ம் தேதி மாலை 6.45 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டார். ராஜ கோபுரத்தில் வீற்றிருக்கும் 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7.50 மணிக்கு மதுரை புறப்பட்டார்.
எதிர்சேவை: வழியில் மண்டகபடிகளில் எழுந்தருளிய கள்ளழகருக்கு 21ம் தேதி காலை 6.00 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. பின் புதுார், அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம் நடந்தது.ஆற்றில் இறங்கீினார்: இன்று (ஏப்., 22) அதிகாலை 2.00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசுவாமி சன்னதி முன் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். பின் காலை 6.20 மணிக்கு வைகையில் இறங்கினார். காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, காலை 10.00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் செல்கிறார். சாப விமோசனம்: ஏப்., 23ல் காலை சேஷ வாகனத்தில் புறப்படும் அவர், மதியம் 12.00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.

பூப்பல்லக்கு: பின் இரவு 8.00 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 24ல் காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையிலும், நள்ளிரவு 2.00 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கிலும் எழுந்தருளுகிறார். அங்கிருந்து புதுார், அப்பன்திருப்பதி வழியாக ஏப்., 26ல் அழகர்கோவில் செல்கிறார்.

உற்சவராக வீரபாகு: அழகர்கோவிலில் மூலவராக பரமசுவாமி, சுவாமி புறப்பாட்டின் போது உற்சவர் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பர். மூலவர் பரமசுவாமிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தைலக்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டுள்ளதால் ஆக., 1 வரை உற்சவர் சுந்தரராஜ பெருமாளை மட்டும் பக்தர்கள் தரிசிக்கலாம். திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படுவதால், வீரபாகு அருள்பாலிப்பார்.கள்ளழகர் புறப்படும் போது கருப்பண சுவாமி சன்னதி எதிரில் இரண்டு மணி நேரம் வாணவேடிக்கைகள் நடக்கும். கொல்லம் கோயிலில் நடந்த வாண வேடிக்கையின் போது தீ விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக அறநிலையத்துறை தடையுள்ளதால் வாண வேடிக்கைகள் நடத்தவில்லை. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement