Advertisement

வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சதய உற்சவம்

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சுவாமிகளின் சதய உற்சவ விழா நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் சைவ சமய பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு இறைவன் வயிற்று வலி நீக்கி அருளிய கோவிலாக விளங்குகிறது. இங்குதான் தேவார முதல் பாடல் துவங்கியது.

திருநாவுக்கரசர் சதய திருவிழாவையொட்டி இக்கோவிலில் கடந்த 13ம் தேதி திலகவதியார் திருநீற்றை மருள்நீக்கியாருக்கு வழங்கி வீரட்டானேஸ்வரர் அருளால் சூலை நோய் நீங்கி நாவரசர் எனும் திருப்பெயர் பெற்ற நிகழ்ச்சி நடந்தது. கடந்த 14 ம் தேதி சமணர்கள் திருநாவுக்கரசரை நீற்றறையில் இடுதல், அவருக்கு நஞ்சூட்டுதல், அவர்முன் யானையை ஏவுதல் முதலிய நிகழ்ச்சிகளும், நேற்றுமுன்தினம் 15ம் தேதி சமணர்கள் திருநாவுக்கரசரை கடலில் வீழ்த்திய நிகழ்ச்சியும், கறையேறிய ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று திருபெண்ணாடத்து திருத்துாங்கானை மாடத்தில் திருவிலச்சினை பெற்று திருச்சத்தி முற்றத்தில் திருவடி சூட்ட விண்ணப்பித்த நிகழ்ச்சியும், திருநல்லுாரில் திருவடி சூட்டிய நிகழச்சியும் நடந்தது.

இன்று 17 ம்தேதி திங்களூரில் திருநாவுக்கரசர் தம்பெயரால் தண்ணீர் பந்தல், மடம், தடாகம் சோலை முதலியவை அமைத்த அப்பூதியடிகளை கண்டு உரையாடி, உணவு உண்பதற்கு முன் அவரது மூத்த மகன் பாம்பின் விடம் நீக்கிய நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 18ம் தேதி திருவாரூரில் திருவாதிரை திருநாள் மகேஸ்வர பூஜையும், வரும் 19ம் தேதி திருவீழி மலையில் காலநிலைமையால் படிக்காசு பெற்று திருமறைக்காட்டில் மறைக்கதவு திருப்பித்தருளிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 20ம் தேதி பழையாறை வடதளியில் உண்ணா நோன்பு இருந்து சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க பெருமானை வெளிப்படுத்தி வணங்குதலும், வரும் 21ம் தேதி திருப்பைஞ்சீலியில் சிவபெருமான் பொதிசோறு தந்து வழிகாட்டியருளிய நிகழ்ச்சியும், 22ம் தேதி ஐம்பெரும் கடவுளர்களான பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருவையாற்றில் திருக்கயிலாய காட்சி தந்தருளிய நிகழ்ச்சியும், திருபுகளூரில் உழவாரபணி செய்கையில் பொன்னும் மணியும் தோன்ற அவைகளை கற்களுடன் குளத்தில் எறிந்த நிகழ்ச்சியும், சிவபெருமானால் ஏவிய அரம்பையர்களுக்கு விடைகொடுத்தல், திருப்புகளூர் பெருமான் திருவடியில் முக்தி அடைதல் நடக்கிறது.

Advertisement
 
Advertisement