Advertisement

கோவிந்தா கோஷம் முழங்க உலா வந்த வீரராகவப் பெருமாள் தேர்!

திருப்பூர்: கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், ÷ காலாகலமாக நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 14ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. 15ல் கொடியேற்றம் நடைபெற்றது. ஏழாம் நாள் திருவிழாவாக, நேற்று முன்தினம், விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

நேற்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் தேரோட்டம், கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடைபெற்றது. நிலையில் நின்றிருந்த தேரில், முத்தங்கி ராஜ அலங்காரத்தில் வீற்றிருந்த ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. யாத்ரா தான பூஜையை தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிற்பகல், 3:40 மணியளவில், தேரோட்டத்தை, மேயர் விசாலாட்சி வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்ஷினி, கோவில் செயல் அலுவலர் சிவராமசூரியன் முன்னிலை வகித்தனர். முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் என, அனைவரும், பக்தி பரவசத்துடன், வடம் பிடித்து தேர் இழுத்தனர். அசைந்தாடி ஓடிய தேருக்கு முன், பெண்களின் கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், ட்ரம்ஸ் இசை முழக்கம், நாதஸ்வர மேள தாளம், செண்டை மேளம் என, வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வடம் பி டித்து இழுத்த பக்தர்களுக்கு, குடிநீர், இனிப்பு, புளிசாதம், சாக்லேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பெருமாள் கோவில் அருகில் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய ஜவுளிக்கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜ் ரோடு, பூக்கடை கார்னர் வழியாக, மாலை, 6:15 மணியளவில், தேர் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும், வீதிகளின் இருபுறமும் காத் திருந்த பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர். உதவி கமிஷனர் மணி தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒன்பதாம் நாளான இன்று, பரிவேட்டை நிகழ்ச்சி, நாளை, தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

Advertisement
 
Advertisement