Advertisement

ஆடிக்கிருத்திகை: சென்னை முருகன் கோவில்களில் திருவிழா கோலம்

ஆடிக் கிருத்திகை விழா, முருகன் கோவில்களில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அலகு குத்தி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

முருகப்பெருமானுக்கான முக்கிய விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா, முருகன் கோவில்களில் சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், விடியற்காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. மூலவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை, இரவு திருவீதியுலா ஆகியனவும் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி, வழிபட வசதியாக, கட்டண தரிசனத்திற்கும், சாதாரண தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர் குழுவினர் சார்பில் அன்னதானம், நீர் மோர் தானம் ஆகியவை வழங்கப்பட்டன.

வடபழனி கோவில்: வடபழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பள்ளி அறை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலுக்கு வர துவங்கி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். பெண் பக்தர்கள் பலர் அகல் விளக்கு ஏற்றி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

அதேபோல, சென்னை, கந்தக்கோட்டம், பெசன்ட் நகர் அறுபடை வீடு, திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, மயிலம் மற்றும் அறுபடை வீடு தலங்களிலும் மற்ற முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பிற்கு அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குன்றத்துாரில் கொண்டாட்டம்: திருக்கோவில்கள் சூழ்ந்த நகரம் என்று கூறப்படும், குன்றத்துாரில் மலையின் மேற்பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் 16 கால் மண்டபமும், மலைக்கு செல்வதற்காக 84 படிக்கட்டுகளும் உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இக்கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, தங்க கவசம், புஷ்ப அலங்காரம், மோட்ச தீபாராதனை வழிபாடு, பொது தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமியை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, சிறப்பு, தனி, பொது வழிபாடு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகத்தின் சார்பில், பிராட்வே, பூந்தமல்லி, வடபழனி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து, பேருந்து, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement