Advertisement

கடல் பாறைகளால் ஆன தூண் சிற்பங்கள்: திருப்புல்லாணி கோயிலில் அற்புதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில், கடல் பாறைகளால் உருவாக்கப்பட்ட, விஜயநகர மன்னர் கால அரிய வகை துாண் சிற்பங்களை, அரசுப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மலை இல்லாத நிலையில், கடல் பாறைகளை எடுத்து கோயில்களில் பயன்படுத்தியுள்ளனர். பாண்டியர்கள், விஜயநகர, நாயக்க மன்னர்கள், சேதுபதிகள் ஆகியோரது காலங்களில் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, மாரியூர், சாயல்குடி உள்ளிட்ட கோயில்கள் வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கடல் பாறைகளை கொண்டே கட்டப்பட்டுள்ளன. சான்றாக வாலிநோக்கம் கடற்கரையில், பெரிய அளவிலான பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை இன்றும் காண முடியும்.

துாண் சிற்பங்கள் : திருப்புல்லாணி கோயிலில் உள்ள துாண் சிற்பங்கள் குறித்து, திருப்புல்லாணி சுரேஷ்சுதா அழகன் நினைவு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் அபர்ணா, விசாலி,ராஜபாண்டியன், ராஜ்கண்ணா, ஆகியோர் மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ள கடல் பாறைகளால் ஆன துாண் சிற்பங்கள். மிக நுட்பமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ள பட்டாபிஷேக ராமர் ஆலய நுழைவு வாயில் துாண்களில் உள்ள பெரிய அளவிலான யாளிகள், ராமர், லட்சுமணன் சிற்பங்களை தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டறிந்தனர்.

தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு தெரிவித்ததாவது: பட்டாபிஷேக ராமர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள துாணில், குதிரையில் வாளை ஏந்திய நிலையில் செல்லும் பெண், சன்னதி கருவறையின் நுழைவு வாயிலில் உள்ள துாண்களில் யானையில் மேல் தனித்தனியாக அமர்ந்த ஆண், பெண் உருவங்கள் உள்ளன. இவர்கள் விஜயநகர அல்லது நாயக்க மன்னர், அரசியாக இருக்கலாம்.பட்டாபிஷேக ராமர் சன்னதி நுழைவு வாயில், துாணின் பின்புறம் வலது காலை துாக்கி தவம் செய்யும் முனிவர், அவர் காலின் கீழ் வராகம்(பன்றி) உள்ள சிற்பம் காணப்படுகிறது.வராகம் விஜயநகர மன்னர்களின் சின்னம் ஆகும். முன்மண்டபத்தில் உள்ள துாணில் ஒரு தலை, இரு உடல் கொண்ட நாய் சிற்பத்தில், கையை வைத்து ஒரு உடல் பகுதியை மறைப்பதன் மூலம் இரு வகையான நாய் உருவங்களை உருவாக்க முடியும். சதுர வடிவான 2 தலை, 4 உடல்கள் கொண்ட மான் சிற்பத்தில், இருந்து நான்கு மான்களை காண முடியும். இதுதவிர தலைச்சுமையுடன் இருக்கும் குரங்கு, அன்னம், கருடன், மயில், யானைகள், ஆடல் மகளிர், காலிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன், மச்ச அவதார கிருஷ்ண அவதாரங்களை சித்தரிக்கும் சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள சில சிற்பங்கள், கர்நாடக மாநிலம், ஹம்பியில் உள்ளதைப்போல் காணப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement