Advertisement

வடிவுடையம்மன் கோவிலில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

திருவொற்றியூர்: வடிவுடையம்மன் கோவில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து வெளியிட ஊடகங்களுக்கு, கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. முறைகேடுகளை வெளிப்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். திருவிழா நாட்களில் கோவிலுக்கு வர முடியாதவர்கள், தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் மற்றும் உற்சவ சிலை அலங்கார புகைப்படங்களை பார்த்து, திருப்தியடைவர்.

அனுமதி தேவை: சமீபகாலமாக கோவிலினுள், உற்சவ சிலைகள் அலங்காரத்தை படம் எடுக்க, கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. படம் எடுக்க, உதவி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வளைகாப்பு நிகழ்ச்சி, தியாகராஜ சுவாமி திருநடனம், பந்தம் பறி நிகழ்ச்சி, கொடியேற்றம் போன்ற முக்கிய நிகழ்வுகள் கோவில் வளாகத்தினுள் நடைபெறும். இதை பதிவு செய்து வெளியிடுவது ஊடகங்களின் வழக்கம். நவராத்திரியின் போதே, கொடியேற்றம் நிகழ்ச்சியை படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் அதிருப்தி: அக்.,26 இரவு, ஐப்பசி பூரம் நிகழ்ச்சியின் போது, கோவிலில் படம் எடுக்க அனுமதி கிடையாது என, ஊழியர்கள் ஊடகங்களை தடுத்தனர். இதனால், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாகத்தில் நடப்பது வெளியே தெரியாத வண்ணம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பார்த்துக் கொள்கின்றனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். கடைசியாக, கோவிலின் தங்கத்தேர் பராமரிப்பு குளறுபடி குறித்து வெளியான செய்தியை தொடர்ந்தே, ஊடகங்களை உள்ளே விட வேண்டாம் என, உதவி கமிஷனர் ஆணை பிறப்பித்து உள்ளதாக ஊழியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நிகழ்ச்சிகள் கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு இப்படி தடை இருந்தாலும், அரசியல் கட்சிகள் நடத்தும் பாலாபிஷேகம், யாகங்கள், தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஊடகங்களுக்கு எந்த தடையும் கிடையாது. கோவில் நிர்வாகம், அரசியல் கட்சிகளின் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளிக்கிறது.

பக்தர்கள் சிலர் கூறியதாவது: தடை விதித்தால், அனைத்து நிகழ்ச்சிகளையும் படம் பிடிக்க அனுமதி மறுக்க வேண்டும். கோவில் நிகழ்ச்சிகளை மட்டும் படம் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவது நியாயமல்ல. கோவில் நிகழ்வுகளை அனைவரும் நேரில் காண முடியாது. கோவிலின் சிறப்பை, ஊடகங்கள் வாயிலாக பலர் தெரிந்து கொள்கின்றனர். அதற்கே, கோவில் நிர்வாகம் தடையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்; பாமர மக்களுக்கு ஒரு சட்டமா என்பதை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அமைச்சர் கவனத்திற்கு... திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான தலம் என கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தின் பெருமை, ஊடகங்கள் வாயிலாக மட்டுமே வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு, கோவில் நிர்வாகமே முட்டுக்கட்டையாக இருப்பதை, அறநிலையத்துறை அமைச்சர் கவனிக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை மறைக்க, ஒட்டுமொத்த அறநிலையத் துறைக்கும் அவப்பெயர் ஏற்படாமல் அமைச்சர் தடுப்பார் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

Advertisement
 
Advertisement