Advertisement

சீர்காழி ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமி அதிஷ்டான கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை : சீர்காழி ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமி அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. நேபாள நாட்டின் மன்னர் பரம்பரையில் பிறந்த கதிர்காம சுவாமிகள் இலங்கையில் ஆன்மீக தொண்டாற்றி, பின்னர் சீர்காழிக்கு வந்தார். இங்குள்ள உப்பனாற்றாங்கரையில் குடில் அமைத்து தங்கிய கதிர்காம சுவாமிகள் ஆன்மீக பணியுடன், மூலிகைப் பன்னை அமைத்து தீராத நோய்களுக்கும் மருந்து கொடுத்து மக்களை காத்துவந்தார். சீர்காழி, தென்பாதியில் ஸ்ரீ பால தண்டாயுத பானி கோயிலை அமைத்து சுவாமிகள் வழிபட்டு வந்தார். இந்நிலையில் கதிர்காம சுவாமிகள் உப்பனாற்றாங்கரையில் அவர் வாழ்ந்த இடத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் பொது மக்கள் அதிஷ்டானம் அமைத்து ஸ்ரீ காதிர்காம சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.

அதிஷ்டானத்தின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோபுரகலசத்தை அடைந்தது. ஞானகணேச குருக்கள் தலை மையிலானோர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து அதிஷ்டானத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆசிரியர்; கோவி நடராஜன் கதிர்காம சுவாமிகளின் சிறப்புகளை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கதிர்காம சுவாமிகள் டிரெஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement