Advertisement

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் கடும் அவதி

திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்படிகளில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், முக்கிய விழாக்களின் போது பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். குறிப்பாக, ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, டிச.,31ல் திருப்படித் திருவிழா, மாதந்தோறும் வரும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை வழிப்படுவர்.

பெரும்பாலான பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம் என்கிற சரவணபொய்கையில் புனித நீராடிய, பின், மலைப்படிகள் வழியாக கோவிலுக்கு நடந்து செல்கின்றனர். மலைப்படிகளில் இருபுறமும், 150க்கும் மேற்பட்டோர் கற்பூரம், பஞ்சாமிர்தம்,தேங்காய், பொறி, பூஜைகள் பொருட்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகள் கடைகள் வைத்து விற்பனை செய்கின்றனர். கடைக்காரர்கள் படிகளில் முக்கால் பங்கிற்கு ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் படிகளில் நடந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, ஆடிக்கிருத்திகை, படித்திருவிழா ஆகிய நாட்களில் பக்தர்கள் மலைப்படிகளில் செல்லும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு, திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் அதிகளவில் நடக்கிறது. எனவே, மலைப்படிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
 
Advertisement