Advertisement

தாய் ஆர்யாம்பாளின் பிரிவு

சிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள் சங்கரருக்கு தம் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும், அவளுடைய இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் யோகசக்தியால் உணர்ந்தார். தம் சீடர்களிடம் தாயின் நிலையைக் கூறிவிட்டு, ஆகாயமார்கமாக காலடி வந்தடைந்தார். தாயாரைத் தேற்றினார். மகனைக் கண்டதில் தாயாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தாயாரைப் பார்த்து சங்கரர் மிக்க அன்புடன், அம்மா! கவலைப்படாதே. உனக்கு என்ன ஆசை என்று கூறு என்றார். தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் கேட்க, சங்கரரும் உடனே சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார். சிவகணங்கள் உடனே அங்கு தோன்றினர். அவர்கள் சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி இருந்தனர். இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது. உடனே விஷ்ணு தூதர்கள் தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார் சங்கரர். உறவினர்களும், ஊர்க்காரர்களும் சன்னியாசியான சங்கரர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்றனர். சங்கரர் மனம் தளரவில்லை. தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே சங்கரர் உலக சம்பிரதாயத்தையும் மீறாமல், அதே சமயத்தில் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், தன் வீட்டுக்கருகில் கட்டைகளை அடுக்கி தன் யோகசக்தியால் வலது கையிலிருந்து அக்னியை உண்டு பண்ணி அதனால் தாயாரின் தகனக்கிரியைகளை செய்து முடித்தார்.

பத்மபாதரது தீர்த்தயாத்திரை: ஒரு நாள் பத்மபாதர் குருவிடம், தீர்த்தயாத்திரை செல்ல அனுமதி கேட்டார். சங்கரர் யாத்திரையின் சிரமங்களைக் கூறி யாத்திரையினால் சன்னியாசியின் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது இயலாது என்றும் உபதேசித்தார். பத்மபாதர் நிர்பந்தம் செய்யவே சங்கரர் அனுமதி கொடுத்தார். குருவினிடம் அனுமதி பெற்று பத்மபாதரும் தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டார். சிருங்கேரியிலிருந்து கிளம்பிய பத்மபாதர் காளஹஸ்தி, காஞ்சி முதலிய தலங்களில் தரிசனம் செய்து கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அங்கு அவருடைய தாய்மாமன் வீட்டில் தங்கினார். அந்த தாய்மாமன் பிரபாகர் என்பவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர். அதைக் கண்டித்து சங்கரரால் எழுதப்பட்ட நூலுக்கு பத்மபாதர் அழகான உரை எழுதியிருந்ததைக் கண்டு தாய்மாமன் வருந்தினார். ஆனால் அதை தாய்மாமன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு முறை பத்மபாதர், தன் மாமனிடம் தான் ராமேஸ்வரம் போய்வர உத்தேசித்திருப்பதாகவும், அதுவரை தன்னால் இயற்றப்பட்ட நூலைப் பாதுகாக்கும்படியும் சொல்லிவிட்டு புறப்பட்டார். தன் கொள்கைக்கு விரோதமாக இருந்த நூலை ஒழிக்க எண்ணிய மாமன், அவர் வீட்டிற்கே தீ வைத்து எறித்து விட்டார். ராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பத்மபாதர் தனது நூலைத் தரும்படி மாமனிடம் கேட்டார். தற்செயலாக வீட்டில் நெருப்புப் பிடித்து எரிந்ததில் அந்த நூலும் போய்விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டவற்போல் கூறினார். இதைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாலும் மறுபடியும் அந்த நூலை எழுதப்போவதாக பத்மபாதர் கூறினார். இதைக்கேட்டு பயந்த மாமன், பத்மபாதர் மறுபடியும் எழுதாமலிருப்பதற்காக உணவில் விஷத்தை சேர்த்துக் கொடுத்துவிட்டார். புத்திக் கலக்கம் அடைந்த பத்மபாதருக்கு மறுபடியும் எழுதமுடியாமல் போய்விட்டது. இதனால் மிகவும் வருந்தினார். சங்கரர் தாயாரின் இறுதி சடங்குக்காக கேரளத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார் பத்மபாதர் . எல்லா விவரங்களையும் குருவிடம் தெரிவித்து, புத்தகம் எரிந்து போனதையும் மறுபடியும் எழுதமுடியாமல் புத்தி கலங்கியிருப்பதையும் கூறி கதறினார். இதைக் கேட்ட சங்கரர், கர்மாவின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. ஆனாலும் புத்தகம் எழுதியவுடன் நீ என்னிடம் வாசித்து காட்டிய பகுதி மாத்திரம் என் ஞாபகத்தில் இருக்கிறது. அதைச் சொல்கிறேன் எழுதிக்கொள் என்று கூறி சமாதானப்படுத்தினார். இவ்வாறு சங்கரர் கூறி பத்மபாதர் எழுதி வெளிவந்தது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.

Advertisement
 
Advertisement