Advertisement

குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் கோலாகலமாக நடக்குது வளைகாப்பு

விருதுநகர்: விருதுநகர் மல்லாங்கிணர் செல்லும் சாலையில் 80 ஆண்டுகள் பழமையான துள்ளுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

இங்கு புரட்டாசி பொங்கல் விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. பவுர்ணமி மற்றும் மாதாந்திர பூஜைகளும் நடைபெறுகிறது. புரட்டாசி அமாவாசை முடிந்து வளர்பிறை ஞாயிறு அன்று வளைகாப்பு உற்சவம் நடத்தப்பட்டது.

51 வகை சீர் வரிசை: பலம் படைத்தவள் காளி, மக்கள் ஜனம் பெருத்தவள் மாரி என உற்சாகமாக பக்தர்கள் கூறுவார்கள். ஒரு தாய் தன் கருவில் வளரும் குழந்தையை எப்படி பாதுகாக்கிறாளோ, அதுபோல் இவளை நாடி வரும் மக்களை பாதுகாத்து வருவதால் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கோயிலில் மட்டுமே அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடு பக்தர்களும் காணிக்கை அனுப்புகின்றனர். வளைகாப்பு பூஜையன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பெண் வீட்டார் சார்பாக பூஜாரி வீட்டில் இருந்து அம்மனுக்கு 51 வகையான சீர் வரிசை தட்டுகள் சுமந்து ஊர் சுற்றி கோயிலை வந்தடைவார்கள். ஐந்து வகையான சாதங்கள் தயார் செய்து அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

குழந்தை வரம் வேண்டி: கோயில் பூஜாரி சங்கர் கூறுகையில், “குழந்தை வரம் வேண்டுவோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வளையல்கள் வழங்கப்படும். மகப்பேறு பெற்ற பெண்கள் கருவுற்ற நாளில் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொண்டு, அவர்களுக்கு கோயிலிலே வளைகாப்பு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு கோயில் சார்பாக வளைகாப்பு விருந்து நடைபெறும்,”என்றார்.

Advertisement
 
Advertisement