Advertisement

பள்ளத்தில் வேதபுரீஸ்வரர் கோவில்:சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாட்டு மந்தை மேம்பால பணியால், 8 அடி பள்ளத்திற்கு போன, வேதபுரீஸ்வரர் கோவிலை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருவொற்றியூர், மாட்டு மந்தை மேம்பாலம் அருகே, வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படும் இக்கோவிலுக்கு, சுற்றுவட்டாரத்தில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாட்டுமந்தை மேம்பால பணிக்காக, கோவிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று, கோவிலின் முன்புறம் உள்ள கட்டுமானத்தை மட்டும் இடித்துவிட்டு, கோவிலின் வெளியே 3 அடி இடம் விடப்பட்டுள்ளது. பாலப் பணிக்காக, அப்பகுதியில் மணல் கொட்டி மேடாக்கப்பட்ட நிலையில், கோவில் எட்டடி பள்ளத்திற்கு போய் விட்டது.

பக்தர்கள் ஏணி போட்டு இறங்கி, கோவிலுக்குள் சென்று வருகின்றனர். 3 அடி மட்டுமே இருப்பதால், கோவிலின் முன்பக்கம் ஏணி போட்டு ஏறி இறங்குவது பெரும் சிரமமாக உள்ளது. பள்ளத்தில் உள்ள கோவிலில், பாதுகாப்பு வசதியில்லாததால், சமீபத்தில், அம்மன் கழுத்தில் இருந்த, 2 சவரன் பொட்டு திருடப்பட்டுஉள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில், கோவிலை நிர்வகித்து வருபவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள், கோவிலை மேடேற்றி சீரமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement
 
Advertisement