Advertisement

தந்தி மாரியம்மன் தேர்த்திருவிழா: பூகுண்டம் இறங்கிய பக்தர்கள்

குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, 43வது ஆண்டு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு கரக ஊர்வலம் நடந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. பிறகு கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா துவங்கி மீண்டும் வி.பி., தெரு பூகுண்டம் மைதானத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூகுண்டம் இறங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், திரளான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர். ஏற்பாடுகளை, அனைத்து மத நற்பணி மன்றத்தினர், விவேகானந்தா நற்பணி மன்றத்தினர், தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர். குண்டத்துக்கு முன்பு, குன்னுாரில் பெய்த கனமழை உள்ளூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement
 
Advertisement