Advertisement

ஒரு நூலின் மந்திர சக்தி

கறுப்புப் பிளேக், ஏழை இந்தியரிடையே என் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அதனால், என் தொழில் வருவாயும் அதிகமானதோடு என் பொறுப்பும் அதிகமாயிற்று. புதிதாகத் தொடர்பு ஏற்பட்ட ஐரோப்பியருடன் நெருங்கிப் பழகியதனால் எனக்கு ஒழுக்க ரீதியான கடமைகள் அதிகமாயின. சைவச் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீ வெஸ்ட் எனக்குப் பழக்கமானதுபோல, ஸ்ரீ போலக்கும் அங்கே பழக்கமானார். ஒரு நாள் மாலை, என் மேஜைக்குக் கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இளைஞர், என்னைப் பார்க்க விரும்புவதாக ஒரு சீட்டு அனுப்பினார். என் மேஜைக்கே வருமாறு அழைத்தேன். அவ்வாறே வந்தார். நான், கிரிடிக் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியன். என் பெயர் போலக். பிளேக் சம்பந்தமாகப் பத்திரிகைகளுக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் பார்த்தது முதல் தங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்குப் பலமான ஆர்வம் ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார், அவர். ஸ்ரீ போலக்கின் கபடமற்ற தன்மை என்னை அவர்பால் இழுத்துவிட்டது. அன்று மாலை நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களிலெல்லாம் நாங்கள் இருவரும் ஒரேவிதக் கருத்து உடையவர்களாக இருப்பதாகத் தோன்றியது. இவர் எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். தமது புத்திக்குப் பிடித்தமாக இருக்கும் எதையும் உடனே நடைமுறையில் கொண்டு வந்துவிடும் அற்புதமான ஆற்றல் அவருக்கு இருந்தது. தம் வாழ்க்கையில் அவர் செய்துகொண்ட மாறுதல்கள், தீவிரமானவைகளாக இருந்ததைப் போன்றே துரிதமாகவும் செய்து கொள்ளப்பட்டவைகளாகும். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைக்கு நாளுக்குநாள் செலவு அதிகமாகிக்கொண்டு வந்தது. ஸ்ரீ வெஸ்ட் அனுப்பியிருந்த முதல் அறிக்கையே பீதி தருவதாக இருந்தது. அவர் எழுதியதாவது: “லாபம் வரக்கூடும் என்று நீங்கள் நினைத்தது போல இந்த ஸ்தாபனம் லாபம் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நஷ்டமும் வரலாம் என்றே அஞ்சுகிறேன். கணக்குகள் சரிவர இல்லை. வசூலாக வேண்டிய பாக்கி ஏராளமாக இருக்கிறது. அவைகளின் விவரத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் அடியோடு மாற்றியாகவேண்டும்! ஆனால், இதையெல்லாம் கேட்டு நீங்கள் பீதியடைந்துவிட வேண்டாம். என்னால் முடிந்த வரையில் எல்லாவற்றையும் ஒழுங்காக்க முயல்கிறேன். லாபம் இருந்தாலும் இல்லாதுபோனாலும், நான் இங்கே வேலை பார்க்கவேபோகிறேன்.” அதில் லாபம் எதுவும் வராது என்று கண்டதுமே ஸ்ரீ வெஸ்ட் அந்த வேலையைவிட்டுப் போயிருக்கலாம். அவர்மீது நான் குறை சொல்ல முடியாது. உண்மையில் போதுமான ருசுக்கள் இல்லாமல் அந்த ஸ்தாபனம் லாபம் தரக்கூடியதென்று நான் வருணித்ததற்காக என் மீது குற்றஞ் சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு ஒரு வார்த்தையேனும் அவர் புகார் சொல்லவில்லை. என்றாலும், தாம் கண்டுபிடித்த நிலைமை, நான் எவரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவன் என்று என்னை எண்ணும்படி ஸ்ரீ வெஸ்ட்டைச் செய்திருக்கும் என்பதே என் அபிப்பிராயம். ஸ்ரீமதன்ஜித் கூறியதைப் பரிசீலனை செய்து பார்க்காமலேயே நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதைக்கொண்டு லாபம் வரும் என்று ஸ்ரீ வெஸ்ட்டிடம் சொல்லிவிட்டேன். தமக்கு நிச்சயமாகத் தெரியாதவைகளை வைத்துக்கொண்டு பொதுஜன ஊழியர் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். அதிலும் சத்தியத்தை நாடுபவன் இதில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும். ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டி இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். இந்த அனுபவம் எனக்கு இருந்தும், பிறரைச் சுலபத்தில் நம்பிவிடும் என் சுபாவத்தை நான் இன்னும் போக்கிக்கொண்டுவிடவில்லை. நான் சமாளிக்கக் கூடியதை விட அதிகமான வேலையைச் செய்துவிட எனக்கு இருக்கும் ஆசையே இதற்குக் காரணம். இந்த ஆசை, என்னைவிட என் சக ஊழியர்களுக்கே அதிகத் தொந்தரவாக முடிந்து விடுகிறது. ஸ்ரீ வெஸ்ட்டின் கடிதம் கிடைத்ததும் நேட்டாலுக்குப் புறப்பட்டேன். ஸ்ரீ போலக் என் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் ஆகிவிட்டார். என்னை வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். பிரயாணத்தின்போது படிக்க எனக்கு ஒரு புத்தகம் கொடுத்து விட்டுப் போனார். அது எனக்குப் பிடித்தமான புத்தகமாக இருக்கும் என்றும் சொன்னார். ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூலே அது. இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த பின் நடுவில் கீழே வைக்கவே முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்துகொண்டுவிட்டது. ஜோகன்னஸ்பர்க்கிற்கும் டர்பனுக்கும் இருபத்துநான்கு மணி நேரப்பிரயாணம். ரெயில் அங்கே மாலையில் போய்ச் சேர்ந்தது. அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அந்நூலில் கண்ட லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன். ரஸ்கினின் நூல்களில் நான் படித்த முதல் நூல் இதுவே. நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த காலத்தில் பாடப் புத்தகங்களைத் தவிர அநேகமாக வேறு புத்தகங்களை நான் படித்ததில்லை எனலாம். சேவை வாழ்க்கையில் இறங்கிவிட்ட பிறகு படிப்பதற்கு எனக்கு நேரமே இருப்பதில்லை. ஆகையால், நூல்களைப் படித்த அறிவு எனக்கு உண்டென்றே சொல்லிக் கொள்ளுவதற்கில்லை. என்றாலும், இந்தக் கட்டாயமான தடையால் நான் அதிகமாக நஷ்டம் அடைந்துவிடவில்லை என்றே கருதுகிறேன். ஆனால், இதற்கு மாறாக நான் கொஞ்சமாகப் படித்தது, நான் படித்ததையெல்லாம் அப்படியே முற்றும் கிரகித்துக்கொண்டு விடுவதற்கு உதவியாக இருந்தது. அத்தகைய நூல்களில், என் வாழ்க்கையில் உடனேயே நடைமுறையான மாறுதலை உண்டாக்கிய நூல் கடையனுக்கும் கதி மோட்சம் என்ற நூலேயாகும். பின்னர் அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்து, சர்வோதயம் (சர்வஜன நலம்) என்ற பெயருடன் வெளியிட்டேன். ரஸ்கினுடைய இம் மகத்தான நூலில் என் உள்ளத்தில் உறுதிப்பட்டிருந்த கொள்கைகள் பிரதிபலித்திருப்பதை நான் கண்டுகொண்டதாகவே நினைக்கிறேன். அதனால்தான் அது என்னை ஆட்கொணடதோடு என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும்படி செய்தது. மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி. ஆனால் கவிகள், எல்லோரின் உள்ளங்களிலும் இதேபோன்ற மாறுதல்களை உண்டாக்கி விடுவதில்லை. ஏனெனில், எல்லோரும் சரி சமமான வளர்ச்சியை அடைந்திருக்கவில்லை. கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூல் பின்வருபவைகளைப் போதிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது: 1. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது. 2. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு. 3. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள். இவைகளில் முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ, என் புத்தியில் தோன்றவே இல்லை. இரண்டாவதும் மூன்றாவதும், முதலாவதாகக் கூறப்பட்டிருப்பதிலேயே அடங்கியிருக்கின்றன என்பதைக்கடையனுக்கும் கதி மோட்சம் பட்டப்பகல் போல் எனக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்படி செய்தது. பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவரத் தயாரானேன்.

Advertisement
 
Advertisement