Advertisement

தர்மபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பகோணத்ததை அடுத்த பழையாறை வடதளியில் விமலநாயகி உடனாய தர்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமிமலை முருகன் கோவிலின் இணை கோவிலான, இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும்அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களின் தலைநகரமாக திகழந்த பழையாறையில் 63 நாயன்மார்களில் ஒருவரானன அமர்நீதி நாயன்மார் பிறந்து வாழந்து வணிகம் செய்த பகுதியாகும். பழையாறை நகரில் 19 கோவில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பழையாறை நகரின் நான்கு திசைகளிலும் அமைந்தவையாக திகழும், நான்கு கோவில்கள் வரிசையில் மேற்றிசையில் அமைந்த கோவில் திருமேற்றளியாகும். கீழ்திசையில் அமைந்த கீழ்தளி கீழப்பழையாறை சோமநாதர் கோவிலாகும்.முழையூர் என்ற சிற்றூர் பழையாறை நகரின் ஒரு பகுதியாகும். இங்கு மேற்கு நோக்கி வண்ணம் அடுத்தடுத்து இரு சிவாலயங்கள் உள்ளன. வடபுறம் உள்ளது வட வடதளி தர்மபுரீஸ்வரர் கோவில், தென்புறம் உள்ளது பரசுநாதர் கோவில் என்ற தென்தளியாகும். இக்கோவில் மிகவும் பழமையாகி கோவிலின் சிதையத் துவங்கியது. இந்நிலையில் சிவனடியார்களின் பக்தர்களும், திருச்சியில் உள்ள தாயுமானவர் உழவார நற்பணி மன்றம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில், அறநிலையத்துறையின் 12வது நிதிக்குழுவின் நிதி ஆகியவற்றின் நிதி உதவியுடன் சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. பின் கடந்த சில தினங்களுக்கு முன் நான்குகால யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலை பூஜைகள் நிறைவு பெற்று, கடங்கள் வந்தடைந்தன. பின்னர் காலை சரியாக 8.07 மணிக்கு கும்பாபிஷேகமும், பின்னர் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளான துணை கமிஷனர்கள் தென்னரசு,மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பர் சாமிகள் இக்கோவிலில் உண்ணாநோன்பு இருந்ததன் நினைவாக தாயுமானவர் சுவாமிகளின் அறக்கட்டளை சார்பாக சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement