Advertisement

சென்னையில் ரூ.50 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு!

சென்னை: சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளியின் சென்னை வீட்டில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 சுவாமி சிலைகளை போலீசார் நேற்று மீட்டனர்; இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தீனதயாள், 68. சென்னை, ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில், இரண்டு மாடிகள் உடைய வீட்டில் வசித்து வந்தான். வீட்டின் தரை தளத்தில், அவன், பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும், ‘ஆர்ட் கேலரி’யை நடத்தி வந்தான்.

ஐம்பொன் மற்றும் கற்களால் செய்யப்பட்ட, பழங்கால சுவாமி சிலைகளை, மும்பை வழியாக, வெளிநாடுகளுக்கு அவன் கடத்தி வருவதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை, தீனதயாளின் சென்னை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பார்சல் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 பழங்கால சுவாமி கற்சிலைகளை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: தீனதயாள், 1965ல் இருந்து, சுவாமி சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் பெங்களூரில் வசிக்கிறார்; மகன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளான். பெரும் கோடீஸ்வரரான தீனதயாள், சென்னை, தேனாம்பேட்டையில், தன் மனைவி பெயரில், ‘அபர்ணா ஆர்ட் கேலரி’ என்ற பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை கூடம் நடத்தி வந்தான். அதேபோல், சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்ரஞ்சன் சாலையிலும், ‘ஆர்ட் கேலரி’ நடத்தி வந்தான். பழங்கால சுவாமி சிலைகளை கடத்துவதே இவனது பிரதான தொழில்.

அதற்காக, தமிழகம் முழுவதும் சிலைகளை திருடி வர ஆட்களை நியமித்துள்ளான். அவர்களிடம் குறைந்த விலைக்கு சிலைகளை வாங்கி, அதிக விலைக்கு கைமாற்றி விடுவதில் பெரிய கில்லாடி. ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள கோவிலில் சிலைகள் திருடிய வழக்கில், 2005ல் கைதாகி உள்ளான். ஜாமினில் வெளிவந்த பின், சென்னையில் உள்ள, ‘ஆர்ட் கேலரி’யை மூடிவிட்டு, ஆந்திராவுக்கு சென்று விட்டான். அங்கு இருந்து, மும்பை வழியாக, வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்த முயன்றுள்ளான்; இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், தாய்லாந்துக்கு தப் பிய அவன், மீண்டும் சென்னைக்கு வந்து சிலை கடத்தும் தொழிலில் ஈடுபட துவங்கி உள்ளான். தீனதயாள், சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளி. இரண்டு பேருக்கும், அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், ஆஸ்திரேலியா என, பல நாடுகளில் ஐம்பதுக்கும் ÷ மற்பட்ட ஏஜன்ட்கள் உள்ளனர். அவர்கள் மூலம், குழந்தை சம்பந்தர், தெய்வானை உள்ளிட்ட பல சிலைகளை கடத்தி உள்ளனர். சர்வதேச சந்தையில் விலை அதிகம் என்பதால், தஞ்சை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, சோழர்கால சிலைகளை திருடி, கடத்தி உள்ளனர்; கடத்தப்பட்டவை எத்தனை சிலைகள் என, கணக்கெடுத்து வருகிறோம். கடந்த, 2008ல், சுபாஷ் சந்திர கபூர் கைதுக்கு பின், தீனதயாள், நியூயார்க்கில், தன் மகன் கிருதயாளை ஏஜன்டாக நியமித்து, அவன் மூலமாகவே சிலைகளை கடத்தி, வெளிநாடுகளில் விற்றுள்ளான்.

தற்போது அவனிடம் இருந்து, சிவலிங்கம், தட்சணாமூர்த்தி, ஆயிரம் கிலோ எடை உடைய விநாயகர் உட்பட, 55 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த சிலைகள், 100 முதல 1,700 ஆண்டுகள் பழமையானவை என, கண்டறிந்துள்ளனர். தீனதயாள் பெங்களூருக்கு தப்பி விட்டான். அவனை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவன், ஒரு கோவிலில் உள்ள துாண், சிலை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் திருடி வந்து, பதுக்கி வைத்து இருந்தான். கருடாழ்வார் சிலையை கடத்த, பார்சல் செய்து கொண்டு இருந்த போது, தீனதயாளின் மேலாளர் மற்றும் உதவியாளர்கள், சென்னையைச் சேர்ந்த, ராஜாமணி, 60, குமார், 58, மான்சிங், 58, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement
 
Advertisement