Advertisement

தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம்

தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தனாரை இளங்கோவடிகள் தண்டமிழாசான் சாத்தன் என்று குறிப்பிடுகிறார். இக் காப்பியத்தின் மற்றொரு பெயர் மணிமேகலை துறவு (மணிமேகலை துறவு பூண்டதால் இப்பெயர் பெற்றது). மணிமேகலை சிலப்பதிகாரத்தின் தொடர் காப்பியமாகும்.சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கதையால் தொடர்புடையவை என்பதற்கான சான்று என்னவென்றால், சிலப்பதிகாரம் நூல் கட்டுரை முடிவில், மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம் முற்றும். என்ற வரி இடம்பெற்றிருப்பதே இதற்கு சான்றாகும். இக்காப்பியத்தின் கதாநாயகியே மணிமேகலை. சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவனான கோவலனுக்கும், ஆடலரசியான மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரை தன் மகளுக்கு சூட்டினான். தன் பாட்டி சித்ராபதியையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணிமேகலைக்கு விருப்பமில்லை. கற்புக்கரசி கண்ணகியைப் போன்று அறவழியில் அவள் வாழ்ந்தாள். மணிமேகலையின் தோழி சுதமதி. மணிமேகலையின் முற்பிறவியில் இலக்குமியாக பிறந்தாள். மணிமேகலையின் மேல் காதல் கொண்ட சோழன் மகன் உதயகுமாரன். சக்கரவாளக்கோட்டம் என்னும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை அவளுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்றது. அங்குள்ள புத்தக்கோயிலை வணங்கி தன் பழம்பிறப்பைப் பற்றி அவள் தெரிந்து கொண்டாள். புத்த பீடிகையை காத்து வந்தவர் தீவ திலகை. புத்த பவுர்ணமி முழுமதி நாளான வைகாசி விசாகநாளில் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் தீவதிலகை கூறியது போல் பெற்றாள். பசியின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்காக அந்த பாத்திரத்தைப் பயன்படுத்தினாள். அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறிவுரை கேட்டு, ஆதிரை என்னும் கற்புக்கரசியிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள். அன்று முதல் அந்த பாத்திரத்தில் அள்ள அள்ளஅன்னம் குறையாமல் வந்தது. இக்காப்பியம் 30 காதைகளைக் கொண்டதாகும். முதல் காதையான விழாவறை காதையில் கூறப்படும் இந்திர விழாவே, தற்கால பொங்கல் பண்டிகை எனக்கருதப்படுகிறது. இவ்விழா 28 நாட்கள் நடந்துள்ளது. காய சண்டிகையின் கணவன் பெயர் காஞ்சனன், உதயகுமரானை வெட்டி வீழ்த்தியவன். மணிமேகலை காய சண்டிகை வடிவம் எடுத்து சிறைச்சாலையில் பணி செய்தாள். சிறைச்சாலையை அறச்சாலையாக்கிய பெண்மணி மணிமேகலை. அறவான அடிகளிடம் மணிமேகலை அறிவுரை பெற்றாள். பசிக்கொடுமையைப் போக்கியவளின் புகழை, என் நாவால் உரைக்க முடியாது என்று சாத்தனார் மணிமேகலையின் பெருமையை இந்நூலில் புகழந்துள்ளார். உலக வாழ்வில் இளமையோ, செல்வமோ நிலையில்லாதவை. வீடுபேறு என்னும் மோட்சத்தை பிள்ளைகளாலும் பெற்றுத் தர முடியாது. அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது சிறப்பான பாடல் வரியாகும். மணிமேகலையில் சமய சம்பந்தமான சில சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கு ஏற்ப சாத்தனார் மொழிபெயர்த்து அமைத்திருத்தது மற்றும் நூலாசிரியர் சாத்தனாரின் புலமையைப் மிகப் பாராட்டிற்கு உரிய ஒன்று என டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கூறியுள்ளார். பதிகம் (கதைபொதி பாட்டு) அஃதாவது-இந்நூலின்கட் போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு பதிக்க கிளவி பல்வகை பொருளைத்
தொகுதி யாக்க சொல்லுத றானே என்பது முணர்க. இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தத்துரை புனைந்துரை பாயிரம் என வரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க. பாயிரம் பொதுவும் சிறப்பும் என இரு வகைத்து. அவற்றுள் இப்பதிகம் நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும். இனி இதன்கண் மணிமேகலை என்னும் இப்பெருங் காப்பியத்தின் பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறும் அதனைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டைப் புரக்கும் காவிரி என்னும் பேரியாற்றின் வரலாறும், காவிரிப்பூம்பட்டினத்தின்கண் ஒரு நூறு கேள்வி யுரவோனாகிய இந்திரனுக்கு விழாவெடுத்தற்கு முரசறைதல் தோற்றுவாயாகவும் மணிமேகலை பிறப்பற வேண்டி நோன்பு மேற்கொள்ளல் இறுவாயாகவும் அமைந்த கதையைத் தம் மகத்துட் கொண்ட உள்ளுறுப்புக்களும் நிரல்படுத்திக் கூறப்பட்டுள்ளன. இளங்கதிர் ஞாயீ றெள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவிக் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று -5 மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு வெண்பாள் சம்பா பதியனள்
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - 10 அமர முனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் - 15 ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
ஆணு வீசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்
பின்னலை முனியாய் பொருந்தவன் கேட்டீங்கு
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் - 20 நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - 25 தொழுதனள் நிறபவத் தொன்மூ தாட்டி
கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து
தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்த இவ் விரும்பெயர் மூதூர் - 30 நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென
இருபாற் பெயரிய உருகொழு மூதூர்
ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்
பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் - 35 வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப் பூம்பொழில் அகவயிற் சென்றதும்
ஆங்கப் பூம்பொழில் அரகிளங் குமரனைப்
பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் - 40 பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்
உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வம் -45 சுதமதி தன்னைத் துயலெடுப் பியதூஉம்
ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்
தான் றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்
பழம்பிறப் பெல்லாம் பான்மையி ணுணர்ந்ததும் -50 உணர்ந்தோள் முன்னர் உயிர்தெய்வந் தோன்றி
மணங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனந் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு - 55 யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபூத் திரன்பால்
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - 60 மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்
பிச்சைக் யேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று - 65 ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே
கொங்கலர் நறுந்தார் கோமகன் சென்றதும்
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையின் மகள்வடி வாகி - 70 மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலா தணுகலும்
வஞ்ச விஞ்சையின் மன்னவன் சிறுவனை - 75 மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள்
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கொன்றதுஞ் சிறைவீடு செய்ததும் - 80 நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
ஆய்வளை ஆபூத் திரனா டடைந்ததும்
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் - 85 பொற்கொடி வஞ்சியற் பொருந்திய வண்ணமும்
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் -90 புக்கவள் கொண்ட பெய்யுருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
நவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - 95 வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் உரை தோற்றுவாய் 1-8: இளங்கதிர் .........பதியினள் (இதன் பொருள்) பொன் திகழ் நெடுவரை உச்சி இத்தீவைத் தெய்வதம்-பொன் மயமாக விளங்குகின்ற நெடிய மேருமலையின் உச்சியின்கண் இந்த நாவலந் தீவின் காவல் தெய்வமானது; இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி தோன்றி - இளமையுடைய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தையும் இகழ்தற்குக் காரணமான பேரொளியோடு காணப்படுகின்ற விளக்கமான ஒளிப் பிழம்பாகிய திருமேனியையும் விரிந்த சடையையும் உடையவளாய் அருளுருவங் கொண்டு தோன்றி; மாநில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு - பெரிய நிலமகளுக்கு அரக்கர்களால் உண்டாகின்ற துன்பங்களைத் தன்பால் முறையிடுகின்ற அமரர்கள் வாயிலாய்க் கேள்வியுற்று வெம்திறல் அரக்கர்க்கு வெம்பகை-வெவ்விய ஆற்றலுடைய அவ்வரக்கர்களுக்கும் அச்சமுண்டாக்கும் பகையாவதற்குரிய ஆற்றலைப் பெறும் பொருட்டு; சாகை சம்பு தன்கீழ் நின்று நோற்ற - கிளைகளை யுடைய நாவல் மரத்தின் கீழே நின்று தவம் செய்தமையாலே; சம்பு என்பாள்- சம்பு என்று பெயர் பெற்றவள்; தென்திசை பெயர்ந்த சம்பா பதியினள் - அம் மேருமலையினின்றும் தெற்குத் திசையை நோக்கி எழுந்தருளிய காலத்தே சம்பாபதி என்னும் தன் பெயரோடு படைக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரத்திலே திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பாளாயினள்; என்க. (விளக்கம்) ஞாயிறு திருமேனிக்கும் கதிர் விரிசடைக்கும் உவமை. இஃது எதிர் நிரல் நிறை உவமை. ஆகவே ஞாயிற்றை எள்ளும் மேனியையும் அதன் இளங்கதிரை எள்ளும் சடையையும் உடைய அருளுருவம் கொண்டு பொன்வரை உச்சியில் தோன்றித் துயர் கேட்டுச் சம்புவின் கீழ் நின்று நோற்றமையால் சம்பு எனப் பெயர் பெற்று, பொன் மலையினின்றும் தென்றிசை நோக்கிப் பெயர்ந்து வந்து தென்றிசையின்கண் தனக்கெனப் பிரமனால் தன் பெயரோடே படைக்கப்பட்டிருந்த சம்பாபதி என்னும் நகரத்தில் எழுந்தருளி இருப்பாளாயினள் என்பது கருத்தாகக் கொள்க. இதனால் காவிரி ஒரு பேரியாறாகக் காட்சி தருதற்கு முன்பு சம்பாபதி என்னும் பெயரையுடையதாய் இருந்த அந்நகரமே காவிரியாறு சோழ மன்னர்களால் பெரிய யாறாகச் செய்யப்பட்ட பின்னர் காவிரிப்பூம்பட்டினம் எனவும் காவிரி கடலொடு கலக்கம் சிறப்புக் கருதிக் பூம்புகார் நகரம் எனவும் பெயர் பெற்றது என்று உணரப்படும். இதனை (26-30) ஆம் அடிகளில் கூறுமாற்றான் அறியலாம் ஆகவே, சம்பு வென்பாள் சம்பாபதியினள் என்றது, சம்பு என்னும் அக்காவற்றெய்வம் பொன்வரையுச்சியினின்றும் தென்திசைப் பெயர்ந்து வந்து நான்முகன் தன் பெயர்ப்படுத்த சம்பாபதி என்னும் இடத்திலே உறைந்தது என்றவாறு. இத் தெய்வம் காவிரியாறு தோன்று முன்பே அவ்வடத்திலே எழுந்தருளி யிருந்தது என்பதும் பின்னர்க் கூறுமாற்றானுணரலாம். காவிரியின் தோற்றம் 6-18 செங்கதிர் ........வாவென (இதன் பொருள்.) செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் வேட்கையின் காந்தமன் - சிவந்த ஒளியையுடைய கதிரவன் வழித் தோன்றிய தெய்வத் தன்மையுடைய தான் பிறந்த குலத்தினைப் புகழால் உலகுள்ள துணையும் விளக்க வேண்டும் என்றெழுந்ததொரு விருப்பங் காரணமாகச் சோழர் குலத்திலே தோன்றிய காந்தன் என்னும் மன்னவன்; அமர முனிவன் அகத்தியன் கஞ்சம் வேண்ட -தேவமுனிவனாகிய அகத்தியன்பாற் சென்று தன்னாட்டை வளம் படுத்துதற்கு இன்றியமையாத நீர் வழங்க வேண்டுமென்று வேண்டா நிற்றலால்; தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை- அம் முனிவன், நீர் பேரியாறாகப் பெருகிச் சென்று அச் சோழ நாட்டினை வளம்படுத்தத் திருவுளங் கொண்டு அதற்குக் கால்கோள் செய்பவன் தன்னுடைய நீர் கரத்தைக் குடக மலையுச்சியிலே சென்று கவிழ்த்தமையாலே அதிலிருந்து ஒழுகிய நீர் அம்முனிவன் கருதியாங்குப் பேரியாறாகப் பெருகிக் காவிரிப்பாவை என்னும் பெயரோடு; செங்குணக்கு ஒழுகி-நேர் கிழக்குத் திசை நோக்கி ஒழுகி; அச் சம்பாபதி அயல் பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற -சம்பாபதி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்த சம்பாபதி என்னும் அத்திருப்பதியின் மருங்கே மிக்க நீரையுடைய கடற்பரப்பிலே புகுந்து பொலியா நிற்ப; ஆங்கினிதிருந்த -அச் சம்பாபதியிலே மகிழ்ந்தெழுந்தருளியிருந்த; அருந்தவ முதியோள் -அரிய தவத் தினையுடைய பழையோளாகிய அச் சம்பாபதி என்னும் தெய்வம்; உவந்து - அந் நதி நங்கை வரவு கண்டு பெரிதும் மகிழ்ந்து; ஓங்கு நீர்ப் பாவையை எதிர் கொண்டு -உயரிய தெய்வத் தன்மையுடைய அக் காவிரி நங்கையை எதிர் சென்று அன்புடன் வரவேற்று; ஆங்கு ஆணுவிசும்பின் ஆகாய கங்கை-அவ்விடத்திலேயே தன்னோகை கூறுபவள் ஆருயிர்களின்பால் அன்பு மிக்கவளே! விசும்பாகிய உயர் குலத்துப் பிறந்த ஆகாய கங்கையாகிய நங்கையே; வேணவாத்தீர்த்த விளக்கே -சோழ மன்னனும் அவன் குடிமக்களும் நீண்ட காலமாகத் தம்முட் கொண்டிருந்த பேரிய அவாவினை நிறைவேற்றி அவர்களுடைய துன்பவிருளைத் துவரப் போக்கிய ஒளி விளக்கே ;வா என வருக வருக என்று பாராட்டி வரவேற்ப என்க. (விளக்கம்) திருக்குலம் -தெய்வத் தன்மையுடைய குலம். சோழ மன்னர்,கதிரவன் குலத்து மன்னர் என்பது நூனெறி வழக்கம். காவிரி தோன்று முன்னர்ச் சோழர் நாடு நீர் வளம் பெறாது வறுமையுற்றுக் கிடந்தமையால் அந்த நாட்டரசனாகிய காந்தன் அக் குறை தீர்த்துத் தான் பிறந்த அந்த நாட்டையும் தான் பிறந்த சோழர் குலத்தையும் புகழுடைய தாக்க விரும்பி அகத்தியன்பாற் சென்று வரம்வேண்டினனாக அவன் வேண்டுகோட் கிணங்கிய அகத்தியன் அந் நாட்டினை நீர் நாட்டாக்கத் திருவுளங் கொண்டு அந் நாட்டினைப் புரக்கும் ஒரு போறியாற்றைப் படைத்து வழங்க விரும்பி அதற்குக் கால்கோள் செய்பவன் குடகமலை யுச்சியில் ஏறிச் சென்று தன் கரக நீரை கவிழ்த்துவிட, அந்நீர் பெருகிப் பேராறாகிச் செங்குணக் கொழுகிச் சோணாட்டிற் புக்குக் புனல் பரப்பி வளஞ் செய்து சம்பாபதியின் மருக்கே கடலிற் பாய்ந்தது எனவும் அக் காவிரி வருகையால் மகிழ்ந்த சம்பாதி என்னும் தெய்வம் அந் நீர் மகளை எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தான் எனவும் இப் பகுதி காவிரியின் தோற்றமும் காரணமும் கட்டுரைத்த படியாம். கம்சம்- நீரை பிறப்பித்தல். கஞ்ச வேட்கை எனச் சொற் கிடந்தாங்கே நீருண்டாக்கும் விருப்பத்தால் எனினுமாம். கஞ்சம் என்பதே நீர் என்னும் பொருட்டென லுமாம். (கஞ்சம் கலங்குவன என்பது நளவெண்பா) காந்தன்-சோழர் குலத்து மன்னருள் ஒருவன்.மன்-அரசன். பகீரதன் தானே தவம் செய்து கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தனன். காந்தன் தவத்தினால் பேராற்றுலுடைய அகத்தியனை வணங்கி அவன்பால் வரமாகப் பெற்று அவ்வாகாய கங்கையையே காவிரிப் பாவையாகச் சோழநாட்டிற்குக் கொணர்ந்தான் என்க. அகத்தியன் கடல் குடித்தவன். அவன் பேரியாறு படைத்தல் பெரிதில்லை. தன் கரத்திலிருந்த ஆகாய கங்கையாகிய நீரையே காவிரிப்பேரியாறாகப் பெருகிவரச் செய்தான் ஆதலின் அவன் கரக நீர் ஆகாய கங்கை என்பது தோன்ற அமர முனிவன் அகத்திழன் என்று விதித்தார். ஆணு:பண்பாகு பெயர்; விளி.அன்பே என்று விளித்தப்படியாம். ஆணுவே! ஆகாய கங்கையே! விளக்கே! வா! என்று தன் ஆர்வந் தோன்ற மும்முறை விளித்தப்படியாம்.பொங்குநீர்ப் பரப்பு என்னும் பன்மொழித் தொடர், கடல் என்னும் ஒருபொருள் மேனின்றது மலைத்தலைய கடற்காவிரி என்பது பட்டினப்பாலை (9).விளக்கு என்றமையால் துன்பவிருள் போக்கும் விளக்கு என்று கூறக் கொள்க. வேணவா -மிக்க அவா. அகத்தியன் காவிரிநங்கைக்கு அத் தெய்வத்தை
அறிமுகப் படுத்துதலும், காவிரி வணங்குதல் 19-26: பின்னலை..........நிற்ப (இதன் பொருள்.) பின்னிலை முனியாய் பெருந்தவன்-தன்னாற் படைக்கப்பட்டுச் செங்குணக்காக இயங்கி வருகின்ற அக் காவிரிப் பாவையின் பின்னே அவளது இயக்கங் கண்டு மகிழ்தற்கு அவள் பின்னரே தொடர்ந்து வருவதனை வெறாமல் விருப்பத்தோடு வந்த பெரிய தவத்தையுடைய அவ்வமா முனிவர்; கேட்டு-சம்பாபதி அந் நதிமகளை வரவேற்கும் பாராட்டுரையினைக் கேட்டு மகிழ்ந்து; அன்னை கேள் இ அருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள் வணங்கு என-மன்னுயிர்க் கெல்லாம் அன்னையாகிய காவிரி மகளே கேள். நின்னை பாராட்டும் இந்த அரிய தவத்தை யுடைய இவள் கன்னிகையாகக் காணப்படினும் நிலமடந்தையின் காவல் தெய்வமாகிய கொற்றவை ஆதலின் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையோளாகிய இறைவியே ஆதலின உன்னால் வணங்கப்படுதற் கியன்ற பெருமையுடையாள் காண்! ஆதலால் அத் தெய்வத்தை வணங்குவாயாக என்று பணித்தலாலே; பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தங்குலக் கொடி-நல்லிசைப் புலவராலே பாடுதற் கமைந்த பொருஞ் சிறப்பமைந்த இப் பாரத நாட்டிலே புகழாலுயர்ந்ததும் எஞ்ஞான்றும் வளைந்திலாதது மாகிய செங்கோலையுடைய சோழ மன்னருடைய குலத்திற்கே உரிமைபூண்ட பூங்கொடிபோல் வாளும்; கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நீலை திரிபாத் தமிழ்ப்பாவை -கோள்கள் நன்னிலை பிறழ்ந்து கோட்டைக் காலமே நீண்டாலும். தான் தனது புனலாலே மன்னுயிர் புரக்கும் தனது நிலை பிறழா தவளும் குளிர்ந்த தமிழ் மொழியைத் தனது வளத்தாலே வளர்ப்பவளும் திருமகள் போல்பவளுமாகிய அக் காவிரி நங்கை அம் முனிவன் பணித்தாங்கு; தொழுதனள் நிற்ப - சம்பாபதியைக் கைகுவித்துத் தொழுது தலையாலே வணங்கி நிற்ப என்க. (விளக்கம்) தன்னாற் படைக்கப்பட்ட காவிரி ஒழுகும் வனப்பினைக் கண்டுகளிக்கும் கருத்தாலே அம் மாபெருந்தவனும் பின்னலை முனியாது விரும்பி அவளைப் பின் தொடர்ந்து வந்தான் என்றவாறு. அவன் பின்னிற்றற்கு ஒண்னாத பெருமையுடையான் என்பது தோன்ற பெருந்தவன் என்றார். காவிரியின் பால் மகவன்பு கொண்டு அவனும் பின்னலை முனியாது அவளைத் தொடர்ந்தான் என்று அவனுடைய அன்பின் நிலை கூறியவாறு. அன்னை என்று விளித்தான் தன்மகளாதலின். உயிர்கட் கெல்லாம் அன்னை என்பது பற்றி அங்ஙனம் விளித்தான் எனினுமாம். பாரத நாட்டிலமைந்த ஏனைமன்னர் செங்கோள்களினும் காட்டில் உயர்ந்த செங்கோல்; எஞ்ஞான்றும் கோட்டாச் செங்கோல் என்று தனித் தனி இயையும் ஏனை மன்னரால் கைப்பற்ற வியலாமை பற்றிச் சோழர் தங்குலக்கொடி என்றார். இனி, கோணிலை திரிந்து...பாவை என்னும் இதனோடு- வசையில் புகழ் வயங்கு வெண்மீன்-திசைதிரிந்து தெற்கேகினும்-தற்பாடிய தளியுணவின் -புட்டோம்பப் புயன்மாறி-வான்பொய்ப்பினும் தான்பொய்யாமலைத் தலைய கடற் காவிரி -புனல் பரந்து பொன் கொழிக்கும் எனவும்,(பட்டினப்-1-7) இலக்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண்காவிரி வந்து கவர்பூட்ட எனவும் (புறம். 357-8) கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்......காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலே எனவும் (சிலப்-10:1092-8) வரும் பிறசான்றோர் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. வளமில்வழி மொழிவளனும் கலைப்பெருக்கமும், உண்டாத லின்மையின் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் காவிரி காரணமாதல் பற்றி, தண்டமிழ்ப் பாவை என்றொரு பெயரும் கூறினர் தொமுத்தனள். தொழுது, சம்பாபதி காவிரி வாழ்த்துதல் 26-31: அத்தொல்.........வாழியவென (இதன் விளக்கம்) அத்தொல் மூதாட்டி கழுமிய உவகையின் கவான் கொண்டு இருந்து- அவ்வாறு காவிரிப் பாவையாலே தொழப்பட்ட மிக்க முதுமையையுடைய அச் சம்பாபதி என்னும் தெய்வந் தானும் அந்நதிமகளோடு உளம் ஒன்றிய அன்பினாலே மகிழ்ந்து அக் காவிரிப் பாவையைத் தழுவித் தன் மடிமிசை இருத்திக் கொண்டிருத்து கூறுபவன் அன்னையே!; செம்மலர் முதியோன் செந்தாமரை மலரில் உறையும் முதுபெருங் கடவுளாகிய பிரமன் உலகங்களைப் படைக்கத் தொடங்கி; தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்-மகாராசிகலோக முதலிய அறுவகை உலகங்களையும் அவற்றில் வாழும் தெய்வகணப் பிண்டங்களையும் நான்கு திசைகளினும் அமைந்துள்ள இருபது வகைக்கப்பட்ட பிரமகணப் பிண்டங்களையும் படைத்துப் பின் இந்நிலவுலகத்தையும் இதன்கண் வாழும் மக்கட் பிண்டங்டளையும்; செய்த அந்நாள் - படைத்த அப் பண்டைக் காலத்திலேயே; என் பெயர்ப்படுத்த இவ் இரும்பெயர் மூதூர் - சம்பாபதி என்னும் எனது பெயரோடு படைத்தருளிய பெரிய புகழையும் பழைமையையும் உடைய இந்த ஊரினை; நின் பெயர் படுத்தேன் - இற்றை நாள தொடங்கியான காவிரிப் பூம்பட்டினம் என வழங்குமாறு நினது பெயரோடும் இணைத்தேன் காண; நீ வாழிய என - நீடுழி வாழ்வாயாக என்று வாழ்த்தியருள என்க. (விளக்கம்.) படைப்புக் காலத்திலேயே படைப்புக் கடவுள் முக்காலமும் உணர்ந்தவன் ஆதலின் இந்நகரத்தை யான் இருத்தற்கியன்ற இடமாகப் படைத்துச் சம்பாபதி என்னும் பெயரும் சூட்டினன். ஆதலின் யானும் எனக்குரிய பொன்வரையுச்சியிலே தோன்றி நில மடந்தைக்கு அரக்கரால் அழிவு வரும் என்று பிறதெய்வங்கள் கூறக் கேட்டு அவர்கள் அஞ்சத்தகுந்த பேராற்றலை அப் பொன்வரையுச்சியில் நிற்கும் சாகைச்சம்புவின் கீழ் நெடுங்காலம் தவம்செய்து பெற்றுப் பின்னர், இச் சம்புத்தீவன் காவற்றெய்வமாகிய கொற்றவையாகி இச் சம்பாபதி நகரத்திலே வதிகிறேன். ஆதலின் இந் நகரம் மாபெருஞ் சிறப்புடையதாம். இற்றைநாள் தொடங்கி இம்மூதூர் காவிரி பூம்பட்டினம் என்னும் பெயரோடும் நிலவுக! நீ வாழ்க! என்று அத்தெய்வம் அந்நகர் வரலாறும் பெருமையும் பழமையும் காவிரிக்கு அறிவுறுத்து வாழ்த்திற்று என்க. இனி உலகங்கள் முப்பத்தொன்று என்பதும் அவைபொன்மலையை நடுவண் கொண்டு அதன் மேலும் கீழும் நடுவிலும் உள்ளன என்பதும் பௌத்தர் கொள்கையாம். இவற்றைப் படைப்புக் கடவுள் படைக்கும் பொழுது தெய்வலோக முதலிய மேலுலகத்தைப் படைத்துப் பின்னர் மக்கள் உலகாகிய இந்நிலவுலகத்தைப் படைத்தான் என்பதும் அங்ஙனம் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுதும் சம்புத்தீவையே முற்படப் படைத்து அதன் தென்றிசைமருக்கில் அதன் காவற்றெய்வமாகிய சம்பு என்னும் தெய்வம் உறைதற் பொருட்டுச் சம்பாபதி என்னும் பெயரோடு ஒரு நகரையும் படைத்தான் என்பதும் இப்பகுதியில் பாட்டிடை வைத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. ஈண்டுத் தெய்வக் கரு என்றது ஆறுவகைப்பட்ட தெய்வங்களையும் அவர் வாழும் உலகங்கங்களையுமாம்; திசைமுகக் கரு என்றது, இருபது வகைக்கப்பட்ட பிரமலோகங்களையும் அவற்றின் உறையும் பிரமகணங்களையும் என்க. இனி இவ்விருவகை உலகங்களையும் படைத்துழி என்பெயர்ப்படுத்த இவ்விரும் பெயர் மூதூர் என்றமையின் பின்னர் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுது முற்படப் புகார் நகரம் படைக்கப்பட்டது என்பதும் பெற்றாம். எனவே புகார் நகரம் படைப்புக் காலந்தொட்டு அதனை ஆளும் அரசரால் சோழமன்னரால் வழிவழி ஆளப்பட்டுப் பதியெழுவறியாய் பழங்குடி கெழீஇய பண்பாட்டோடு புகழையும் பெற்று வருகிறதென்றவாறாயிற்று. இதனோடு, வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரிதல் இன்று என்னும் குறளிற்கு ஆசிரியர் பரிமேலழகர் வகுத்த விளக்கவுரையில் தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்பதனைக் ஒப்பு நோக்கி இரண்டற்குமுள்ள உறவுணர்ந்து மகிழ்க. இனி இவ்வுலகங்களை பற்றிய விரிவான விளக்கம் சக்கரவாளக் கோட்ட முரைத்தகாதையில் தரப்படும். அவற்றைக் ஆண்டுக் கண்டு கொள்க. இப் பெருங்காப்பியத்தின் உள்ளுறுப்புக்கள் 32-44: இருபால் ................... உய்த்ததும் இதன் பொருள் : இருபால பெயரிய உருகெழு மூதூர்- இவ்வாற்றால் சம்பாபதி என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் இருவகையான பெயர்களைக் கொண்டு பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பழைய ஊராகிய அந்த நகரத்தே; ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்கு பெருவிழா அறைந்ததும்-ஒப்பற்ற நூறு வேள்விகளைச் செய்து முடித்தமையாலே அமரருக்கு அரசனாம் பேறு பெற்ற ஆற்றலுடைய இந்திரனுக்குப் பெரிய விழா வெடுத்தற் பொருட்டு மன்னவன் பணிமேற் கொண்டு தொல்குடி வள்ளுவன் முரசறைந்த தூஉம்; அலர் பெருகியது என சிதைந்த நெஞ்சின் சித்திராபதிதான் வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும் -மாதவி துறவு பூண்டமையால் தங்குடிக்குப் பழி பெரியதாயிற்றென்று கருதியதனாற் கலங்கிய நெஞ்சதையுடைய சித்திராபதி வயந்தமாலை என்னும் கூனியை ஏவி அப்பழியை மாதவிக்கு அறிவுறுத்திய தூஉம்; மணிமேகலை தான் மாமலர் கொய்ய அணிமலர் பூம்பொழில் அகவயின் சென்றதும் மாதவியால் துறவிற் புகுத்தப்பட்ட மணிமேகலை புத்தருக்கு அணிவித்தற்குச் சிறந்த புதுமலர் கொய்துவரும் பொருட்டு அழகிய மலர்வனத்தினுள்ளே சென்று புகுந்ததூஉம்; ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் பாங்கிற் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அப்பொழுது அம் மலர்வனத்தினூடே மன்னிளங்குமரனாகிய உதயகுமரன் தன் பக்கலிலே வருதலை அவன் தேர் ஒலியாற் கண்டு அம் மணிமேகலை அங்கிருந்த பளிக்கறையினுட் புகுந்து கொண்டதூஉம்; பளிக்கரை புக்க பாவையைக் கண்டவன் - பளிக்கறையின்கட் புகுந்திருந்த மணிமேகலையைப் பளிங்கிணூடே கண்ட அம் மன்னிளங்குமரன்; துளக்குறுநெஞ்சில் துயரொடு போய பின் - காமத்தாலே கலங்கிய நெஞ்சில் நிறைந்த துன்பத்தோடே அம் மலர்வனத்தைவிட்டுச் சென்ற பின்னர்; மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்-மணிமேகலா தெய்வம் அங்கு மக்களுருக் கொண்டு வந்து தோன்றிய தூஉம்; மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும்-அத்தெய்வம் மணிமேகலையை உறங்கும்பொழுது எடுத்துப் போய் மணி பல்லவம் என்னும் சிறியதொரு தீவின்கண் வைத்ததும் என்க; (விளக்கம்) இருபாற் பெயரிய: சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டு பெயர்களையுடைய.நூறு பெருவேள்வி செய்து முடித்தவனே இந்திரனாம் தகுதிபெறுவான் ஆதலின் அவ் வரலாறு தோன்ற வாளாது இந்திரன் என்னாது ஒருநூறு வேள்வி உரவோன் என்றார். இந்திரவிழா ஆண்டுதோறும் சித்திரா பருவத்திலே தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்த்தப்பட்டுக் கடலாட்டோடு நிறைவுறும் ஒருமாபெருந்திருவிழா ஆகலின் பெருவிழா என்றார். அலர்- பழி.அஃதாவது வேத்தியல்.......உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய ஒரு நாடகக்கணிகை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என மாக்கள் தூற்றும் பழிச்சொல். சித்திராபதி-மாதவியின் தாய். வயந்தமாலை-மாதவியின் பணிமகள். மணிமேகலை - கோவலனுக்கும் மாதவிக்கும் தோன்றியவள். இக் காப்பியத்தலைவியுமாவாள்.அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிங்கு அறை - வேற்றுமைப் புணர்ச்சியால் மென்றொடர் வன்றொடராயிற்று. பளிங்கினாலியன்ற அறை என்க. பாவை: மணிமேகலை. மணிமேகலா தெய்வம் - இந்திரன் பணிமேற்கொண்டு மணிபல்லவம் முதலிய சில தீவுகளைக் காக்குமொரு தெய்வம்; கோவலனுடைய குலத்தெய்வமுமாம். இத் தெய்வம் தன் முன்னோன் ஒருவனைக் கடலில் மூழ்கி இறைவாவண்ணம் செய்த உதவியைக் கருதி அத் தெய்வத்தின் நினைவுக்குறியாகவே தன் மகட்குக் கோவலன் மணிமேகலை என்னும் பெயரும் சூட்டினான். இதுவுமது 45-50 : உவவன..............உணர்ந்ததும் (இதன் பொருள்) உவவனம் மருங்கின் அவ் உரை சால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்- அம் மலர்வனத்தின் பக்கத்திலே அப் புகழ் மிக்க மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து ஆங்குத் தூங்கு துயிலெய்திக் கிடந்த சுதமதி என்பவளைத் துயிலுணர்த்தியதும்; ஆங்கு அத் தீவகத்து ஆயிழை நல்லாள் தான் துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும் - மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாவண்ணம் எடுத்துப் போய்த் துயிலக்கிடத்தி வந்த அவ்விடத்தே (அஃதாவது-அம் மணிபல்லவத் தீவின் கண்ணே) அழகிய அணிகலன் அணிதற்கியன்ற பெண்ணின் நல்லாளாகிய மணிமேகலை வழி நாட் காலையிலே தானே துயிலுணர்ந்து தனக்கு நேர்ந்த தென்னென்றறியாமையாலே மாபெருந் துன்பத்தாலே வருந்தியதும் உழந்தோள் ஆங்கண் பான்மையின் ஓர் ஒளி மணி பீடிகை பழம் பிறப்பு எல்லாம் உணர்ந்ததும் - அவ்வாறு துன்ப மெய்திய அம் மணிமேகலை ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையால் அவ்விடத்தேயிருந்த ஓர் ஒளியுடைய மணிகளாலியன்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதமையால் தன் பழம் பிறப்பும் அதன் கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுமாகிய அரிய செய்திகள் பலவற்றையும் தானே உணர்ந்து கொண்டதும் என்க. (விளக்கம்) உவவனம் -மக்களால் உண்டாக்கப்பட்ட பூம்பொழில். உரை - புகழ். சுதமதி - மாதவியின் தோழியும் மணிமேகலைக்குறுதுணையாய்ச் சென்றவளும் ஆகிய ஒரு பார்ப்பனப் பெண் துறவி (பிக்குணி).துயிலெடுப்பியது-துயிலினின்றும் எழுப்பியது. அத்தீவகம் - முன் கூறப்பட்ட மணிபல்லவம். உழந்தோள் : பெயர்.பீடிகை - புத்தபீடிகை.பான்மையின் -ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையின்; ஊழ்வினை நிகழ்ச்சியை ஏது நிகழ்ச்சி என்பது பௌத்தருடைய வழக்கு. இதுவுமது 51-58: உணர்ந்தோள்.........உரைத்ததும் (இதன் பொருள்) உணர்ந்தோள முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் - பழம் பிறப்புணர்ந்த அம் மணிமேகலையின் முன்னர்ச் உயரிய பண்புடைய மணிமேகலா தெய்வம் தானே எளிவந்து தோன்றி மகளே! நின்நெஞ்சத்துத் துன்பங்களை யெல்லாம் ஒழித்திடுக என ஆறுதல் கூறி, அரிய மூன்று மறை மொழிகளை அறிவுறுத்ததும்; தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அளித்ததும் - தீவ திலகை என்னும் மற்றொரு தெய்வம் மணிமேகலை முனனர்த் தோன்றிச் செவ்விதாக மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் ஒன்றனை இளங்கொடி போல்வளாகிய அம் மணிமேகலைக்கு வழங்கியதும் பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறும் மாதவத்து அறவணர்த் தொழுததும் - அமுதசுரபியைப் பெற்று மறைமொழியினுதவியாலே அம் மணிமேகலை வான் வழியாகப் பறந்துவந்து புகார் நகரம் எய்தித் தன் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் கூடிக் கட்டமைந்த பெரிய தவவொழுக்கத்தையுடைய அறவணவடிகளைக் கண்டு வணங்கியதும்; நறுமலர்க் கோதைக்கு - நறிய மலர் மாலையணியத் தகுந்த இளமையுடைய மணிமேகலைக்கு; அறவணவடிகள் ஆபுத்திரன் திறம் நன்கனம் உரைத்ததும் - அறவணவடிகளார் அமுதசுபிக்குரியவனான ஆபுத்திரன் என்பானுடைய வரலாறும் பண்புமாகிய செய்திகளை யெல்லாம் விளக்கமாக விளம்பியதும் என்க. (விளக்கம்) உணர்ந்தோள் :பெயர்; மணிமேகலை. தீய தெய்வமும் உளவாகலின் அவற்றினீக்குதற்கு உயர் தெய்வம் என்றார்; அஃதாவது - மணிமேகலா தெய்வம். கவல் - துன்பம். மந்திரம் - மறைமொழி. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு வேற்றுரு வெய்தவும்; வானத்தே இயங்கவும் பசிபிணியின்றி இருத்தற்கும் வேண்டிய ஆற்றல் தரும் மூன்று அரிய மந்திரங்களை செவியறிவுறுத்தது; இவற்றை ஈந்தமையால் இனி நீ மணங்கவல வேண்டா என்று ஆறுதலும் கூறிற்று என்க. செவ்வனம்-செம்மையாக. திருவுருவங்கொண்டு தோன்றி என்க. வேண்டுவார் வேண்டும் உண்டியை வேண்டுமளவும் சுரந்தளிக்கும் மிகக் பெரிய சிறப்புடைய பாத்திரம் என்றவாறு பெருமை ஈண்டு அதன் அளவின் மேல் நில்லாது சிறப்பின் மேனின்றது. மடக்கொடி என்றது அவளது இளமையை விதந்தபடியாம். பைந்தொடி : மணிமேகலை. சுதமதி மணிமேகலையின் பால் தாய்மை யன்புடையாளாதல் பற்றி அவளையும் உளப்படுத்துத் தாயர் எனப் பன்மைச் சொல்லாற் கூறினர். பிறாண்டும் இங்கனமே கூறுதல் காணலாம். யாப்புறுமாதவம் - பொறிபுலன்களைக் கட்டியொழுகும் பெரிய தவம். ஆபுத்திரன்- இக் காப்பிய வுறுப்பினுள் சிறந்தோர் உறுப்பாக அமைத்தவன்; அமுதசுரபியைத் தெய்வத்திடம் முதன்முதலாகப் பெற்றவன்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை; ஆவால் பாலூட்டி வளர்க்கப்பட்டவன். நன்கனம் -நன்கு; நன்றாக. இதுவுமது 59-68 : அங்கை ...........சென்றதும் (இதன் பொருள்) அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - தன் அகங்கையி லேந்திய அமுதசுரபி என்னும் பிச்சை பாத்திரத்தை ஆபுத்திரனுடைய அருளுடைமை கண்டிரங்கிய கலைமகளாகிய சிந்தாதேவி என்னும் தெய்வம் அவன்பால் கொடுத்த திறமும்; மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் -மேலும் அவ்வமுத சுரபியை மணிமேகலை அங்கையிலிலேந்தி முதன்முதலாக அதன்கண் பிச்சை ஏற்கும் பொருட்டு அகன்ற புகார் நகரத்துத் தெருவிலே எய்தியதும்; பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையின் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் -அவ்வாறு பிச்சைபுக்க மணிமேகலை ஏந்திய அம்மாபெரும் பாத்திரத்தின்கண் முதன் முதலாகச் சிறந்த கற்புடைய மகளாகிய ஆதிரை நல்லாள் பலரும் பகுத்துண்டற் கியன்ற உணவினைப் பிச்சையாகப் பெய்ததும்; காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும் - அழகுமிக்க மணிமேகலை அமுத சுரபியில் ஏற்ற பிச்சை யுணவினை ஊட்டிக் காயசண்டிகை என்பவளை நீண்ட காலமாகப் பற்றி வருத்திய ஆனைத்தீ என்னும் வயிற்று நோயை தீர்த்துப் பின்னர் உலகவறவி என்னும் அம்பலத்தை எய்தியதும்; ஆயிழை அம்பலம் அடைந்தாள் என்று கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் - மணிமேகலை உலக வறவி என்னும் அம்பலம் எய்திய செய்தி கேட்டுத்தேனோடு மலர்ந்த நறிய ஆத்திமாலை சூடிய சோழமன்னன் மகனாகிய உதயகுமரன் அவளைத் கைப்பற்றும் கருத்தோடு அவ்வம்பலத்திற்குச் சென்றதும்; என்க (விளக்கம்) அங்கை - அகங்கை; உள்ளங்கை. அகம் என்னும் நிலைமொழி ஈற்றுயிர்மெய்கெட்டது சிந்தாதேவி - தலைமகள். நகரமாதலின் பெருந்தெரு என்றார். பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரையை; பத்தினி ஆகலின் ஒருவரைக் கூறும் உயிர்மொழியாகக் கருதிப் பன்மைக்கிளவியால் கூறினர். பன்னையொருமை மயக்கம் எனினுமாம். பாத்தூண் - பகுத்துண்ணும் உணவு. காரிகை - அழகு அம்பலம் - உலக அறவி என்னும் பெயருடையதாய்ப் புகார் நகரத்திருந்ததொரு பொதுவிடம். ஆங்கு இரவலர் வந்து குழுமுவர் ஆதலின் அவர்க்கூட்டும் பொருட்டு அங்கு மணிமேகலை எய்தினன் என்பது கருத்து. அயிழை: மணிமேகலை அவள் உலகவறவி புகுந்தாள் என்று கேள்வியுற்று அரசிளங்குமரன் அவளைக் கைப்பற்றி வருங் கருத்துடன் அம்பலம் அடைந்தான் என்பது கருத்து. இதுவமது 69-78: அம்பலம்............ வண்ணமும் (இதன் பொருள்.) அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி - தன்னைப் பெரிதும் கரமுற்று அவ்வம்பலம் புக்க அக் கோமகன் முன் அவன் தன்னைக் அறியா வண்ணம் வஞ்சித்துப் போகும் பொருட்டு விச்சாதரன் மனைவியாகிய காயசண்டிகையின் உருவத்தை மேற்கொண்டு அவனைப் போக்கியபின் அவ் வுருவத்தோடு அந்நகரத்துச் சிறைக் கோட்டம் புகுந்து ஆங்குப் பசியால் வருந்துவோர் துயர் களையு மாற்றால்; மறஞ்செய் வேலோன் வான் சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய வண்ணமும் - வீரப்போர் செய்யும் வேலேந்திய சோழ மன்னனுடைய உயர்ந்த சிறைக் கோட்டத்தையே அறக் கோட்டமாக மாற்றிய செய்கையும்; விஞ்சைக் காஞ்சனன் காய சண்டிகை என - மணிமேகலை காயசண்டிகை யுருவத்தோடு அம்பலத்திலே வந்த அரசிளங்குமரனோடு சொல்லாட்டம் நிகழத்தியபொழுது அவளைக் காணவந்தவனாகிய விச்சாதரன் அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே கருதி அவள் ஒழுக்கத்தை ஐயுற்று அவ்வையந் தீர்க்குக் கரந்துறைபவன்: ஆயிலை தன்னை அகலாது அணுகலும் -அரசன் மகன் மணிமேகலையை காணும் வேட்கையால் அறங்கேட்டும் அகலாதவனாய் மீண்டும் அங்கு வந்தமையால்: வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனைக் மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வஞ்சத்தாலே கரந்திருந்த அவ்விச்சாதரன் மனைவன் மகனாகிய உதயகுமரனை வலிமை மிக்க வாளால் எறிந்து போனதும்; மை அரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - கரிய நிறமும் செவ்வரியும் உடையவாய்க் கண்டோர் நெஞ்சத்தைப் பருகும் பேரெழில் படைத்த கண்ணையுடைய மணிமேகலை அரசன் மகன் இறந்தமையா லெய்திய துன்பத்தைப் பெறாமல் வழிந்திப் பின்னர்க் கந்திற் பாவையாகிய தெய்வம் வருவதுரைத்துத் தேற்றத் தெளிந்த தன்மையும்; என்க. (விளக்கம்) வஞ்சத்தாலே விஞ்சையான் மகள் வடிவாகி என்க. விஞ்சையன் - விச்சாதரன். மகள் - மனைவி. மனைவியை மகள் என்னும் வழக்கு இந்நூல் பிறாண்டும் காணப்படும். கதைத்தொடர்பு நன்கு விளங்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டுவன சில சொற்கள் தந்துரைக்கப்பட்டன. இவ்வாறு தந்துரைப்பன இசையெச்சத்தாற் கொள்ளப்படுவன. யாண்டும் இதனைக் அறிந்து கடைப்பிடிக்க. வேளோன் : சோழமன்னன் மக்களைச் சிறைசெய்தலும் வேந்தற்கு வடுவன்று அவனுக்கியன்ற கடமை என்பார் மறஞ்செய் வேலோன் என மன்னனை விதந்தார். கோட்டம் இரண்டும் ஈண்டுக் கட்டிடம் என்னுந் துணையாம். வாளில் தப்புதல் - வாளாலெறிந்து கொல்லுதல். மை அரி உண் கண் என்னும் பன்மொழித் தொடர் மணிமேகலை என்னும் துணையாய் நின்றது. அவன் என்றதும் உதயக்குமரனை. மணிமேகலை பற்பல பழம் பிறப்புக்களிலே அவன் மனைவியாகி அவனோடு வாழ்ந்தவளாதலின் பழம் பிறப்பணபுணர்ச்கியுடைய மணிமேகலை அவன் இறந்தமை பொறாது வருந்தனள் என்பது கருத்து. தெய்வம் - கந்திற் பாவையினிற்குந் தெய்வம். கிளவி - சொல். இதுவுமது 79-88: அறைகழல்........ கேட்டதும் (இதன் பொருள்) அறை கழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் - ஆரவாரிக்கும் வீரக்கழலணிந்த சோழ மன்னன் மணிமேகலையைச் சிறையிடச் செய்ததும்; சிறைவீடு செய்ததும் - பின்னர்ச் சிறைவீடு செய்வித்ததும்; ஆய்வளை நறுமலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு ஆபுத்திரன் நாடு அடைந்ததும் - சிறை வீடு பெற்ற மணிமேகலை நறிய மலர் மாலையணிந்த கோப்பெருந் தேவிக்கு நல்லனவாகிய அறங்கள் பல வற்றையும் அறிவுறுத்து அப்பால் ஆபுத்திரன் மறுமையில் மன்னவனாகி அருளாட்சி செய்கின்ற சாவக நாட்டிற்குச் சென்றதும் அணியிழை ஆங்கு அவன் தன்னோடு போகி ஓங்கிய மணி பல்லவத்திடை உற்றதும் - மணிமேகலை அந் நாட்டரசனாகிய ஆபுத்திரனோடு சென்று உயர்ந்த மணி பல்லவத் தீவினகட் புகுந்ததும்; உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியின் பொருந்திய வண்ணமும் - மணி பல்லவத்தை எய்திய மணிமேகலை அவ்வாசனை அவனாட்டிற்குப் போக்கி அப்பால் அத் தீவினின்றும் ஓர் உயரிய தவவொழுக்க முடைய துறவோன் வடிவத்தை மேற்கொண்டு அழகிய கொடியுயர்த்தப் பட்ட வஞ்சிமா நகரத்தே வந்துற்ற செய்தியும்; நவை அறுநன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும் அவ் வஞ்சிமா நகரத்திலே அம்மாதவன் வடிவத்தோடே சென்று, பிறப்புப்பிணி அறுதற் கியன்ற நன்மை தருகின்ற நுமது தத்து வங்களைக் கூறுங்கோள்! என்று பல்வேறு சமயத் தலைவர்களையும் தனித்தனியே கண்டு வினவி, அவ்வவர் சமயங்கட்கியன்ற தத்துவங்களை யெல்லாம் கேட்டறிந்ததும் என்க. (விளக்கம்) அறை கழல்: வினைத்தொகை. சிறைவீடு. சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்தல். நறுமலர்க் கோதை: கோப் பெருந்தேவி. ஆய்வளை: மணிமேகலை. அவன் நாடு - ஆபுத்திரன் மறுபிறப்பில் அரசனாகி ஆட்சி செய்கின்ற நாடு. அஃதாவது சாவகநாடு. பொற்கொடி வஞ்சி - அழகிய கொடியுயர்த்திய வஞ்சிநகரம் என்க. வெளிபடை. நவை - பிறவிப்பணி. நன்பொருள் - தத்துவம். சமயக் கணக்கர் - சமய முதல்வர். இதுவுமது 89-98: ஆங்க ......வைத்தான் (இதன் பொருள்) ஆங்கு அத்தாயரோடு அறவணர்த் தேர்ந்து - அவ் விடத்திலே தன் தாயராகிய மாதவியையும் சுதமதியையும் நல்லாசிரியராகிய அறவணடிகளாரையும் கண்டு அடிவணங்க விரும்பியும்; பூங்கொடிகச்சி மாநகர் புக்கதும் - மணிமேகலை ஆங்குத் துறவியாயிருந்த மாசாத்துவான் வேண்டுகோட் கிணங்கியும் வானத்தே இயங்கிக் காஞ்சிமா நகரத்தே சென்று புகுந்ததும்; புக்கவன் கொண்ட பொய்யுருக் களைந்து - காஞ்சியிற் புகுத்தவள் தான் மேற்கொண்டிருந்த மாதவன் வடிவத்தைத் துறந்து; மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் - தான் காணவிரும்பிய தாயாரும் அடிகளாரும் தன்னைத்தேடி வந்தவரைக் கண்டு மகிழ்ந்து அவரடிகளிலே வீழ்ந்து வணங்கிய வண்ணமும்; தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு - தவக்கோலம் பூண்டு அறவணவடிகளார்பால் பௌத்த தருமங்களைக் கேட்டுணர்ந்தும்; பாவை பவத்திறம் அறுகென நோற்றதும்; மணிமேகலை தருமங் கேட்ட பின்னர்ப் பிறப்பிற்குக் காரணமாக பழவினைத் தொகுத்து துவரங் கெடுவதாக என்னும் குறிக்கோளோடு பொருளகளின்பால் பற்றறுதற்குரிய நெறியில் அதற்கியன்ற நோன்புகளைக் கடைபிடித் தொழுகியதும் ஆகிய இவற்றை யெல்லாம்; இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - இளங்கோ வடிகளார் என்னும் சேரமுனிவன் தலைமை வீற்றிருந்தருளி விரும்பிக் கேளாநிற்ப; வளம்கெழு கூல வாணிகன் சாத்தன் - வளம் பொருந்திய மதுரைக் கூல வாணிகனாகிய தண்டமிழ்ப் புலவன்; ஆறு ஐம் பாட்டினுள் -முப்பது காதைகளிலே அரங்கேற்றி; மணிமேகலை துறவு மாவண் தமிழ்த் திறம் அறிய வைத்தனன்.- மணிமேகலை துறவு என்னும் இத் தொடர்நிலைச்செய்யுளா லியன்ற மணிமேகலை துறவு என்னும் பெயரையுடைய இவ் வனப்பியல் நூல் வாயிலாக எழுத்து வளமும் சொல்வளமும் பொருள்வளமும் ஆகிய வளம் பலவும் பெற்றுச் சிறந்துள்ளமையாலே பெருவளமுடைய மொழியாக விளங்குகின்ற நந்தமிழ் மொழியானது சிறப்பினை உலகுள்ள துணையும் மக்கள் அறியும்படி மாபெருங் காப்பியமாக இயற்றி நிறுவினன் என்பதாம். (விளக்கம்) பொய்யுரு -வேற்றுருவம். இளங்கோ வேந்தன் என்றது இளங்கோவடிகளாரை. இளங்கோ என்ற பின்னரும் வேந்தன் என்று வேண்டாது கூறியது, அவர் தாமும் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தம் இல் அரசாள் வேந்தாக இருத்தலைக் கருதிக் காணுமாறு தாம் வேண்டிய தொன்றனை முடித்தற் பொருட்டென்க. கண்ணகித் தெய்வமே அவரை இளங்கோ வேந்தனாகவே கண்டு பாராட்டியதனை(சிலப், வர - 180 -3 சிலப்பதிகாரத்தில் காண்க. மணிமேகலை துறவு என்பதே இக் காப்பியத்திற்கு ஆசிரியரிட்ட பெயர் என்பதனை இப் பதிகத்தால் அறியலாம். இவ்வாறே நீலகேசித் தெருட்டு என அதன் ஆசிரியர் இட்ட பெயர் இறுதிச்சொல் மறைந்து நீலகேசி என்று வழங்கிவருவதும் நினைக. கூலவாணிகன் சாத்தனார் கொள்கை பௌத்த தருமத்தை மக்கள் அறியவைத்தலே யாகும். ஆயினும் அவருடைய கருத்து நிறைவேறிற்றில்லை. மற்று மணிமேகலையால் எய்திய பயன், மானண் தமிழ்த் திறமே யாய் முடிந்தது. அத் தமிழ்த்திறம் பற்றியே இந்நூல் தமிழகத்தே தமிழ் மொழி நிற்கும் அளவும் நின்று நிலவும் ஆற்றில் பெற்றுத் திகழ்கின்றது என்பதில் ஏதும் ஐயமில்லை. இப் பாயிரம்(பதிகம்) பிறராற் செய்யப்பட்டது. சாத்தன் என ஆசிரியரைப் படர்க்கையாகப் பேசுவதே இதற்குச் சான்று. இனி இப் பாயிரத்தில் ஆக்கியோன் பெயர் சாத்தன் என்பதனாலும் வண்டமிழ்த்திறம் என்றதனால் அதற்கியன்ற எல்லையே இதற்கும் எல்லை என்பதும் போந்தன. முதனூலாகலின் வழிகூற வேண்டாவாயிற்று. மணிமேகலை துறவு என்பதும் நூற்பெயர். காலம் களம் காரணம் என்னும் பாயிரவுறுப் புக்கள் பலவும் அமைந்துள்ளமையும் அறிக. பதிகம் முற்றிற்று.

Advertisement
 
Advertisement