Advertisement

சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு : சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை: மண்டல -மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. அடுத்து மாசி மாத பூஜைக்காக பிப்.,12-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல், 16 முதல் 19 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று தொடர்ந்து மதியம் களபபூஜை நடைபெற்றது.19-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெற்றது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர்.நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி சசிகுமார் வர்மா கோயில் முன்புறம் வந்தார். அவரது முன்னிலையில் கோயில் நடை அடைத்து சாவியையும், பணமுடிப்பையும், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க, அவர் அதை மன்னர் பிரதிநிதியிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு 18-ம் படிக்கு கீழே வந்த அவர், மீண்டும் கோயில் நிர்வாக அதிகாரியிடம் சாவியை கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி சென்றார். இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.

Advertisement
 
Advertisement