Advertisement

மலைப்பாதை திறக்கப்பட்டது: சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா துவக்கம்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா இன்று மாலை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுடன் கோலாகலமாக துவங்குகிறது. இதையொட்டி நேற்று முதல் மலைப்பாதை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருகையும் அதிகரிக்க துவங்கியது. மதுரை மாவட்டம் சதுரகிரி மலையில் ,சுந்தரமகாலிகங்கசுவாமி, சந்தன மகாலிகங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி,, கோயில் எல்லையில் பலாஅடி கருப்பசாமி கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் ஆடி அமாவாசை மிக முக்கியமான திருவிழாவாகும். இவ்விழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சாதுக்கள், சிவபக்தர்கள் லட்கணக்கில் வந்து குவிந்து மலையில் கூடாரம் அமைத்து ஓரிரு நாட்கள் தங்கி வழிபட்டு செல்வார்கள்.

பூஜைகள் துவக்கம் : மலையேற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள வயல்கள், தோப்புகளில் முகாமிட்டு மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் வழங்கி அடிவாரத்தில் உள்ள கருப்பசுவாமி கோயிலில் வழிபட்டு ஊர் திரும்புவர். இதனால் மலையில் மட்டுமின்றி, அடிவாரப்பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும்.பல்வேறு சிறப்புகள் கொண்ட இவ்விழா இன்று மாலை 4 :00 மணிக்கு சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி கோயில்களிலும் வழிபாடு நடக்கிறது. பின்னர் மூன்று கோயில்களிலும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் கொண்ட அமாவாசை பூஜைகள் துவங்குகின்றன.

மீட்பு படையினர் : இவ்விழாவிற்காக நேற்று முதல் மலைப்பாதை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகையும் துவங்கியது. அடிவாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கம்புகள் வைத்து ’கியூ ’ அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மருத்துவம், வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் அடிவாரம், மலையிலும் முகாமிட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு மீட்பு படையினர் மூன்று இடங்களில் முகாமிட்டுள்ளனர்.

பக்தர்களுக்கு வேண்டுகோள் : மலையிலும், மலைப்பாதையிலும் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் ,குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன. பக்தர்கள் கூடுமானவரை தாங்களுக்கு தேவையான குடிநீரை தாங்களே கொண்டு செல்வது நல்லது.

Advertisement
 
Advertisement