Advertisement

தீப ஒளி திருநாள் கொண்டாட ஆயத்தம்: அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

கரூர்: தீபாவளி மற்றும் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கரூரில் அகல்விளக்குகள் மற்றும் அணையா தீபத்துக்கான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முராக நடந்து வருகிறது. இதுகுறித்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியில், ஐந்தாவது தலைமுறையாக ஈடுபட்டுள்ள கரூர் அடுத்த ஆலமரத்துத்தெரு முத்துச்சாமி கூறியதாவது: நாங்கள், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் காலங்காலமாக ஈடுபட்டு வருகிறோம். என் தலைமுறை தற்போது ஐந்தாவது தலைமுறையாகும். தொழிலை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து குடும்பத்துடன் பணிபுரிந்து வருகிறோம். ஒரு லோடு களிமண், 1,500 ரூபாய்க்கு வாங்குகிறோம். அவர்கள் வெளியே கொட்டி விட்டுச்சென்று விடுவர். அதில் உள்ள செடி, கொடிகளை அகற்றிவிட்டு கட்டியாக உள்ள மண்களை உடைத்து காயவைக்கிறோம். அதன் பின் அந்த களிமண்ணை சலித்து எடுக்கிறோம். இதில், காவிரி ஆற்று மணலை கலந்து, காலால் மிதித்து அகல்விளக்கு மற்றும் அணையா விளக்குகளை தயார் செய்ய பயன்படுத்தி வருகிறோம். தற்போது சிறிய அளவிலான அகல் விளக்கு, 100 எண்ணிக்கை, 50 ரூபாய்க்கு விற்கிறோம். பெரிய அளவிலான அகல் விளக்கு, 70 ரூபாய்க்கு விற்கிறோம். கோவில்களில் ஏற்றப்படும் அணையா விளக்கும் தயாரிக்கிறோம். கால் லிட்டர், அரை லிட்டர், முக்கால் லிட்டர் எண்ணெய் பிடிக்கக்கூடிய அளவில் அதற்கேற்ப அணையா தீப விளக்குகளையும் தயாரித்து வருகிறோம். தற்போது தீபாவளி மற்றும் கார்த்திகை பண்டிகை நெருங்குவதால் அகல்விளக்கு விற்பனை ஓரளவு நன்றாக இருக்கும். ஆனால், கூலிக்கும், செலவுக்கும் மட்டுமே கட்டுப்படியாகிறது. பெரிய அளவில் லாபம் கிடைக்காது. இருப்பினும் காலங்காலமாக இப்பணியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement