Advertisement

சன்னிதானத்தில் புதிய நடைபந்தல் அமரும் வசதியுடன் அமைக்க ஏற்பாடு

சபரிமலை: பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் 3,800 பக்தர்கள் அமரும் வகையில் புதிய வசதிகளுடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் 2017 மகரவிளக்கு சீசன் முடிந்ததும் தொடங்கும்.

பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சரங்குத்தி வழியாக சன்னிதானம் அருகே வரும்போது பெரிய நடைப்பந்தலில் நீண்ட நேரம் காத்திருந்து 18-ம் படியேறுகின்றனர். இரும்பு கம்பிகளால் உருவாக்கப்பட்ட தடுப்புக்குள் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க பெரிய நடைப்பந்தல் இரண்டு நிலைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு வனத்துறை அனுமதி மறுத்தது. இதை தொடர்ந்து, தற்போது இருக்கும் நடைப்பந்தலின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டுகள் அகற்றப்பட்டு, வெயிலை தாங்கும் அலுமினிய ஷீட்டுகள் வேயப்படும். இவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3800 இருக்கைகள் போடப்படும். ஒவ்வொரு பிரிவாக பக்தர்கள் 18-ம் படிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதன் மூலம் பல மணி நேரம் கம்பி வேலிக்குள் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.இதன் ஒரு பகுதி விருச்சுவல் கியூ -வில் முன்பதிவு செய்பவர்களுக்காக பயன்படுத்தப்படும்.இந்த திட்டத்துக்கு முதன்மை திட்டக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதை தொடர்ந்து வரும் மகரவிளக்கு சீசன் முடிந்ததும் இதற்கான பணிகள் தொடங்கும், என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement