Advertisement

சபரிமலை கோவிலில் சேதமடைந்த தங்க கொடிமரம் உடனடியாக சீரமைப்பு

சபரிமலை: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க கொடி மரத்தில் ஏற்பட்ட சேதம், சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தேக்கு மரத்தாலான, 9.16 கிலோ தங்கம், 300 கிலோ செம்பு, 17 கிலோ வெள்ளி கலந்த தங்கக் கவசத்துடன், புதிய கொடி மரம், நேற்று முன்தினம் காலை நிர்மாணிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், இந்த கொடிமரத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. சில ரசாயன பொருட்கள் கலந்த பாதரசம் மூலம், கொடிமரம் சேதபடுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளதாக, கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், பரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம் சேதமடைந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, ஆந்திராவைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். தங்கள் பகுதியில், சில ரசாயனங்களும், பாதரசமும் கலந்து, கோவிலின் கொடிமரத்தில் தெளிக்கும் பழக்கம் உள்ளதாகவும், அதுபோலவே, இங்கு செய்ததாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இது குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரவுக்கு முன்பாகவே, சேதமடைந்த கொடிமரம் பழுதுபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மலைக் கோவிலின் கீழ் பகுதியான நிலக்கல் பகுதியில் இருந்து, சன்னிதானம் வரை, கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர் பினராயி விஜயன், தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
 
Advertisement