Advertisement

கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில் ஆக.15 ல் மருந்து பொங்கல் நிகழ்ச்சி

கோட்டயம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில், மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி, ஆக.,15 ல் நடக்கிறது.எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 39 கி.மீ., துாரத்தில், கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டுமனாவில் அமைந்துள்ளது, பகவதி கோயில். கேரளாவின், மிகப்பழமையான கோயில்களில் ஒன்றான இங்கு, ஆடி மாதத்தில் அம்மனின் பிரசாதமாக, விசேஷமாக தயாரான மருந்து வழங்கப்படுகிறது.

பண்டைய மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு, அம்மன் முன்பு, மந்திரங்கள் முழங்க தயாராக்கப்படும் இந்த மருந்து பிரசாதம், நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.ஆகஸ்ட் 16 வரை, தினமும் காலை 6:30 முதல் காலை 11:30 வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். இங்கு, மருத்துவ கடவுள் எனப்படும் தன்வந்திரிக்கு தனிக்கோயில் உள்ளது. தினமும், காலை 6:30 முதல் 9:30 வரை தன்வந்திரி ஹோமமும், மாலை 6:00 முதல் இரவு 7:30 வரை நோய்தீர்க்கும் பூஜையும் நடக்கிறது.வரும் 15 ம் தேதி காலை 9:00 மணிக்கு மருந்து பிரசாதத்தை பயன்படுத்தி, பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, அம்மனை வழிபடுகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண்மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி, கோயில் நிர்வாகி ஹரிநம்பூதிரி செய்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு 94460 35100ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Advertisement