Advertisement

இருக்கன்குடி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

சாத்துார், தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி வெள்ளி விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா ஆகஸ்ட் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையொட்டி ரிஷபவாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருள கே.மேட்டுப்பட்டி கிராம மக்கள் அம்மனை வீதி உலா அழைத்து வந்தனர். அப்பனேரி கிராமத்தினர் நகரா ஒலி எழுப்ப, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை, கயிறுகுத்தி, பொங்கல் என நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விருதுநகர், துாத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Advertisement
 
Advertisement