Advertisement

மகத்தான கண்காட்சி

1899-இல் பாரிஸில் மகத்தான கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்காகச் செய்யப்பட்டு வந்த விமரிசையான ஏற்பாடுகளைக் குறித்துப் பத்திரிகையில் படித்திருந்தேன். எனக்குப் பாரிஸைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. ஆகையால், இச்சமயத்தில் அங்கே போனால் இரண்டையுமே பார்த்ததாகும் என்று எண்ணினேன். கண்காட்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இருந்தது, எப்பீல் கோபுரம். அது முழுக்க முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. சுமார் ஆயிரம் அடி உயரம் இருக்கும். கவர்ச்சியான மற்றும் பல பொருள்களும் காட்சியில் இருந்தன. ஆனால், எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக இருந்தது அந்தக் கோபுரமே. ஏனெனில் அவ்வளவு உயரமான ஒரு கட்டுக்கோப்பு, விழுந்து விடாமல் எப்போதும் நிற்க முடியாது என்று அதுவரையில் கருதப்பட்டு வந்தது.

பாரிஸில் சைவ உணவு விடுதி ஒன்று உண்டு என்று கேள்விப் பட்டிருந்தேன். அங்கே ஓர் அறையை அமர்த்திக் கொண்டு, ஏழு நாட்கள் தங்கினேன். பாரிஸூக்குப் பிரயாணம் செய்ததிலும் அதைச் சுற்றிப் பார்த்ததிலும் மிகச் சிக்கனமாகவே செலவழித்துச் சமாளித்துக் கொண்டேன். பாரிஸின் அமைப்புப் படத்தையும் கண்காட்சியின் விவரங்களும் படமும் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு, அவற்றின் உதவியால் பெரும்பாலும் நடந்தே சென்று, எல்லாவற்றையும் பார்த்தேன். முக்கியமான தெருக்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் வழி தெரிய அவைகளே போதுமானவை.

கண்காட்சி மிகப் பெரியது. பலவகையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்பொழுது நினைவு இல்லை. எப்பீல் கோபுரத்தில் இரண்டு. மூன்று தடவை நான் ஏறியதால் அதுமாத்திரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் முதல் அடுக்கில் ஒரு சாப்பாட்டு விடுதி இருந்தது. வெகு உயரத்தில் நான் மத்தியானச் சாப்பாடு உண்டேன் என்று சொல்லிக் கொள்ளுவது சாத்தியமாக வேண்டும் என்ற திருப்திக்காக மாத்திரம் எழு ஷில்லிங்கை அங்கே தொலைத்தேன்.

பாரிஸிலுள்ள புராதனமான கிறிஸ்தவாலயங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அவற்றின் கம்பீரமான தோற்றமும் அங்கிருந்த அமைதியும் என்றும் மறக்க முடியாதவை. நோத்ரதாம் கோயிலின் அற்புதமான அமைப்பும், உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோயில்களைக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாகக் கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.

பாரிஸ் நகரின் நாகரிக வாழ்க்கையைக் குறித்தும், களியாட்டங்களைப் பற்றியும் நான் நிரம்பப் படித்திருந்தேன். அவற்றிற்கான அறிகுறிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்பட்டன. ஆனால், இக் காட்சிகளுக்கெல்லாம் புறம்பானவைகளாகவே கிறிஸ்தவாலயங்கள் இருந்தன. இக்கோயில்கள் ஒன்றினுள் ஒருவன் போய் விடுவானாயின், வெளியிலுள்ள சப்தங்களையும் சந்தடிகளையும் அவன் மறந்தே போவான். உடனே அவனுடைய தன்மையே மாறிவிடும் கன்னி மேரியின் சிலை முன்பு மண்டியிட்டுத் தொழும் ஒருவனை கடந்து சென்றதுமே அவன் கண்ணியமாகவும் பக்தியோடும் நடந்து கொண்டு விடுவான். இவ்விதம் முழந்தாள் இடுவதும், பிரார்த்தனை செய்வதும் வெறும் மூட நம்பிக்கைகளாக இருக்க முடியாது. கன்னி மேரியின் முன் பயபக்தியுடன் மண்டியிட்டுக் கொண்டு வணங்கியவர்கள் வெறும் சலவைக்கல்லை மாத்திரம் வணங்கியவர்களாக இருக்க முடியாது என்று அப்பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி, அது முதலே என்னுள் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் கல்லை வணங்கவில்லை, உண்மையான பக்தியால் பரவசம் அடைந்து, அக்கல் எதற்கு அறிகுறியாக நின்றதோ அந்தத் தெய்வீக சக்தியையே அவர்கள் வணங்கினார்கள். இத்தகைய பிரார்த்தனைகளினால் அவர்கள் கடவுளின் மகிமையை வளர்த்தார்களேயல்லாமல் குறைத்து விடவில்லை என்றும் அப்பொழுது எனக்குத தேன்றியதாக நினைவிருக்கிறது.

எப்பீல் கோபுரத்தைப்பற்றியும் இங்கே ஒரு வார்த்தை கூற வேண்டும். அந்தக் கோபுரம் இன்று எவ்விதம் பயன்படுகிறது என்பது தெரியாது. ஆனால், அதைக் குறித்துப் பலர் குறை கூறினர் என்றும், மற்றும் பலர் போற்றினர் என்றும் அப்பொழுது அறிந்தேன். அதைக் குறை கூறியவர்களில் முக்கியமானவர் டால்ஸ்டாய். எப்பீல் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமேயன்றி அவனுடைய அறிவுக்குச் சின்னம் அல்ல என்று அவர் கூறினார். போதை தரும் பொருள்களிலெல்லாம் மிக மோசமானது புகையிலை என்று டால்ஸ்டாய் கூறினார். புகையிலைப் பழக்கம் உள்ளவனை, குடிகாரன் கூடச் செய்யத் துணியாத குற்றங்களைச் செய்துவிடும்படி புகையிலை தூண்டிவிடுகிறது என்றார். மதுபானம் ஒருவனைப் பித்தன் ஆக்கி விடுகிறது, புகையிலையோ, அவன் புத்தியை மயக்கி, ஆகாயக் கேட்டை கட்டும்படி செய்கிறது என்றார். அத்தகைய மதிமயக்கத்தில் மனிதன் சிருஷ்டிப்பவைகளில் ஒன்றே எப்பீல் கோபுரம் என்றும் டால்ஸ்டாய் கூறினார். எப்பீல் கோபுரத்தில் கலைத்திறன் எதுவும் இல்லை. கண்காட்சியின் உண்மையான அழகை இது எந்த விதத்திலும் அதிகரித்ததாகவும் சொல்லுவதற்கில்லை. இதைப் பார்ப்பதற்கு ஏராளமான மனிதர்கள் கூடினார்கள். அது புதுமையாகவும், இணையற்ற வகையில் பெரிதாகவும் இருந்ததால், மனிதர்கள் அதில் ஏறியும் பார்த்தனர். கண்காட்சியில் அதை ஒரு விளையாட்டுப் பொம்மை என்றே சொல்லலாம். நாம் குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கும் வரையில், பொம்மைகள் நமக்குக் கவர்ச்சியாகவே இருக்கும். விளையாட்டு பொருட்களைக்கண்டு மயங்கும் குழந்தைகளே நாம் எல்லோரும் என்ற உண்மையை அக்கோபுரம் நன்றாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அதுவே எப்பீல் கோபுரத்தினால் ஏற்பட்ட பயன் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

Advertisement
 
Advertisement