Advertisement

பால் சுரக்கும் கர்ப்பிணி பசு : சேலம் கோவிலில் அதிசயம்

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் கோசாலை யில் பராமரிக்கப்பட்டு வரும், கர்ப்பிணி பசு மாட்டின் காம்புகளில் இருந்து, பால் தானாக வழிவதால், பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், கோசாலை உள்ளது. இங்கு, இரண்டு பசுக்கள், ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டி ஆகியவை உள்ளன. இதில், கர்ப்பம் தரித்துள்ள, சொர்ணாம்பிகை என்ற பசு மாட்டின் காம்புகளில் இருந்து, பால் தானாகவே வெளியேறுகிறது. தெய்வ பசு என கூறி, பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

கோசாலை பராமரிப்பாளர் சரவணன் கூறியதாவது: இங்குள்ள, இரண்டரை வயதான சொர்ணாம்பிகை என்ற பசு மாடு, ஆறு மாத கர்ப்பமாக உள்ளது. மாட்டின் மடி காம்புகளில் இருந்து, பால் தானாகவே வெளியேறி வருகிறது. தொழுவத்தில் படுக்கும் நிலையிலும், பால் வெளியேறுகிறது. தொழுவத்தின் பல இடங்களில், வெள்ளை நிற கறைகள் காணப்படுகின்றன. பால், வெள்ளை நிறத்தில் உள்ளது. டாக்டர்களின் அறிவுரைப்படி, மாட்டின் நலன் கருதி, பாலை கறந்து, கோவிலுக்கு அபிஷேகத்துக்கு வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மாட்டை, சேலம் கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் லோகநாதன், டாக்டர்கள் தெய்வேந்திரன், கோபி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், டாக்டர் கோபி கூறியதாவது: இது, அதிசயமாகத்தான் உள்ளது. அதிக தீவனம், தேவைக்கு மிகுதியான உடல் சத்துக்களை பெறும் நிலையில், பால் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கையில், அதிகரிப்பு ஏற்படும். இதனால், தானாகவே காம்புகளில் இருந்து, பால் வெளியேறும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், அதிகமாக அகத்தி கீரையை மாட்டுக்கு வழங்கியதால், பால் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகரித்ததா என்பது குறித்தும், ஆய்வு நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement