Advertisement

கதித்த மலைக்கு எதிர்த்த மலை இல்லை

ஈரோடு:அம்மையப்பரிடம் ஞானப்பழம் பெற, உலகை வலம் வந்த முருகன், அது கிடைக்காததால் கோபமடைந்து, பழனி மலைக்கு செல்கிறார்; வழியில், ஊத்துக்குளி அருகேயுள்ள கதித்த மலைக்கும், அப்போது வந்துள்ளார். இங்கு வந்த முருகன் மீது, கதிரவனின் ஒளிபட்டு பிரகாசித்து, கதிர் உதித்தது; இதனால், கதிர்மலை என அழைக்கப்பட்டு, நாளடைவில், கதித்தமலையானதாக கூறப்படுகிறது. குன்று இருக்குமிட மெல்லாமல், குமரன் இருப்பான் என்பதால், அகத்திய முனி, முருகனை தரிசிக்க, தேவர்களுடன் இங்கு வந்தார். முருகனை பூஜிக்கவோ, குடிக்கவோ தண்ணீரில்லை, அகத்திய முனி, முருகனை வேண்டினார்; தனது ஆயுதத்தால், மலையை கீறிய முருகன், அதிலிருந்து தண்ணீரை வரவழைத்தார்.

பல நூறு அடி உயரத்தில் இருக்கும் மலையில், வற்றாத ஊற்றாக, இன்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், கதித்தமலை உள்ள பகுதியை, ஊற்றுக்குளி என்றனர்; அப்பெயர் மருவி, ஊத்துக்குளியானது. அகத்தியரால் பூஜிக்கப்பட்டதும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சிறப்பை கொண்டது, இத்திருத்தலம். மலரணி கொண்ட செருக்கிலே... பதியினில் மங்கை கதித்தமலை என, இம்மலை குறித்து, அருணகிரிநாதர் பாடியுள்ளார். கதித்தமலைக்கு எதிர்த்த மலை என்ற சொல்லாடல் உண்டு. அக்னி மூலையில் சென்னிமலை, அதன் மற்றொரு புறம் சிவன்மலை இருக்கிறது. ஆனால், கதித்தமலைக்கு எதிரே மலையில்லை. பல ஆயிரம் ஆண்டு பழமையான இவ்வாலயத்தில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்திலும் சிறப்புற்று உள்ளது. மூலவராக, தண்டாயுதபாணி எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவருக்காக ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கொடிமரம், வசந்த மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அற்புதமான, வேலைப்பாடுகளுடன் கூடிய கற்கோவிலாக இது விளங்குகிறது. இக்கோவிலில், 20 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரகார மண்டபம் கட்டப்பட்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டு, கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது. யாக சாலைகளில், சிறப்பானதாக கருதப்படுவது, உத்தமபக்ஷ யாகசாலை. இக்கோவில் கும்பாபிஷேகத்துக்காக, 57 குண்டங்கள், 6 வேதிகையுடன் அமைக்கப்படுகிறது.

Advertisement
 
Advertisement